1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வியாழன், 12 ஜூலை 2018 (13:42 IST)

உலககோப்பை கால்பந்து: இங்கிலாந்தின் 52 ஆண்டுகால கனவு தகர்ந்தது எப்படி?

உலகக்கோப்பை கால்பந்து 2018-ல் இங்கிலாந்து அணி குரேஷியாவிடம் அரை இறுதியில் தோல்வியடைந்தது. இதன் மூலம் இங்கிலாந்தின் 52 ஆண்டுகால கனவு தகர்ந்துள்ளது.



1966-ல் உலக கோப்பை கால்பந்து தொடரில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது இங்கிலாந்து. அதன்பின்னர் இங்கிலாந்து உலகக்கோப்பைத் தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறவில்லை.

இம்முறை மாஸ்கோவில் நடைபெறும் இறுதிப்போட்டியில் பிரான்சுடன் இங்கிலாந்து மோதும் என இங்கிலாந்து ரசிகர்கள் நம்பினர். ஆனால் அரை இறுதி போட்டியில் ஆட்டம் முடிவதற்கு 11 நிமிடங்கள் இருக்கும் வேளையில் குரோஷியாவின் மரியோ மன்ட்ஜூகிக் அடித்த வெற்றிக்கான கோல் இங்கிலாந்தின் அரை நூற்றாண்டு கனவை அடியோடு தகர்த்தது.

இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து முதல் கோலை ஐந்தாவது நிமிடத்திலேயே அடித்தது. முதல் பாதியில் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஆட்டம் இரண்டாவது பாதியில் குரோஷியாவின் பெரிசிக் 68-வது நிமிடத்தில் அடித்த கோலால் சமநிலை அடைந்தது.

இரண்டாவது பாதியின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்தன. இதையடுத்து கூடுதல் நேரம் தரப்பட்டது. கூடுதல் நேரத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

இரண்டாவது பாதியில் இவான் பெரிசிக்கின் உதவியோடு மரியோ மன்ட்ஜூகிக் ஒரு கோல் அடித்தார். அதன் பிறகு குரோஷியா மேலும் கோல் போடும் முனைப்போடு துடிப்பாக ஆடியது. கூடுதல் நேரத்தின் இரண்டாவது பாதி முடிவில் குரோஷியா 2-1 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.

இங்கிலாந்து சனிக்கிழமையன்று மூன்றாவது/நான்காவது இடத்திற்கான ஆட்டத்தில் பெல்ஜியத்துடன் மோதுகிறது. ஞாயிற்றுகிழமை நடக்கும் இறுதிப் போட்டியில் குரோஷியாவை எதிர்கொள்கிறது ஃபிரான்ஸ்.



இங்கிலாந்து தோல்வியடைந்தபோதிலும் இங்கிலாந்து ரசிகர்கள் சவுத் கேட்டின் அணிக்கு எழுந்து நின்று மரியாதை செய்தனர். 1996-ல் நடந்த யூரோ கோப்பைக்கு பிறகு இங்கிலாந்தின் சிறந்த செயல்பாடு இதுவே. நான்கு வருடங்களுக்கு முன்பு பிரேசிலில் நடந்த உலககோப்பையில் லீக் சுற்றோடு வெளியேறியது. 2016 யூரோ கோப்பையில் கத்துக்குட்டி அணியான ஐஸ்லாந்திடம் தோற்று காலியிறுதிக்கு தகுதிபெறாமல் வெளியேறியது.

இங்கிலாந்து முதல் பாதியில் வெற்றிக்கான ஓட்டத்தை துவங்கியது. ஆனால் இரண்டாவது பாதியில் சற்றே சுணங்கியதும் குரோஷியா கோல் போட விட்டதும் வெற்றி ஓட்டத்தை நிறுத்தியது. அதேசமயம் குரோஷியாவின் வெற்றி ஓட்டமானது இந்த உலககோப்பையில் எந்த அணியாலும் தடுத்து நிறுத்த முடியாததாக விளங்குகிறது.