1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala

பிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோஸீக்கு 3 ஆண்டுகள் சிறை - என்ன வழக்கு?

பிரான்ஸ் முன்னாள் அதிபர் நீகோலா சர்கோஸீ மீதான ஊழல் வழக்கில் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி உட்பட மேலும் இருவரை பணியிடை நீக்கம் செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2014ஆம் ஆண்டில் பிரான்ஸ் அதிபர் பதவியை நிறைவு செய்த பிறகு, வேறொரு வழக்கின் தகவலுக்கு உபகாரமாக மதிப்புமிகு வேலை கிடைக்க உதவி செய்வதாக  ஒரு நீதிபதிக்கு லஞ்ச பேரம் பேசியதாக சர்கோஸீ மீது குற்றம்சாட்டப்பட்டது.
 
இந்த வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து, 66 வயதாகும் சர்கோஸீ சிறை தண்டனை பெறும் பிரான்ஸின் முதலாவது முன்னாள் அதிபராகியிருக்கிறார்.
 
இந்த தீர்ப்பை எதிர்த்து சர்கோஸீ சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இந்த மேல்முறையீடு நடைமுறை காரணமாக, அதில் முடிவெடுக்கப்படும்வரை சர்கோஸீ சிறையில் அடைக்கப்படமாட்டார்.
 
சர்ச்சைக்குரிய இந்த வழக்கில் சர்கோஸீக்கு எதிராக நீதிபதி கிறிஸ்டைன் மீ அளித்த தீர்ப்பில், "தான் தவறு செய்கிறோம் என்பதை கன்சர்வேட்டிவ் அரசியல்வாதி  நன்றாகவே அறிந்திருந்தார். அவரது செயல்பாடுகளும் அவரது வழக்கறிஞரின் செயலும் பொதுமக்கள் மத்தியில் நீதித்துறைக்கு களங்கத்தை ஏற்படுத்தி விட்டன,"  என கூறியுள்ளார்.
 
தொழில்முறை ரகசிய காப்பு உறுதிமொழியை மீறி தனது செல்வாக்கை பயன்படுத்தி காரியம் சாதிக்க முற்பட்டது உள்ளிட்ட குற்றங்கள் சர்கோஸீ மீது  சுமத்தப்பட்டிருந்தன.
 
பிரான்ஸ் போருக்குப் பிந்தைய வரலாற்றிலேயே இது மிகவும் சட்டப்பூர்வ திருப்பத்தை தரும் தீர்ப்பாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு ஜேக் ஷிர்ராக் என்ற  சர்கோஸிக்கு முன்பு அதிபராக இருந்த வருக்கு 2011ஆம் ஆண்டில் இரண்டு ஆண்டுகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது இரண்டு ஆண்டுகளுக்கு இடைநிறுத்தப்பட்ட தண்டனையாக இருந்தது. பாரிஸ் நகர மேயர் ஆக ஸேக் ஷிர்ராக் இருந்தபோது, நகர மாநகராட்சியில் வேலைவாய்ப்பு மோசடியில்  ஈடுபட்டதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. ஸேக் ஷிராக் 2019ஆம் ஆண்டில் காலமானார்.
 
ஒருவேளை சர்கோஸீயின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வராமல் போனால், அவர் சிறையில் அடைக்கப்படுவதற்கு  பதிலாக சிறை கைதிகளுக்குரிய மின்னணு டேக் பொருத்தப்பட்ட நிலையில், அவர் வீட்டிலேயே ஓராண்டு சிறையை கழிக்க நேரலாம்.
 
இந்த வழக்கில் சர்கோஸீக்கு எதிரான தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அவரது மனைவி கார்லா ப்ரூனை, "கொஞ்சம் கூட உணர்ச்சியின்றி துன்புறுத்தியிருக்கிறார்கள். எங்களுடைய போராட்டம் தொடரும், விரைவில் உண்மை வெளிவரும்," என கூறியுள்ளார்.
 
யார் இந்த நிகோலா சர்கோஸீ?
 
பிரான்ஸின் அதிபராக 2007ஆம் ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு பதவியில் இருந்தவர் நிகோலா சர்கோஸீ. குடியேறிகளுக்கு எதிரான கடுமையான  கொள்கைகளை வகுத்த அவர், உலகளாவிய நிதி நெருக்கடியால் பிரான்ஸின் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், நாட்டில் சீர்திருத்தம் கொண்டு வர அவர்  வலியுறுத்தினார்.
 
ஆனால், அளவுக்கு அதிகமான புகழ் போதை, எதிலும் தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்தும் துடுக்குத்தனமாக நடவடிக்கை போன்றவற்றால் அவரை "ஆடம்பர அதிபர்"  என அவரை விமர்கர்கள் அழைத்தார்கள்.
 
ஆடம்பர மோதத்தால் விளைந்த பிரச்னைகள்
 
2008ஆம் ஆண்டில் ப்ரூனையுடன் திருமணம் நடந்தபோது, தனது ஆடம்பர அடையாளத்தை சர்கோஸி வெளிப்படுத்தினார். 2012ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில்,  சோஷலிஸவாதியான பிராங்ஸ்வா ஓலாங்கிடம் சர்கோஸீ தோல்வியைத் தழுவினார்.
 
அதன் பிறகு பல்வேறு குற்றவியல் விசாரணைகளால் அவர் இலக்கு வைக்கப்பட்டார்.
 
2017ஆம் ஆண்டில் மீண்டும் அரசியல் உலகில் கவனத்தை பெற்ற அவர், ஆட்சியில் அமர தொடர் முயற்சிகளை மேற்கொண்டபோதும், மத்திய, வலதுசாரி குடியரசு  கட்சி அவருக்குப் பதிலாக வேறொருவரை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்தது.
 
சர்கோஸி மீதான ஊழல் வழக்கு என்ன?
 
2014ஆம் ஆண்டில் சர்கோஸீக்கும் ஹெர்ஸோக் என்பவருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலை காவல்துறை ஒட்டுக்கேட்டது தொடர்பான வழக்கு  நடந்தது. 2007ஆம் ஆண்டில் நடந்த அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, லிலியான் பெட்டன்கோர்ட் என்பவரிடம் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக எழுந்த சர்ச்சை பற்றிய காவல்துறை விசாரணையின் அங்கமாக அந்த தொலைபேசி உரையாடல், புலனாய்வாளர்களால் ஒட்டுக் கேட்கப்பட்டது.
 
அந்த புலனாய்வு தொடர்பான தகவலுக்கு பிரதி உபகாரமாக மதிப்புமிகு வேலை கிடைக்க உதவி செய்வதாக சர்கோஸீ லஞ்ச பேரம் நடத்தியதாக அவரது  வழக்கறிஞர் ஹெஸ்ஸோக், நீதிபதி கில்பெர்ட் அஸிபெர்ட் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
 
ஹெர்ஸோகிடம் பேசிய சர்கோஸீ, "எனக்கு அவர் உதவி செய்தால், அவருக்கு பதவி உயர்வு கிடைக்கச்செய்வேன்," என அவர் பேசியதை கேட்டதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
 
பாலி பிஸ்மித் என்ற ரகசிய பெயரில் பதிவான ரகசிய எண்ணில் இருந்து பேசப்பட்ட இந்த உரையாடலை காவல்துறையினர் பதிவு செய்தனர். அந்த எண் மூலமே தனது வழக்கறிஞருடன் சர்கோஸீ தொடர்பு கொண்டார்.
 
கடந்த திங்கட்கிழமை வழங்கப்பட்ட தீர்ப்பில், சர்கோஸியுடன் சேர்த்து ஹெர்ஸோக், அஸிபெர்ட் ஆகியோருக்கும் நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை  விதித்தது. இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
 
ஆனால், பிரான்ஸ் அரசியலை உற்று நோக்குபவர்கள், சர்கோஸீயின் அரசியல் வாழ்வில் இந்த தண்டனை ஒன்றும் அவருக்கு புதிய அனுபவம் இல்லை என்பதை  அறிவார்கள்.
 
ஏற்கெனவே 2012ஆம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது அளவுக்கு அதிகமாக தேர்தல் செலவினத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அவர் மீதான  விசாரணையை அடுத்த மாதம் சர்கோஸி எதிர்நோக்கியிருக்கிறார்.
 
2007ஆம் ஆண்டில் நடந்த தேர்தலின்போது லிபியாவின் அப்போதைய தலைவர் கடாஃபியிடம் இருந்து தேர்தல் நன்கொடை பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து பிரான்ஸ் நீதித்துறை விசாரித்து வருகிறது.
 
பெட்டன்கோர்ட் வழக்கில் தன் மீதான அனைத்து விசாரணைகளும் அரசியல் உள்நோக்கம் வாய்ந்தவை என சர்கோஸீ கூறியிருந்தார். அதில் அவர் மீதான  குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
 
பிரான்ஸில் அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டி உள்ளது. இந்த நிலையில், தொடர் வழக்குகள், சர்ச்சைகளுக்கு மத்தியிலும் சர்கோஸீ, தான் சார்ந்த இடதுசாரி அரசியல் உலகில் முக்கியத்துவம் வாய்ந்தவராக கருதப்பட்டு வருகிறார்.