நர்மதா நவநிர்மான் அபியான் என்ற அரசு சாரா நிறுவனம் 17 ஆண்டுகளுக்கு முன்பு நடத்திய பணப்பரிவர்த்தனை அமலாக்கத்துறையால் தோண்டப் படுகிறது. 20 வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் இருந்து இந்த தொண்டு நிறுவனத்தின் கணக்குக்கு சுமார் 1 கோடி ரூபாய் அனுப்பப்பட்டதாகவும், இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தின் முக்கிய அறங்காவலர்களில் ஒருவர் பிரபல மனித உரிமை செயற்பாட்டாளர் மேதா பட்கர்.
நர்மதா அணை எதிர்ப்பியக்கத்தின் முகமாக இருப்பவர் மேதா.
மேதா பட்கரின் இந்த அரசு சாரா நிறுவனத்துக்கு ரூ.1,19,25,880 பணம் 20 வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் இருந்து வந்ததாக தி பயனியர் பத்திரிகையில் வெளியான ஒரு செய்தி கூறுகிறது. அதாவது அந்த 20 கணக்குகளில் இருந்தும் தலா ரூ.5,96,294 பணம், நர்மதா நவ நிர்மான் அபியான் கணக்குக்கு வந்துள்ளது என்கிறது அந்த செய்தி.
இது குறித்து அமலாக்கத்துறை விசாரிப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து மேதா பட்கரிடம் பேசியது பிபிசி குஜராத்தி. தாமும் தமது அமைப்பும் அரசாங்கத்தை பல நிலைகளிலும் எதிர்த்து வருவதால் தம் பெயருக்கு களங்கம் விளைவிக்க அரசு முயற்சிப்பதாக கூறினார் அவர்.
பெறப்பட்டவுடன் உரிய முறையில் எல்லா நிதியும் செலவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் பிபிசி குஜராத்தியிடம் கூறினார்.
"புலம் பெயரவேண்டிய நிலை ஏற்பட்ட மக்களின் மறுவாழ்வு, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்ற பல துறைகளில் நாங்கள் வேலை செய்கிறோம். இது நடந்துகொண்டே இருக்கிற பணி," என்றார் அவர்.
"அமலாக்கத்துறையிடம் தரப்பட்டுள்ளதாக கூறப்படும் புகாரில் குறிப்பிடப்படும் பணப் பரிமாற்றம் நடந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதற்கான அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுவிட்டன. தணிக்கையும் நடைபெற்றுவிட்டது. நர்மதா நவநிர்மான அபியான் நிறுவனத்தின் கணக்குகள் ஓவ்வோர் ஆண்டும் தணிக்கை செய்யப்படுகின்றன. எனவே இது குறித்து விசாரணை என்ற கேள்வியே எழவில்லை. எல்லா குற்றச்சாட்டுகளும் பொய்யானவை," என்றார் அவர்.
தன்னையும், தனது அமைப்பையும் களங்கப்படுத்துவது மூலம் நாங்கள் அமைதியாக செல்லவேண்டும் என்பதற்காகவே அரசாங்கம் இந்த வேலை முழுவதையும் செய்கிறது என்றும் அவர் கூறினார்.
குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் வழியாக ஓடும் நர்மதை ஆற்றுக்கு குறுக்கே மிகப்பெரிய அணை ஒன்றை கட்டும் திட்டத்துக்கு எதிராக பழங்குடியினர், விவசாயிகள், சுற்றுச்சூழல் வாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரை உள்ளடக்கிய நர்மதா பச்சாவ் அந்தோலன் (நர்மதை காப்பு இயக்கம்) என்ற இயக்கத்தை கட்டமைப்பதில் மேதா பட்கர் முக்கியப் பங்காற்றினார்.
நர்மதா பச்சாவ் அந்தோலன் என்பது என்ன?
நர்மதா பச்சாவ் அந்தோலன் இயக்கத்துக்கு மேதா பட்கரும், மற்றொரு புகழ்பெற்ற சமூக ஆர்வலரான பாபா அம்ப்தேவும் தலைமை வகித்தனர். நர்மதை ஆற்றின் குறுக்கே திட்டமிடப்பட்ட பல அணைத் திட்டங்களால் குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மூன்று மாநிலங்களில் புலம்பெயர நேர்ந்த ஏராளமான மக்களுக்காக இந்த அமைப்பு போராடியது. 2011ல் பாலிவுட் நடிகர் அமீர் கான் தனது ஆதரவை தெரிவித்தபோது இந்த இயக்கம் இந்தியா முழுவதும் பரவலாக அறியப்பட்டது.
"நர்மதா பச்சாவ் அந்தோலன் இயக்கத்தின் முக்கிய நோக்கம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது. அணைகளால், கடல் மட்டம் உயரும் என்று அப்போது நாங்கள் சொன்னோம். இப்போது அது உண்மையாகிறது. நர்மதை ஆறு அரபிக்கடலில் கலக்கும் பரூச் நகருக்குள் நுழைந்துவிட்டது கடல்," என்கிறார் பிபிசி குஜராத்தியிடம் பேசிய ரோஹித் பிரஜாபதி என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர். இவரது அமைப்பு நர்மதா பச்சாவ் அந்தோலன் இயக்கத்தோடு நெருக்கமாக செயல்பட்டது.
மேதா பட்கரின் குஜராத் தொடர்பு
குஜராத்தில் உள்ள நர்மதை பள்ளத்தாக்கை சேர்ந்த பழங்குடிகளுக்காக போராடியதால்தான் மேதா பட்கர் குஜராத் மாநிலத்தில் சர்ச்சைக்குரியவராக இருந்தார் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், மேதாவின் செயல்பாடுகள் பாஜக-வுக்கு பிடிக்கவில்லை என்கிறார் ஒரு சமூக ஆர்வலர். 2002ம் ஆண்டு காந்தி ஆஸ்ரமத்தில் கோத்ரா கலவரம் தொடர்பாக பேசிக்கொண்டிருந்த மேதா பட்கரும், வேறொரு செயல்பாட்டாளரும் தாக்கப்பட்டனர். இது பெரிய சர்ச்சையை அப்போது தோற்றுவித்தது.