திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 13 அக்டோபர் 2022 (22:52 IST)

எரிக் சொல்ஹெய்ம்: இலங்கை ஜனாதிபதி ரணிலின் காலநிலை ஆலோசகர் ஆனது எப்படி?

இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் "சர்வதேச காலநிலை ஆலோசகர்" என்ற ஒரு புதிய பாத்திரத்தை ஏற்றுள்ளார்.

 
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் சமாதான தூதுவராக செயற்பட்டவரே, நோர்வேயைச் சேர்ந்த எரிக் சொல்ஹெய்ம்.

 
ஒரு காலத்தில், அதாவது இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கை ராணுவம் தீவிர யுத்தம் நடத்திய காலத்தில் எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு விஜயம் செய்தால், அது அப்போதைய பத்திரிகைகளில் முதல் பக்க செய்தியாக இடம்பெற்றிருக்கும்.

 
அவரது விஜயமானது, அந்த காலப் பகுதியில் விசேடமானதாக அமைவதுடன், அவரது விஜயத்தில் இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதானிகள் மாத்திரமன்றி, வடக்கில் நிலைக்கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.

 
சமாதான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து, ஆயுதம் யுத்தம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு, அந்த யுத்தம் முடிவடைந்து தசாப்த காலம் கடந்துள்ள நிலையில், எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார். இந்த நிலையில், எரிக் சொல்ஹெய்ம் இம்முறை இலங்கைக்கு விஜயம் செய்த காரணம் கேள்விக்குரியதாக இருந்த நிலையில், இந்த அறிவிப்பு வந்துள்ளது.
 
 
மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷிட்டுடன் தானும் ஆலோசகராக நியமிக்கப்பட்டமை குறித்து, தான் பெருமிதம் கொள்வதாக எரிக் சொல்ஹெய்ம் டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.

 
இலங்கைக்கு கடந்த 10ம் தேதி வருகைத் தந்த எரிக் சொல்ஹெய்ம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்றைய தினம் (ஒக்டோபர் 11) சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.
 
 
பசுமை பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் இலங்கையின் காலநிலை தொடர்பிலான தலைமைத்துவத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு விசேட தொலைநோக்கு உள்ளதாக எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
 
2022ம் ஆண்டுக்கான (UNFCCC க்கான தரப்பின் மாநாடு) COP27 ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றத்திற்கான மாநாடு இந்த ஆண்டு எகிப்தின் ஷர்ம் எல் ஷேக்கில் நடைபெறுகின்றது.
 
2022ம் ஆண்டு நவம்பர் மாதம் 6ம் தேதி முதல் 18ம் தேதி வரை ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பில் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன், இந்த ஆலோசகர்களும் கலந்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
2002, ஜனவரி 10ஆம் தேதி இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்க இருந்தபோது அவரை தமது நாட்டுக் குழுவுடன் சந்தித்த எரிக் சொல்ஹெய்ம்
 
நான்காவது ஈழப் போர் ஆரம்பிப்பதற்கு முன்னர், இலங்கையின் சிவில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அவர் பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டார்.
 
1998ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரையான காலம் வரை, இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையில் சமாதான தூதுவராக எரிக் சொல்ஹெய்ம் செயற்பட்டதுடன், அவர் மிக அனுபவமுன்ன சமாதான தூதுவராவார்.

 
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளை நடத்தும் எந்தவொரு சர்வதேச நீதிபதிகள் குழாம் முன்னிலையிலும் சாட்சி வழங்க தயார் என நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்திருந்தார்.

 
இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட காலப் பகுதியில், விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு நிதி வழங்கியதாக, அவர் மீது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, 2014ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை இலக்காக கொண்டு நடத்தப்பட்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் குற்றம் சுமத்தியிருந்ததுடன், அந்த குற்றச்சாட்டு போலியானது என நோர்வேயின் இலங்கைக்கான சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் அப்போது கூறியிருந்தார்.

 
ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்டு, மஹிந்த ராஜபக்ஷ தன் மீது போலி குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும் எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டிருந்தார்.

 
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தோற்கடிக்க முடியாது என நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் தூதுவர் தன்னிடம் கூறியதாகவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்த கூட்டத்தில் கூறியிருந்தார்.
 
சமாதான உடன்படிக்கையின் பிரகாரம், யுத்த நிறுத்தம் இடம்பெற்று, 2002ம் ஆண்டு அது ஒஸ்லோ பிரகடனத்திற்கு வழிவகுத்ததுடன், சமஷ்டி முறைக்கு இலங்கையின் உரிய தரப்பினர் இணக்கம் வெளியிட்டனர்.

 
அவர் அமைச்சராக இலங்கையின் சமாதான முயற்சிகளுக்கு தொடர்ந்தும் தலைமைத்துவம் வழங்கியதுடன், சூடான், நேபாளம், மியன்மார் மற்றும் புருண்டி ஆகிய நாடுகளும் சமாதான பேச்சுவார்த்தைக்கு பங்களிப்பு வழங்கியிருந்தன.

 
எரிக் சொல்ஹெய்ம் உள்ளிட்ட நோர்வே தரப்பினர், சமாதான பேச்சுவார்த்தைக்கு தலையீடு செய்தமை, அந்த காலப் பகுதியில் பாரிய விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தன.
 
 
நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கு இடையில் நேற்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

 
கொழும்பு - 07 பகுதியிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
 
 
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் இலங்கை அரசாங்கத்திற்கும், விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையில் சமாதான
 
பேச்சுவார்த்தைக்கான தூதுவராக செயற்பட்டமையை, மஹிந்த ராஜக்ஷ இதன்போது நினைவு கூர்ந்துள்ளார்.
 
அத்துடன், இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், நோர்வே முதலீட்டாளர்களை
 
 
இலங்கையில் முதலீடு செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எரிக் சொல்ஹெய்ம்மிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 
இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு நோர்வே உதவிகளை வழங்கும் என எரிக் சொல்ஹெய்ம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உறுதியளித்துள்ளார்.
 
இதேவேளை, இந்த சந்திப்பு தொடர்பில் எரிக் சொல்ஹெயம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

 
இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து எவ்வாறு மீள்வது மற்றும் சூழலியலை ஒன்றிணைந்து நாடுகளுக்கு மத்தியில் காணப்படும்
 
 
சவால்களுக்கு பசுமையான தீர்வுகளை எவ்வாறு காண முடியும் என்பன குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் கலந்துரையாடல்களைநடத்தியதாக எரிக் சொல்ஹெய்ம் பதிவிட்டுள்ளார்.
 
 
நோர்வேயின் பசுமை கட்சியின் உறுப்பினரான செயற்படுகின்றார் எரிக் சொல்ஹெய்ம். திருமணமாகி, அவருக்கு நான்கு பிள்ளைகள் இருக்கின்றனர்.
 
சொல்ஹெய்ம், இதற்கு முன்னதாக சோஷலிச இடதுசாரி கட்சியின் (SV) அரசியல்வாதியாக செயற்பட்டுள்ளார். இந்த கட்சியின் இளையோர் பிரிவின் தலைவராக 1977ம் ஆண்டு முதல் 1981ம் ஆண்டு வரை செயற்பட்டுள்ளார்.
 
1981ம் ஆண்டு முதல் 1985ம் ஆண்டு வரையான காலம் வரை அந்த கட்சியின் செயலாளராகவும், 1989ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை நோர்வே நாடாளுமன்றத்தின் உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
 
அத்துடன், 1987ம் ஆண்டு முதல் 1997ம் ஆண்டு வரை சோஷலிச இடதுசாரி கட்சியின் தலைவராகவும் அவர் செயற்பட்டுள்ளார்.
 
சொல்ஹெய்ம், கட்சியின் தலைவராக செயற்பட்ட காலப் பகுதியில், கடும் இடதுசாரி கொள்கைகளை கொண்ட அந்த கட்சி, பெரும்பாலான இடதுசாரி கொள்கைகளிலிருந்து விடுப்பட்டு, மத்தியஸ்த நிலைப்பாட்டிற்கு வந்துள்ளது.
 
அவர் வலதுசாரி கொள்கைகளை கொண்டவர் என அடையாளப்படுத்தப்பட்டமையினால், கட்சிக்குள் கடும் விமர்சனங்கள் அவருக்கு எதிராக காணப்பட்டன. சுமார் 10 ஆண்டு காலமாக கட்சியின் தலைவராக செயற்பட்ட அவர், 1997ம் ஆண்டு கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து விலகினார்.
 
2000ம் ஆண்டு சொல்ஹெய்ம், நோர்வே அரசியலிலிருந்து விலகியதுடன், அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சின் விசேட ஆலோசகராக அவர் நியமனம் பெற்றார்.
 
சொல்ஹெய்ம், 2005ம் ஆண்டு சர்வதேச அபிவிருத்தி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டதை தொடர்ந்து, அவர் மீண்டும் நோர்வே அரசியலுக்குள் தடம் பதித்தார்.
 
2007ம் ஆண்டு அவர் பதில் சுற்றாடல் அமைச்சராக பதவியேற்றதுடன், 2012ம் ஆண்டு வரை அந்த பதவியை அவர் வகித்தார்.
 
2012ம் ஆண்டு அரசாங்கத்திலிருந்து விலகிய நிலையில், வெளிவிவகார அமைச்சின் விசேட ஆலோசராக மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். 2013ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை பெரிசின் OECDஅபிவிருத்தி நிவாரண குழுவின் தலைவராக அவர் செயற்பட்டுள்ளார்.
 
2016ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை ஐக்கிய நாடுகளின் உப பொதுச் செயலாளராகவும், ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் வேலைத்திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளராகவும் அவர் பதவி வகித்துள்ளார். 2018ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், சர்வதேச பயணங்களை அடிக்கடி மேற்கொள்ள வேண்டியமை மற்றும் உள்ளக சட்டங்களை மீறியதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கள் காரணமாக ஐக்கிய நாடுகளின் உள்ளக கணக்காய்வுகளின் பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
 
எரிக் சொல்ஹெய்ம், ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் வேலைத்திட்டத்தின் 6வது மற்றும் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளரும், ஐக்கிய நாடுகளின் உப செயலாளருமாவார்.
 
ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் வேலைத்திட்டத்தில் இணைந்துக்கொள்வதற்கு முன்னர், சொல்ஹெய்ம், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பின் உதவித்திட்ட குழுவின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.
 
இந்த பதவிக் காலப் பகுதியில், நிரந்தர அபிவிருத்தி முதலீட்டு ஒத்துழைப்பு மற்றும் அடிஸ் வரி முறைக்கான தலைமைத்துவத்தை வழங்கி, அபிவிருத்தி முகாமைத்துவத்தில் தனியார் துறை மற்றும் வரிகளின் பொறுப்புக்களை சொல்ஹெய்ம் முன்வைத்திருந்தார்.
அபிவிருத்தி அடையாத நாடுகளுக்கு அதிகளவிலான நிவாரண உதவிகளை வழங்குவதற்கான தேவை மற்றும் அபிவிருத்தி நிவாரண குழுவின் புதிய உறுப்பினர் மற்றும் பங்குதாரர்களின் தேவை தொடர்பிலும் அவர் அவதானம் செலுத்தியிருந்தார்.
 
2007ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரையான காலம் வரை சொல்ஹெய்ம், நோர்வேயின் சுற்றாடல் மற்றும் சர்வதேச அபிவிருத்தி ஒன்றியத்தின் அமைச்சராகவும் , 2005ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை சர்வதேச அபிவிருத்தி அமைச்சராகவும் கடமையாற்றியிருந்தார்.
 
கடந்த 100 ஆண்டுகளில் நோர்வேயின் மிக முக்கிய சுற்றுச் சூழல் சட்டமாக கருதப்படும் இயற்கை பன்முகத்தன்மை சட்டத்தையும் சொல்ஹெய்ம் செயற்படுத்தியுள்ளார்.
ஈர வலய காடுகளை பாதுகாப்பதற்காக நோர்வே, பிரேசில், இந்தோனேஷியா உள்ளிட்ட ஏனைய நாடுகளுடன் நெருங்கி செயற்பட்டு, நோர்வே காலநிலை மற்றும் வன முன்முயற்சியை சொல்ஹெய்ம் நிறுவியுள்ளார்.
 
எரிக் சொல்ஹெய்ம், வளர்ச்சி அடையும் நாடுகளில் காடழிப்பு மற்றும் வனச் சீரழிவு ஆகியவற்றை குறைப்பதற்கு UN REDD என்ற கூட்டணியொன்றை ஆரம்பிப்பதற்கு சொல்ஹெய்ம் முன்மாதிரியாக செயற்பட்டுள்ளார்.

 
UN Environment's Champions of the Earth விருது, TIME Magazine's Hero of the Environment மற்றும் இந்தியாவின் டில்லி TERI பல்கலைக்கழகத்தில் கௌரவ பட்டம் உள்ளிட்ட காலநிலை மற்றும் சுற்றாடல் தொடர்பில் அவர் பல்வேறு விருதுகளும் அவருக்கு கிடைத்துள்ளன. அவர் Den store samtalen, Naermere மற்றும் Politikk er a villeஎன்ற பெயர்களின் மூன்று புத்தகங்களையும் அவர் எழுதியுள்ளார்.
 
 
ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் சமூக கல்வி தொடர்பிலான பட்டத்தையும் அவர் பெற்றுக்கொண்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் வேலைத்திட்த்தின் நிறைவேற்று பணிப்பாளராக 2016ம் ஆண்டு சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டுள்ளார். 2018ம் ஆண்டு அவர் அந்த பதவியிலிருந்து விலகியதுடன், அந்த பதவிக்கு அச்சிம் ஸ்டெய்னர் நியமிக்கப்பட்டார்.

 
ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் வேலைத்திட்டத்திற்கு தலைமைத்துவம் வழங்குவதற்கு அவருக்கு காணப்பட்ட இயலுமை தொடர்பில், உள்ளக விசாரணைகளின் பின்னர் ஐக்கிய நாடுகளின் உள்ளக ஆய்வு சேவை அலுவலகம் கேள்வி எழுப்பியுள்ளது. குறிப்பாக இது பயண முறைமைகள் மற்றும் பொது நிதி முகாமைத்துவம் தொடர்பிலான விடயங்களுக்காக இருந்துள்ளது.
 
 
இதன் விளைவாக, டென்மார்க், சுவிடன், ஜப்பான், பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகள் ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் வேலைத்திட்டத்திற்கான தமது நிதி வழங்கலை நிறுத்தியிருந்ததுடன், அதன் பின்னர் அந்த அமைப்பிற்கு பாரிய நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Edited by Sinoj