1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Updated : திங்கள், 25 மே 2020 (16:55 IST)

ஆதிச்சநல்லூர், சிவகளையில் அகழாய்வுகள் துவங்கின

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை ஆகிய இடங்களில் மாநில தொல்லியல் துறையால் நடத்தப்படும் அகழாய்வுகள் இன்று துவங்கியுள்ளன.

கீழடி அகழாய்வு தவிர, இந்த ஆண்டில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொடுமணல் ஆகிய இடங்களிலும் அகழாய்வை நடத்த மாநில தொல்லியல் துறை திட்டமிட்டிருந்தது. கீழடியில் அகழாய்வுகள் துவங்கிய நிலையில், கொரோனா பரவலின் காரணமாக அந்த அகழாய்வுகள் தடைபட்டன. புதிதாக அகழாய்வுகளும் துவங்கப்படவில்லை.

கீழடி பகுதியில் கடந்த வாரம் அகழாய்வு மீண்டும் துவங்கியது. இதையடுத்து இன்று ஆதிச்சநல்லூர், சிவகளை ஆகிய இடங்களில் அகழாய்வுப் பணிகள் துவங்கியுள்ளன. ஆதிச்சநல்லூரில் ஏற்கனவே பல முறை அகழாய்வு நடைபெற்றிருக்கிறது. கடைசியாக, 2004-2005ல் மத்திய தொல்லியல் துறை இங்கு அகழாய்வு கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி தலைமையில் ஒரு அகழாய்வை நடத்தியது. அதற்குப் பிறகு அங்கு அகழாய்வுகள் ஏதும் நடக்கவில்லை.

ஆதிச்சநல்லூரில் ஏற்கனவே அகழாய்வு நடத்தப்பட்ட புதைமேடு, மக்கள் அங்கு வாழ்ந்ததாகக் கருதப்படும் இடங்கள் ஆகியவற்றில் தற்போது அகழாய்வு நடத்த மாநில தொல்லியல் துறை திட்டமிட்டிருக்கிறது. அதேபோல, சிவகளையிலும் புதைமேடு ஒன்று அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில், அங்கும் அகழாய்வுகள் துவங்கப்பட்டிருக்கின்றன.

இரு இடங்களிலும் தலா 15க்கும் மேற்பட்டவர்கள் இந்தப் பணிகளில் ஈடுபட்டிருக்கின்றனர். செப்டம்பர் மாத இறுதிவரை இந்தப் பணிகள் நடக்குமென மாநில தொல்லியல் துறையின் துணை இயக்குனர் டி. சிவானந்தம் தெரிவித்தார்.

ஈரோடு கொடுமணலிலும் இதே போன்ற ஆய்வுகள் விரைவில் துவங்கவிருக்கின்றன.