1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 3 டிசம்பர் 2021 (15:27 IST)

சீனா vs அமெரிக்கா: வல்லுநர் பெயரில் போலி செய்தி பிரசாரம் - ஃபேஸ்புக் கணக்குகள் நீக்கம்!!

சீனாவை மையமாகக் கொண்ட, தவறான செய்தியை பரப்பும் 500க்கும் மேற்பட்ட கணக்குகளைக் கொண்ட குழுவை ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெடா நீக்கியுள்ளது.
 
நீக்கப்பட்ட கணக்குகள் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 'வில்சன் எட்வர்ட்ஸ்' என்கிற உயிரியலாளரை விளம்பரப்படுத்தின. உயிரியலாளர் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் அக்கணக்கு, கொரோனாவின் தோற்றுவாயைக் கண்டுபிடிக்கும் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதாக குற்றம்சாட்டியுள்ளது.
 
எட்வர்டின் கருத்துகளை சீன அரசு ஊடகங்கள் பரவலாக பிரசுரித்துள்ளன. ஆனால் சுவிட்சர்லாந்தின் தூதரகமோ, அப்படி ஒரு நபர் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என கூறியுள்ளது.
 
சமூக வலைதளங்களில் அக்குழு மேற்கொண்ட பிரசாரம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என மெடா நிறுவனம் தன் அறிக்கையில் கூறியுள்ளது. அப்பிரசாரம் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற ஆங்கிலம் பேசும் பயனர்கள் மற்றும் சீன மொழி பேசும் தைவான், ஹாங்காங் மற்றும் திபெத்தைச் சேர்ந்தகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
கொரோனா வைரஸின் தோற்றுவாயைக் கண்டுபிடிக்கும் விவகாரத்தில், சீனா மீது பழிசுமத்த, அமெரிக்கா உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மீது அழுத்தம் கொடுத்து வருவதாக, கடந்த ஜூலை மாதம் வில்சன் எட்வர்ட்ஸ் என்கிற பெயரில் இருந்த, சுவிட்சர்லாந்து உயிரியலாளர் என அடையாளப்படுத்திக் கொண்ட ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் கணக்குகள் அறிக்கைகளை வெளியிட்டு இருந்தன.
 
சைனா குளோபல் டைம்ஸ் நெட்வொர்க், ஷாங்காய் டெய்லி, குளோபல் டைம்ஸ் ஆகிய சீனாவின் முக்கிய அரசு ஊடகங்கள் அதை மேற்கோள் காட்டி செய்திகளை வெளியிட்டன. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, சுவிட்சர்லாந்தின் தூதரகமோ, அப்படி ஒரு நபர் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என கடந்த ஆகஸ்ட் மாதம் கூறியது.
 
வில்சன் எட்வர்ட்ஸ் என்கிற பெயரில் இருக்கும் சமூகவலைத்தள கணக்குகள், அமெரிக்காவை குறை கூறும் பதிவை பிரசுரிப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்தான் ஃபேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது, அதோடு அக்கணக்குக்கு மூன்று நண்பர்கள் மட்டுமே உள்ளனர்.
 
மேலும் "வில்சன் எட்வர்ட்ஸ் என்கிற பெயரில், சுவிட்சர்லாந்து குடிமக்கள் பதிவேட்டில் எந்த பதிவுகளும் இல்லை, அதேபோல அப்பெயரில் எந்தவித கல்வி கட்டுரைகளும் இல்லை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது போக வில்சன் எட்வர்ட்ஸ் பெயரில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளவைகளை நீக்குமாறு சுவிட்சர்லாந்து தூதரக சீன ஊடகங்களை வலியுறுத்தியுள்ளது.
 
இது தொடர்பான விசாரணையில், சீனாவில் உள்ள தனிநபர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், அதில் சிசுவான் சைலன்ஸ் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி கோ லிமிடெட் மற்றும் சில சீன கட்டமைப்பு நிறுவனங்களோடு தொடர்புடையவர்கள் அடக்கம் என, கடந்த நவம்பர் மாத அறிக்கையில் கூறியது ஃபேஸ்புக்.
 
சிசுவான் சைலன்ஸ் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி நிறுவனத்தின் வலைத்தளத்தில், அது ஒரு தகவல் பாதுகாப்பு நிறுவனம் என்றும், அந்நிறுவனம் சீனாவின் பொது பாதுகாப்பு மற்றும் சி.என்.சி.இ.ஆர்.டி-க்கு தகவல் தொழில்நுட்ப உதவி வழங்குவதாகக் கூறுகிறது.
இந்த சுவிட்சர்லாந்து உயிரியலாளர் விவகாரத்தை பரிசீலித்த பின், 524 ஃபேஸ்புக் கணக்குகள், 20 பக்கங்கள், நான்கு குழுக்கள், 86 இன்ஸ்டாகிராம் கணக்குகளை நீக்கியுள்ளதாக ஃபேஸ்புக் கூறியுள்ளது.
 
ஆரம்பத்தில், வில்சன் எட்வர்ட்ஸ் பெயரில் பதிவிடப்பட்ட விவரங்களை, முதலில் போலி கணக்குகளும், அதனைத்தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள சீனாவின் உட்கட்டமைப்பு நிறுவன ஊழியர்களும் பகிர்ந்துள்ளனர். இந்த பதிவுகள் எந்த நாட்டிலிருந்து பதிவு செய்யப்பட்டது என்பதை வெளிப்படுத்தாமல் இருக்க, விபிஎன் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் மெடா நிறுவனம் கூறியுள்ளது.
 
இதில் மற்றொரு ஆச்சர்யமான செய்தி என்னவெனில், மிஷின் லெர்னிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வில்சன் எட்வர்ட்ஸின் ப்ரொஃபைல் படம் உருவாக்கப்பட்டதாகத் தெரிகிறது.
 
கொரோனா வைரஸின் தோற்றுவாய் எது என்கிற விவகாரத்தில், சீனா, அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கு மத்தியில் பதற்றமான சூழல் நிலவிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதுவரை கொரோனா தோற்றுவாய் குறித்த தெளிவான விவரங்கள் கிடைக்கவில்லை.