வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha
Last Updated : திங்கள், 10 பிப்ரவரி 2020 (11:38 IST)

ஆஸ்திரேலியாவில் 30 ஆண்டுகளில் இல்லாத கனமழை: காட்டுத் தீ பிரச்சனைக்கு முடிவு

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதி தீவிர மழை பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளிலேயே முடங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டப்பட்டுள்ளனர்.
 
சிட்னி நகரில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் 391.5 மில்லிமீட்டர் மழை பொழிந்துள்ளதை அடுத்து, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய வெள்ளம் ஏற்படக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
அதி தீவிர மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சிட்னி நகரத்தில் இன்று (திங்கட்கிழமை) மக்கள் பயணத்தை தவிர்க்குமாறும், வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்குமாறும் அவசரகால உதவி குழுக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
 
இது தவிர, சிட்னி மற்றும் அதனை சுற்றிலுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
 
இந்த தீவிர மழையால் ஏற்பட்ட பிரச்சனைகள் ஒருபுறமிருக்க, சமீப மாதங்களாக நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் பரவிய காட்டுத்தீ இதன் மூலம் முடிவுக்கு வந்திருப்பது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
எனினும், காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகள் வெள்ளத்தால் மிகவும் எளிதாக பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும், வேகமாக நகரும் வெள்ளம் அதிக அளவிலான குப்பைகளை அடித்து வரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.