வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Updated : புதன், 17 மே 2023 (10:00 IST)

சீனாவின் ஸிபோ நகருக்கு திடீரென படையெடுக்கும் உணவுப் பிரியர்கள் - ஏன் இப்படி?

சீனாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஸிபோ நகரம் சில மாதங்களுக்கு முன்பு வரை ஓர் தொழில் நகரமாகவே அறியப்பட்டு வந்தது. 47 லட்சம் மக்கள்தொகையை கொண்ட இந்நகரம் சுற்றுலா மையமாக அறியப்பட்டதில்லை.
 
ஆனால் ஸிபோவை பூர்விகமாகக் கொண்ட ஜாங், தனது திருமண வைபவத்திற்காக கடந்த மாதம் ஸிபோ சென்றிருந்தார். அப்போது அந்நகரம் சுற்றுலா பயணிகளின் கட்டுக்கடங்காத கூட்டத்தால் நிரம்பி வழிவதைக் கண்டு ஒருகணம் திகைத்துப் போனார்.
 
இதற்கு முன் ஸிபோவுக்கு சென்று வருவது ஒரு பிரச்னையாகவே இருந்ததில்லை என்று கூறினார் ஜாங்.
 
ஆனால் இந்த முறை ஸிபோவுக்கு வர விரும்பிய தனது விருந்தினர்களுக்கு அதிவேக ரயில் டிக்கெட்டுகளை எடுத்துத் தருவது குறித்தோ, இங்கு விடுதி அறைகளை முன்பதிவு செய்வது பற்றியோ தன்னால் உறுதியளிக்க இயலவில்லை.
 
இங்குள்ள பார்பிக்யூவுக்கு சென்று உணவு அருந்துவதும் அவ்வளவு எளிதான விஷயமாக இல்லை என்று பிபிசியிடம் கூறினார் ஜாங்.
 
கொரோனாவுக்கு பிந்தைய எழுச்சி
கொரோனா கட்டுப்பாடுகளை கடந்த ஜனவரி மாதம் சீன அரசு தளர்த்தியதில் இருந்து, ஸிபோ நகரம் சமூக ஊடகங்களில் பேசுப்பொருளாக இருந்து வருகிறது.
 
ஷான்டாங் மாகாணத்தில் அமைந்துள்ள, முன்பு அவ்வளவாக அறியப்படாத ஸிபோவுக்கு, உள்நாட்டைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.
 
பணக்காரர்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களும் சுற்றுலா வந்துச் செல்வதற்கான வாய்ப்பை ஸிபோ நகரம் தந்துள்ளது. இங்குள்ள பார்பிக்யூவில் குறைந்த விலைக்கு (2 யென்) மாமிச வகை உணவுகள் விற்கப்படுவதன் காரணமாக, சுற்றுலா பயணிகள் இந்த நகரை நோக்கி வெகுவாக ஈர்க்கப்பட்டு வருகின்றனர்.
 
மின்னொளியில் ஒளிரும் பார்பிக்யூவில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என மகிழ்ச்சிகரமான மனநிலையில், அங்குள்ள கிரீல்களில் வறுத்தெடுக்கப்படும் உணவு வகைகளை வாடிக்கையாளர்கள் உண்டு மகிழும் புகைப்படங்கள், வீடியோக்கள், சீனாவின் சமூக ஊடகமான சியாஹோங்ஷுவ்வில் காண கிடைக்கிறது.
 
“ஸிபோ பார்பிக்யூவிற்கு தாம் சென்றபோது, அங்கு திறந்தவெளி பாடல் நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது. அங்கிருந்தவர்கள் உணவு அருந்துவதும், பாடுவதும் என்று மகிழ்ச்சியில் திளைந்திருந்தனர்” என்று தமது அனுபவத்தை சமூக வலைத்தளத்தில் அண்மையில் பகிர்ந்திருந்தார் பயனாளி ஒருவர்.
 
பார்பிக்யூ உணவு வகைகள்\
 
 
மாமிச துண்டுகளை காய்கறிகளுடன் கலந்து, மரக்கரியை கொண்டு வறுக்கப்பட்டு தயாரிக்கப்படும் உணவு வகை சீனாவின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் மிகவும் பிரபலம். இந்த உணவு வகை ஸிபோ பார்பிக்யூவில் பரிமாறப்படுகிறது.
 
இங்கு வரும் உள்ளூர்வாசிகள், வெங்காயம் கலந்து தயாரிக்கப்படும் அப்பத்தை விரும்பி உண்கின்றனர்.
 
ஸிபோ நகரில் மட்டும் 1,270-க்கும் மேற்பட்ட பார்பிக்யூ கிளைகள் இருப்பதாக, ஸிபோ பார்பிக்யூ சங்கத்தின் தலைவர் பெருமையுடன் கூறுகிறார். சீன நகரமான ஸிபோவை “பார்பிக்யூவின் தலைநகரம்” என்று சில ஆன்லைன் வர்த்தகர்கள் வர்ணிக்கின்றனர்.
 
சீனாவின் பிரபல சமூக வலைத்தளங்களான வெய்போ, சியாஹோங்ஷுவ் ஆகியவற்றில் கடந்த மார்ச் மாதம் முதல் ஸிபோ பார்பிக்யூ பேசுபொருளாக இருந்து வருகிறது.
அந்த மாதத்தில், ஸிபோ நகருக்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்திருந்தது. ஏப்ரல் 29 ஆம் தேதி, ஸிபோ ரயில் நிலையம் மொத்தம் 87 ஆயிரம் பயணங்களை கண்டு சாதனை படைத்தது என்று சீனாவின் இணையத்தள செய்தி நிறுவனமான கெய்க்சின் செய்தி வெளியிட்டிருந்தது.
 
மே மாதம் முதல் வாரம், கோல்டன் வீக் விடுமுறையாக சீனாவில் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நாட்களில், தேசிய அளவில் ஹோட்டல் அறைகள் நிரம்பி வழியும் நகரங்களில் ஒன்றாக ஸிபோ திகழ்ந்தது.
 
இந்த குறிப்பிட்ட வாரத்தில், நாடு முழுவதும் மொத்தம் 274 மில்லியன் சுற்றுலா பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சீன சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை கொரோனாவுக்கு முந்தைய, 2019 இல் இருந்ததை விட கிட்டதட்ட 20 சதவிகிதம் அதிகம் என்று அமைச்சகம் கூறியுள்ளது.
 
பார்பிக்யூவுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு வர்த்தக நோக்கில் பல்வேறு வசதிகளை செய்து தருகின்றனர் ஸிபோ உள்ளூர்வாசிகள். நேரலையில் இசை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தப்படி, ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேர் உண்டு மகிழும்படியான பிரமாண்ட பார்பிக்யூ அரங்கம் அங்கு ஒரே இரவில் கட்டமைக்கப்பட்டது.
 
ஸிபோ பார்பிக்யூவுக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்ல வசதியாக சிறப்பு பேருந்து, ரயில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சுற்றுலாவாசிகள் கண்டுகளிக்க வசதியாக, ஸிபோவில் உள்ள அருங்காட்சியகங்கள் திறந்திருக்கும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
சுற்றுலாப் பயணிகளின் தேவையை பயன்படுத்தி, அறை வாடகையை 50 சதவீதத்துக்கும் மேல் உயர்த்தும் ஹோட்டல் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சீன அரசு எச்சரித்துள்ளது சுற்றுலா பயணிகளை அகமகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
 
ஸிபோ நகரத்து மக்கள் சுற்றுலா பயணிகளுடன் மிகவும் நட்பு பாராட்டுவதாகவும், தங்களின் நேர்மையான நடவடிக்கையால் அவர்களை கொல்பவர்களாக இருப்பதாகவும் பெருமிதத்துடன் கூறுகிறார் ஸிபோவை சேர்ந்த, பெயர் வெளியிட விரும்பாத பல்கலைக்கழக மாணவர் ஒருவர்.
 
ஸிபோவில் பல்வேறு பொருட்கள் குறைந்த விலைக்கு விற்கப்படுவதால் இந்நகரம் சுற்றுலா பயணிகளின் விருப்பமான இடமாக இருப்பதாகவும், அரசாங்கமும் அவர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து கொடுத்துள்ளதாகவும் கூறினார் அந்த மாணவர்.
 
ஸிபோ திடீரென பிரபலமானது எப்படி?
 
ஸிபோ நகரம் குறுகிய காலத்தில் திடீரென பிரபலமானது குறித்து பவ்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன.
 
ஓராண்டுக்கு முன், பிற நகரங்களில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள், ஸிபோவுக்கு அழைத்து வரப்பட்டு அங்கு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
 
கோரன்டைன் காலம் முடிந்து அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கு முன், அதிகாரிகள் அவர்களை பார்பிக்யூக்கு அழைத்துச் சென்று விருந்தளித்து உபசரித்தனர். மீண்டும் இங்கு வருகை தர வேண்டும் என்று மாணவர்களுக்கு அன்பு கட்டளையிட்டனர்.
அவர்களின் அழைப்பை ஏற்ற சில மாணவர்கள் ஸிபோவுக்கு மீண்டும் விஜயம் செய்ததுடன், தங்களது இனிய பயண அனுபவத்தை டிக்டாக் செயலியின் சீன வடிவமான டொயினில் பகிர்ந்தனர். மாணவர்களின் பதிவுகள் ட்ரெண்டாகவே, ஸிபோவும் சீன மக்கள் மத்தியில் பிரபலமானது என்று ஒரு காரணம் கூறப்படுகிறது.
 
“எங்களிடம் அதிக பணம் இல்லை; ஆனால் ஓய்வு நேரத்தை மகிழ்வுடன் கழிக்க விருப்பம் உள்ளது. எங்களின் விருப்பத்துக்கேற்ற இடமாக ஸிபோ உள்ளதால், கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த சீன மக்கள், மூன்றாண்டுகளுக்கு பிறகு, தற்போது ஸிபோவுக்கு படையெடுத்து வருகின்றனர்” என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத பல்கலைக்கழக மாணவர் ஒருவர்.
 
சீன சமூக வலைத்தளங்களில் 15 மில்லியன் பின்தொடர்பவர்களை (Followers) கொண்டுள்ள பிரபல உணவுக் கலைஞர், தமது ரசிகர்களின் வேண்டுக்கோளுக்கிணங்க, கடந்த மார்ச் மாதம் ஸிபோ நகருக்கு பயணம் மேற்கொண்டார்.
 
அவரது இந்தப் பயணத்துக்கு ஒரு மாதத்துக்கு பின், வாடிக்கையாளர்களுக்கு தரமற்ற உணவுகளை பரிமாறும் ஹோட்டல்களின் நேர்மையற்ற தன்மையை அம்பலப்படுத்தும் நிபுணர் ஒருவரும் ஸிபோவுக்கு விஜயம் செய்தார்.
 
ஆனால், நேர்மையற்று செயல்படும் உணவகங்களை ஸிபோ நகரில் தன்னால் கண்டறியவே முடியவில்லை என்று நற்சான்று அளித்திருந்தார் அவர்.
 
சுற்றுலா பயணிகளின் வருகையால் எப்போதும் நிரம்பி வழிந்துக் கொண்டிருக்கும் ஸிபோ நகரில், தங்களை நாடி வந்த வாடிக்கையாளர்களை காக்க வைக்க நேர்ந்ததற்காக, அவர்களிடம் அந்த ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் வைரலானது.
 
4 மணி நேரம் மட்டுமே தூக்கம்
 
 
ஸிபோவில் உள்ள உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்குகின்றனர் என்று South China Morning Post சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.
 
மே தின விடுமுறை கொண்டாட்டத்தை முன்னிட்டு, கலாசாரம் மற்றும் சுற்றுலா பணியக அதிகாரிகள், கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி, கடிதம் மூலம் பொதுமக்களுக்கு ஓர் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
 
மே தின விடுமுறை கொண்டாட்டத்துக்காக, ஸிபோ நகருக்கு செல்வதை தவிர்க்குமாறு, சீன மக்களை அறிவுறுத்தி இருந்தனர்.
 
பார்பிக்யூவின் மூலம், ஸிபோ நகருக்கு கிடைத்துள்ள சுற்றுலா அடையாளத்தை தக்கவைத்துக் கொள்ள தாங்கள் எவ்வளவோ முயன்று வருவதாக அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
ஆனால், இங்கு பல்லாயிரக்கணக்கில் வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகளை முழுமையாக செய்து தர இயலாததால் அவர்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர் என்கின்றனர் அவர்கள்.
 
ஐந்து மில்லியனுக்கு குறைவான மக்கள்தொகையை கொண்ட ஒரு நகரம், தினசரி இரண்டு லட்சம் சுற்றுலா பயணிகளை எதிர்கொள்வது மிகவும் கடினமான விஷயம் என கூறும் அதிகாரிகள், நீண்ட கால அடிப்படையில் ஸிபோ நகரம் இதற்கு தயாராக வேண்டும் என்கின்றனர்.
 
பார்பிக்யூவை மையமாக கொண்டு, கோடை காலத்தில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஸிபோவில் குவிவது அவர்களுக்கு பவ்வேறு நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்த தான் செய்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறார் ஸிபோவை பூர்விகமாகக் கொண்ட ஜாங். ஆனாலும் தனது சொந்த ஊர் நாடு தழுவிய அளவில் பிரபலம் அடைந்துள்ளதை எண்ணி பெருமைக் கொள்வதாக கூறுகிறார் அவர்.