1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 3 ஜூலை 2020 (14:46 IST)

மீனவர்கள் பலி: இத்தாலிக்கு எதிரான வழக்கில் இந்தியாவுக்கு பின்னடைவு

இந்திய மீனவர்கள் இருவரை 2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இத்தாலி கடற்படையினர் சுட்டுக் கொன்ற வழக்கில் அவர்கள் மீது இந்தியா சட்ட நடவடிக்கை எடுப்பதில் இருந்து விலக்கு பெற முடியும் என்று சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆனால் இந்திய தரப்புக்கு இழப்பீடு பெறுவதற்கு உரிமை உள்ளது என்றும் நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள பெர்மனென்ட் கோர்ட் ஆப் ஆர்பிட்ரேஷன் தெரிவித்துள்ளது. இது தனிநபர்கள் பிற நாடுகளின் அரசுகளுக்கு எதிராகத் தொடுக்கும் வழக்குகளை விசாரிக்கும் ஐ.நாவின் நீதிமன்றம் ஆகும்.
 
இத்தாலிய கடற்படையினர் மீது இந்தியா நடவடிக்கை எடுக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தாலும் அவர்கள் இதை கொலை வழக்காக இத்தாலிய சட்டங்களின்படி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
மூன்று நீதிபதிகள் கொண்ட இந்த அமர்வில் இத்தாலி கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்பதற்கு ஆதரவாக இரண்டு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
 
2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் எம்.வி என்ரிகா லெக்சி எனும் எண்ணெய் கப்பல் கேரள கடற்கரை அருகே வந்து கொண்டிருந்த பொழுது அங்கு இந்திய மீனவர்கள் சிலர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த எண்ணெய் கப்பலில் இருந்த இத்தாலிய கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு இந்திய  மீனவர்கள் உயிரிழந்தனர்.
 
அந்த மீனவர்களை கடல் கொள்ளையர்கள் என்று தவறாக நினைத்து விட்டதாக இத்தாலி தரப்பு தெரிவித்தது.
 
சிங்கப்பூரிலிருந்து எகிப்து நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த இத்தாலியை எண்ணெய் கப்பல் இந்த மீனவர்களின் மரணத்திற்கு பிறகு இந்திய கடற்படையினரால் லட்சத்தீவு அருகே இடை மறிக்கப்பட்டு கொச்சி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டது. பின்னர் சல்வடோர் ஜிரோனி, மேசிமிலியனோ லட்டோரே ஆகிய இத்தாலிய கடற்படையினர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
 
2013ஆம் ஆண்டு சிறை விடுப்பில் அவர்கள் இத்தாலி செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் இத்தாலி சென்ற பின்பு அவர்களை திரும்ப இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது என்று இத்தாலி அரசு தெரிவித்துவிட்டது.
 
2015ஆம் ஆண்டு இந்திய சட்டங்களின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கோரி சர்வதேச நீதிமன்றத்தை நாடியது. அந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது.

இந்த மீனவர்களின் மரணம் இந்தியா மற்றும் இத்தாலி ஆகிய இரு நாட்டு உறவில் மிகவும் மோசமான பாதிப்பை உண்டாக்கியது. கப்பலில் இருந்த  பாதுகாவலர்களின் எச்சரிக்கையை மீறி இரண்டு இந்திய மீனவர்களும் தங்கள் படகில் கப்பலை நோக்கி வந்ததால் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று  இத்தாலி தரப்பு வாதிட்டது.
 
சர்வதேச கடல் எல்லையில்தான் இந்தத் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது என்றும் அதன் காரணமாக இந்த வழக்கின் விசாரணை இத்தாலியில்தான் நடக்க வேண்டும் என்றும் கடற்படையினருக்கு ஆதரவாக இத்தாலி அரசு வாதாடியது.
 
இத்தாலிய கடற்படையினர் இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்த இந்திய அரசு அவர்கள் மீதான குற்றம் நிரூபணம் செய்யப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படாது என்று இத்தாலியிடம் அப்போது உறுதி அளித்திருந்தது.