திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 4 ஜனவரி 2021 (13:32 IST)

அமெரிக்க அதிபர் தேர்தல்: முடிவுகளை மாற்றுமாறு அதிகாரியை மிரட்டினாரா டிரம்ப்? - ரகசிய ஒலிப்பதிவு வெளியானதால் அதிர்ச்சி

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஜார்ஜியா மாகாணத்தின் உயர் தேர்தல் அதிகாரியிடம் தேர்தல் முடிவை மாற்ற தேவையான வாக்குகளை "கண்டுபிடிக்க" கூறியதாக சொல்லப்படும் ஒலிப்பதிவு ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"நான் வெறும் 11,780 வாக்குகளைப் பெற விரும்புகிறேன்" என்று அதிபர் டிரம்ப் குடியரசுக் கட்சியை சேர்ந்த ஜார்ஜியா மாகாண செயலாளர் பிராட் ராஃபென்ஸ்பெர்கரிடம் கூறுவதாக வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள ஒலிப்பதிவில் பதிவாகி உள்ளது.

அதற்கு ராஃபென்ஸ்பெர்கர், ஜார்ஜியா மாகாணத்தின் தேர்தல் முடிவுகள் சரியானவை என்று பதிலளிப்பதாக அதில் உள்ளது.

மற்ற வெற்றியை தீர்மானிக்கும் மாகாணங்களுடன் ஜார்ஜியாவிலும் வெற்றிபெற்ற ஜனநாயக கட்சியை ஜோ பைடன், 74 தேர்தல் சபை வாக்குகளை அதிகம் பெற்று அதிபர் தேர்தலில் டிரம்பை தோற்கடித்திருந்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நடந்த கடந்த நவம்பர் 3ஆம் தேதி முதல், அதில் பெரியளவில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டி வரும் டிரம்ப், அதற்குரிய எவ்வித ஆதாரத்தையும் இதுவரை அளிக்கவில்லை.

மறுவாக்கு எண்ணிக்கை, சட்டரீதியிலான முறையீடுகளுக்கு பிறகு, அமெரிக்காவின் 50 மாகாண நிர்வாகங்களும் இறுதி தேர்தல் முடிவுகளை ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன. மேலும், பைடனின் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட 60 வழக்குகளை அந்த நாட்டு நீதிமன்றங்கள் நிராகரித்துள்ளன.

இந்த நிலையில், வரும் 6ஆம் தேதி கூடவுள்ள அமெரிக்க நாடாளுமன்றம் தேர்தல் முடிவுகளுக்கு அதிகாரபூர்வமாக ஒப்புதல் அளிக்க உள்ளது.

ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வரும் ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளார்.

அரசியல் களத்தை உலுக்கிய டிரம்பின் ஒலிப்பதிவு

வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ஒலிப்பதிவில், ஜார்ஜியா மாகாண செயலாளருக்கு அதிபர் டிரம்ப் தேர்தல் முடிவுகளை மாற்றி அறிவிக்குமாறு அழுத்தம் கொடுப்பது பதிவாகியுள்ளது.

ஜார்ஜியாவில் நடந்த தேர்தலில் தான் வெற்றி பெற்றதாக தொடர்ந்து குறிப்பிட்டு வந்த டிரம்ப், ஒருகட்டத்தில் ரஃபென்ஸ்பெர்கரிடம், "நீங்கள் மீண்டும் வாக்குகளை கணக்கிட்டீர்கள் என்று சொல்வதில் தவறில்லை" என்று கூறினார்.

அதற்கு ரஃபென்ஸ்பெர்கர், "அதிபரே, இதிலுள்ள சவால் என்னவென்றால், நீங்கள் வைத்திருக்கும் தரவு தவறானது" என்று அவர் பதிலளிப்பதை அதில் கேட்க முடிகிறது.

இதைத்தொடர்ந்து ஜார்ஜியா மாகாணத்தில் பதிவாக வாக்குகளில் முறைகேடு நடந்துள்ளதாக கூறிய டிரம்ப், சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படுமென்று அதிகாரியை எச்சரிக்கிறார்.

"அவர்கள் என்ன செய்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், நீங்கள் அதைப் புகாரளிக்கவில்லை. அது ஒரு கிரிமினல் குற்றம். அதை நீங்கள் அனுமதிக்க முடியாது. இது உங்களுக்கும் உங்கள் வழக்கறிஞரான ரியானுக்கும் ஒரு பெரிய ஆபத்து" என்று டிரம்ப் கூறுவதாக ஒலிப்பதிவு உள்ளது.

அதன் பிறகு, ஜார்ஜியா மாகாணத்தில் தனக்கு கூடுதலாக 11,780 வாக்குகள் தேவைப்படுவதாக டிரம்ப் கூறினார். இதன் மூலம், மொத்தம் 2,473,634 வாக்குகளுடன் அதாவது பைடன் பெற்ற 2,473,633 வாக்குகளை விட ஒரு வாக்கு கூடுதலாக பெற்றிருப்பார்.
மேலும், ஜார்ஜியா மாகாணத்தில் தேர்தல் முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றும் டிரம்ப் அந்த ஒலிப்பதிவில் கூறுகிறார்.

டிரம்பின் தொடர் அழுத்தம் மற்றும் மிரட்டல் தொனியிலான பேச்சுக்கு பதிலளித்த ரஃபென்ஸ்பெர்கர், "உங்களிடம் தகவல்களைச் சமர்ப்பிக்கும் நபர்கள் இருக்கிறார்கள். அதேபோன்று எங்களிடமும் இருக்கிறார்கள். எனவே, இந்த விவகாரம் குறித்து நீதிமன்றமே ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். ஏனெனில், நாங்கள் எங்கள் தரவுகள் சரியானவை என்று உறுதியாக நம்புகிறோம்" என்று பதிலளித்துள்ளார்.

அமெரிக்க அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த ஒலிப்பதிவு குறித்து இதுவரை வெள்ளை மாளிகை கருத்தேதும் தெரிவிக்கவில்லை.