செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinojkiyan
Last Modified: வியாழன், 21 நவம்பர் 2019 (21:49 IST)

தொலைந்து 5 ஆண்டுகள் கழித்து, 2,000 கி.மீ. தூரத்தில் கிடைத்த பூனை

சாஷா
 
அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தை சேர்ந்த நபரொருவருக்கு சொந்தமான பூனை சுமார் 2,000 கிலோமீட்டர் தூரத்தில் கண்டறியப்பட்டு, உரிமையாளருடன் மீண்டும் இணைந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
ஓரிகான் மாகாணத்திலுள்ள போர்ட்லேண்ட் பகுதியிலிருந்து ஐந்தாண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சாஷா எனும் அந்த பூனை சமீபத்தில் நியூ மெக்ஸிகோவின் சாண்டா பி நகரில் இருப்பது கண்டறியப்பட்டது.
 
சாஷாவின் உடலில் பொருத்தப்பட்டிருந்த மைக்ரோசிப்பை ஸ்கேன் செய்ததன் மூலம் அதன் உரிமையாளரின் வசிப்பிடம் குறித்து தெரியவந்ததாக உள்ளூரிலுள்ள வன விலங்குகள் காப்பகம் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அந்த பூனை விமானம் மூலம் தனது உரிமையாளரின் வீட்டை அடைந்தது.
 
சாஷா தொலைந்துபோன உடனேயே அதுகுறித்து புகார் செய்ததாக கூறும் அதன் உரிமையாளர் விக்டர் உசோவ், ஐந்தாண்டுகள் ஆன நிலையில், தனது பூனை மீண்டும் கிடைக்கும் என்ற நம்பிக்கையையே இழந்து இருந்ததாகவும், இந்நிலையில் மீண்டும் சாஷாவுடன் இணைந்தது வியப்பளிப்பதாகவும் கூறுகிறார்.