திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 11 ஜனவரி 2021 (23:11 IST)

ஹனும விஹாரி - அஷ்வின்: "கவலைப்படாம ஆடு மாமா" தமிழில் களமாடிய வீரர்கள்

போட்டியின் ஐந்தாவது மற்றும் கடைசி நாளான இன்று (ஜனவரி 11) விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தங்கள் விக்கெட்டுகளை இழந்திருந்த போதிலும், நடுவரிசை ஆட்டக்காரர்களின் சிறப்பான ஆட்டத்தால் இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி அடையாமல் டிரா செய்திருக்கிறது.
 
எப்படி டிரா செய்தது?
ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 338 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. ஸ்டீவ் ஸ்மித் 226 பந்துகளில் 131 ரன்களையும், மார்னஸ் 196 பந்துகளில் 91 ரன்களையும் குவித்து ஆஸ்திரேலியாவை வலுவான நிலையில் நிறுத்தினார்கள்.
 
ஜடேஜா நான்கு விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் சைனி தலா இரு விக்கெட்டுகளையும், சிராஜ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
 
இந்தியா முதல் இன்னிங்ஸில் 244 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சுப்மன் கில், புஜாரா ஆகியோர் தலா 50 ரன்களை எடுத்தார்கள், ரிஷப் பண்ட் 36 ரன்களை குவித்தார். இருப்பினும் முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலியா 94 ரன்கள் முன்னிலை வகித்தது.
 
கம்மின்ஸ் நான்கு விக்கெட்டுகளையும்,ஹேசல்வுட் இரு விக்கெட்டுகளையும், ஸ்டார்க் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
 
ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் 312 ரன்களைக் குவித்தார்கள். இந்த முறையும் மார்னஸ் (73 ரன்கள்), ஸ்மித் (81 ரன்கள்) மீண்டும் அதிரடி காட்டினார்கள். இவர்களோடு கேமரூன் க்ரீன் அடித்த 84 ரன்களும் இணைய ஆஸ்திரேலியா ஆறு விக்கெட்டு இழப்பிற்கு 312 ரன்களைக் குவித்து டிக்ளேர் செய்தது.
 
அஸ்வின், சைனி ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் சிராஜ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.
 
நான்காவது நாளிலேயே பேட்டிங் செய்யத் தொடங்கிய இந்தியா, அன்றைய நாளின் முடிவில் 98 ரன்களுக்கு இரு விக்கெட்டுகளை இழந்திருந்தது. ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் தங்கள் விக்கெட்டை நான்காம் நாளிலேயே இழந்துவிட்டார்கள். இந்திய அணி இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்து விளையாடியது.
 
புஜாரா மற்றும் ரஹானே இணை இன்று விளையாடத் தொடங்கிய நிலையில், லயோன் வீசிய 36-வது ஓவரில் வெறும் நான்கு ரன்களை எடுத்து தன் விக்கெட்டை இழந்தார் அஜிங்க்யா ரஹானே. அப்போது இந்தியாவின் ஸ்கோர் 102-க்கு மூன்று விக்கெட்டுகளாக இருந்தது.
 
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பண்ட், ஒரு பக்கம் தன் விக்கெட்டை இழக்காமல், நிதானமாக அதிரடி காட்டி 118 பந்துகளுக்கு 97 ரன்களைக் குவித்த நிலையில், லயோன் வீசிய 80-வது ஓவரில் தன் விக்கெட்டைப் பறிகொடுத்தார். அப்போது இந்தியா 250 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது. இந்த போட்டியை இந்தியா டிரா செய்ய, பண்ட் எதிர் கொண்ட பந்துகளும் அடித்த ரன்களும் முக்கியமானவை எனலாம்.
 
அவரைத் தொடர்ந்து, அதுவரை நிதானமாக ஆடி வந்த புஜாரா 77 ரன்களைக் குவித்திருந்தபோது, ஹேசில்வுட் வீசிய 89-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அந்த சமயத்தில், இந்திய அணி 272 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்திருந்தது. இந்த இன்னிங்ஸிலேயே அதிக பந்துகளை எதிர்கொண்ட இந்திய வீரர் புஜாரா தான். மொத்தம் 205 பந்துகளை அவர் எதிர்கொண்டார்.
 
ஹனும விஹாரி மற்றும் அஸ்வின் இணை விக்கெட்டை விட்டுக் கொடுக்காமல் நங்கூரமிட்டு நின்றுவிட்டது. இந்த ஜோடி 289 பந்துகளை எதிர்கொண்டு 62 ரன்களை எடுக்க, போட்டி டிராவில் முடிவடைந்தது.
 
ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட், லயோன் ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.
 
முன்னதாக ஆட்டத்தின்போது ஹனும விஹாரியிடம், "கவலைப்படாம ஆடு மாமா, ஆடு. பத்து பத்து பாலா போவோம். நாப்பது பால் தான் மொத்தம்," என்று அஸ்வின் தமிழில் பேசிய குரல், சோனி டென் ஒன் தொலைக்காட்சி நேரலை வர்ணனையின்போது கேட்டது. இந்த காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
 
இதற்கு முன் நடந்த இரு டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா முதல் டெஸ்டிலும், இந்தியா இரண்டாவது டெஸ்டிலும் வெற்றி பெற்றிருந்தது. மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது டிரா ஆகியிருப்பதால், ஜனவரி 15-ம் தேதி தொடங்கவுள்ள நான்காவது டெஸ்ட் போட்டி முக்கியத்துவம் பெறுகிறது.