வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 13 ஜூன் 2022 (14:48 IST)

ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களை கொண்ட காட்டு யானை உயிரிழப்பு

(இலங்கை மற்றும் இந்திய நாளிதழ்கள் மற்றும் இணையதளங்கள் சிலவற்றில் இன்று (13/06/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.)

பந்திப்பூர் காட்டுப்பகுதியில் ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களை கொண்ட காட்டு யானை உயிரிழந்ததாக, 'தினத்தந்தி' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. அந்த யானையின் உடல் கபினி அணை அருகே குழித்தோண்டி புதைக்கப்பட்டது.

அச்செய்தியில், "கபினி அணையின் பின்புறம் உள்ள நாகரஒலே, பந்திப்பூர் வனப்பகுதிகளில் காட்டு யானை ஒன்று சுற்றி வந்தது. அந்த யானை 'போகேஸ்வரன்', 'கபினி' என பெயரிட்டு அழைக்கப்பட்டு வந்தது. இந்த யானை மிக நீளமான தந்தங்களை உடையது. அதாவது இது, ஆசியாவிலேயே மிக நீளமான தந்தம் உடைய காட்டு யானை ஆகும். அதன் தந்தங்கள் சுமார் 7 அடி முதல் 8 அடி வரை இருக்கும். தும்பிக்கை போன்று தரையில் படும் அளவுக்கு அதன் தந்தங்கள் இருக்கும்.

68 வயதான போகேஸ்வரன் யானை, பந்திப்பூர் வனப்பகுதியில் நேற்று இறந்த நிலையில் கிடந்தது. நேற்று முன்தினம் வனத்துறை ஊழியர்கள் பந்திப்பூர் புலிகள் பாதுகாப்பு சரணாலயத்துக்குட்பட்ட குன்றே வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள போகேஸ்வரர் கோவில் அருகே 'போகேஸ்வரன்' காட்டு யானை இறந்து கிடந்தது.

இதையடுத்து கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு யானைக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் வனத்துறையினர், யானையின் 2 தந்தங்களை வெட்டி எடுத்தனர். இதையடுத்து அதேப்பகுதியில் யானையின் உடலை கபினி அணை அருகே குழித்தோண்டி புதைத்தனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 21வது திருத்தம்அமைச்சரவைக் கூட்டம் விவாதிக்கும்

அரசமைப்புச் சட்டத்தின் 21வது திருத்தம் தொடர்பாக இன்று நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டம் கவனம் செலுத்தும் என்று நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக, 'வீரகேசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுய்ள்ளது.

இதுதொடர்பாக அவர் கூறியதாக, "21ஆவது அரசியலைமைப்பு திருத்தம் தொடர்பில் அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள் உள்ளிட்டவற்றுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்களின் போது பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

அவை தொடர்பாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றை 21இல் உள்ளடக்குதல் மற்றும் அதனை இறுதிப்படுத்துதல் தொடர்பில் இன்று நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

திருத்தங்களை உள்ளடக்கிய 21ஐ நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உள்ளது" என தெரிவித்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கு விசேட அறிவித்தல்

இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் சந்தர்ப்பத்தை வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது என, 'தமிழ் மிரர்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், "வெள்ளிக்கிழமைகளில் வீட்டிலிருந்து பணியாற்ற சந்தர்ப்பம் வழங்கப்படும் என பொதுநிர்வாக, உள் நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.