ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 21 டிசம்பர் 2021 (14:06 IST)

உலகின் மிகப்பெரும் பணக்காரர் ஈலோன் மஸ்க் இந்த ஆண்டு செலுத்தும் வரி எவ்வளவு?

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஈலோன் மஸ்க் இந்த ஆண்டு தாம் அமெரிக்க அரசுக்கு செலுத்தவுள்ள வரி எவ்வளவு என்பதை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
 
ப்ளூம்பெர்க் பில்லியனர் குறியீட்டின்படி 243 பில்லியன் அமெரிக்க டாலரோடு (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 18.40 லட்சம் கோடி ரூபாய்) முதலிடத்தில் இருக்கும் ஈலோன் மஸ்க், இந்த ஆண்டு 11 பில்லியன் அமெரிக்க டாலரை (தற்போதைய இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 83,300 கோடி ரூபாய்) வரியாகச் செலுத்த உள்ளதாக டுவிட் செய்துள்ளார்.
 
பொதுவாகவே உலகின் பல நாடுகளில் பணக்காரர்கள் குறைவாக வரி செலுத்துவதாக சமூக வலைதலங்களில் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதில் டெஸ்லா மின்சார வாகனம் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் போன்ற உலகின் முன்னணி நிறுவனங்களின் தலைவராக இருக்கும் ஈலோன் மஸ்க் எவ்வளவு வரி செலுத்துவார் என்கிற விவாதமும் எழுந்தது.
 
அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட்டரான எலிசபெத் வாரன், கடந்த வாரம் ஈலோன் மஸ்க்கை மறைமுகமாகக் குறிப்பிட்டு, அமெரிக்காவின் சீர்கேடான வரிச் சட்டங்களை மாற்றுவோம், 'இந்த ஆண்டுக்கான மனிதர்' உண்மையில் வரி செலுத்தட்டும், அதே போல மற்ற பில்லியனர்களும் வரிச்சுமையின்றி பலன்கள் அனுபவிப்பதை நிறுத்துவோம் என தன் டுவிட்டர் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
 
கடந்த வாரம்தான் ஈலோன் மஸ்க் 2021ஆம் ஆண்டின் 'பர்சன் ஆஃப் தி இயர்'-ஆக அறிவிக்கப்பட்டார் என்பது நினைவுகூரத்தக்கது. விவாதங்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஈலோன் மஸ்க் தன் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்திலிருந்து, கடந்த டிசம்பர் 20ஆம் தேதி, திங்கட்கிழமை மேற்கூறியபடி இந்த ஆண்டு 11 பில்லியன் டாலரை வரியாகச் செலுத்த உள்ளதாகப் பதிவிட்டுள்ளார்.
 
எலிசபெத் வாரனுக்கு பதிலளிக்கும் வகையில் "உங்கள் கண்களை இரு நொடிக்கு திறந்து பார்த்தால், அமெரிக்க வரலாற்றில் எந்த ஒரு தனி நபரும் செலுத்தாத அளவுக்கு, நான் இந்த ஆண்டு வரி செலுத்தப் போகிறேன் என்பதை உணர்வீர்கள்" என்று அவரது டுவிட்டுக்குக் கீழேயே பதில் கொடுத்திருந்தார் ஈலோன் மஸ்க்.
 
டெஸ்லா நிறுவனத்தின் மதிப்பு சுமார் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலராகவும் (ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர்), ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மதிப்பு 100 பில்லியன் அமெரிக்க டாலராகவும் உள்ளது.
 
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மிகப் பெரிய பணக்காரர்களுக்கு கூடுதலாக வரி விதிக்க ஆர்வத்தோடு இருக்கிறார், இருப்பினும் அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸில் அது தொடர்பான திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
 
அமெரிக்காவின் மாபெரும் பணக்காரர்களின் வருமானத்துக்கு மட்டும் வரி விதிக்காமல், அவர்கள் வைத்திருக்கும் சொத்துகளின் (உதாரணமாக பங்குகள், கடன் பத்திரங்கள்) மதிப்பு உயர்வுக்கும் வரி விதிக்க வேண்டும் என்கிற திட்டத்தை, எலிசபெத் வாரன் உட்பட சில அமெரிக்க செனட்டர்கள் ஆதரிக்கின்றனர்.
 
பல பணக்கார அமெரிக்க பில்லியனர்கள், தங்கள் வருமானத்தை நேரடியாக வரி விதிப்புக்கு உட்பட்ட ஊதியமாக ஈட்டுவதில்லை; பங்குகள், கடன் பத்திரங்கள் வடிவில் தங்கள் ஊதியத்தை அவர்கள் பெற்றுக்கொள்கின்றனர்.
 
எனவே நேரடியாக வரிவிதிப்பின் கீழ் வருவதில்லை. பில்லியனர்கள் தங்களின் சொத்துகளை பங்குகள், கடன் பத்திரங்கள் போல முதலீடுகளாக வைத்துள்ளனர். அச்சொத்துகளைபிணையாக வைத்து கடன் பெற்று தங்கள் தொழிலை நடத்திக் கொள்கின்றனர்.