வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : வியாழன், 27 ஜனவரி 2022 (10:30 IST)

நிலவின் மீது மோதி வெடிக்க உள்ள ஈலோன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்

சில ஆண்டுகளுக்கு முன், ஈலோன் மஸ்கின் விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் ஏவப்பட்ட ராக்கெட் ஒன்று நிலவில் மோதி வெடிக்க உள்ளது.


கடந்த 2015ஆம் ஆண்டு 'தி ஃபால்கன் 9 பூஸ்டர்' ராக்கெட் ஏவப்பட்டது. அந்த ராக்கெட் தன் பணியை நிறைவு செய்துவிட்டு பூமிக்குத் திரும்ப போதுமான எரிபொருள் இல்லாத காரணத்தால் புவிக்குத் திரும்பவில்லை. அப்படியே விண்வெளியில் கைவிடப்பட்டது.

ஒரு ராக்கெட் கட்டுப்பாடின்றி நிலவில் மோத உள்ளது இதுவே முதல் முறை என விண்வெளி ஆய்வாளரான ஜோனதன் மெக்டோவல் பிபிசி நியூஸிடம் கூறினார்.

நிலவில் ராக்கெட் மோதுவதால் ஏற்படும் தாக்கம் சிறிதாகவே இருக்கும் என்றும் அவர் கூறினார்.

ஒரு வானிலை செயற்கைக் கோளை, 10 லட்சம் மைல் தொலைவுக்குப் பயணித்து நிலை நிறுத்திவிட்டு, புவிக்குத் திரும்ப முடியாத ஃபால்கன் 9 ராக்கெட் ஏழு ஆண்டுகளுக்கு முன் கைவிடப்பட்டது.

இந்த விண்வெளிப் பயணம், ஈலோன் மஸ்கின் விண்வெளி ஆய்வுத் திட்டத்தின் ஓர் அங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. மனிதர்கள் விண்வெளியில் வாழும் குறிக்கோளைச் சாத்தியமாக்க, ஈலோன் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் என்கிற நிறுவனத்தை நிறுவியுள்ளார்.

2015ஆம் ஆண்டு முதல் அந்த ராக்கெட் பூமி, நிலவு, சூரியன் என பலதரப்பட்ட ஈர்ப்பு விசைகளின் ஆதிக்கத்தினால் தடுமாறிக் கொண்டிருக்கிறது என ஹார்வர்ட் ஸ்மித்சோனியன் ஆஸ்ட்ரோ ஃபிசிக்ஸ் மையத்தின் பேராசிரியர் மெக்டோவல் கூறினார்.

விண்வெளியில் தன் பணியை நிறைவு செய்துவிட்டு, பூமிக்குத் திரும்பப் போதுமான திறன் இல்லாமல் விண்வெளியிலேயே சுற்றித் திரியும் லட்சக் கணக்கிலான விண்வெளிக் குப்பைகளில் ஒன்றாக ஃபால்கன் 9 ராக்கெட்டும் இணைந்தது.

"கடந்த பல தசாப்த காலத்தில் கிட்டத்தட்ட 50 பெரிய விண்வெளிப் பொருட்கள் கண்காணிக்க முடியாமல் போயுள்ளது. பல முறை இப்படி நடந்துள்ளது. நாம்தான் அதைக் கவனிக்கவில்லை. இது உறுதிப்படுத்தப்பட்ட முதல் சம்பவமாக இருக்கலாம்" என்கிறார் பேராசிரியர் மெக்டோவல்.

ஃபால்கன் 9 ராக்கெட் இறந்துவிட்டதாக அல்லது மறைந்துவிட்டதாக பத்திரிகையாளர் எரிக் பெர்கர், அர்ஸ் டெக்னிகா என்கிற வலைதளத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதையும், பில் கிரே என்கிற தரவு பகுப்பாய்வாளர் தன் வலைப் பதிவில் குறிப்பிட்டிருப்பதையும் கண்டுபிடித்து சுட்டிக்காட்டியுள்ளார்.

ஃபால்கன் 9 ராக்கெட் வரும் 2022 மார்ச் 4ஆம் தேதி நிலவின் மீது மோதி வெடிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

"அடிப்படையில் அது நான்கு டன் எடையுள்ள, ராக்கெட் என்ஜின் பொருத்தப்பட்ட காலி டேங்க். அதை ஒரு பாறை மீது மணிக்கு 5,000 மைல் வேகத்தில் எறிந்தால், அது மகிழ்வைக் கொடுக்காது" என பேராசிரியர் மெக்டொவெல் கூறினார். அந்த மோதல் நிலவின் பரப்பின் மீது ஒரு சிறிய பள்ளத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.

புவிக்கு அருகில் உள்ள பொருட்களை மென்பொருள் கொண்டு பின் தொடரும் பில் கிரே, வரும் மார்ச் 4ஆம் தேதி ஃபால்கன் பூமியில் இருந்து காண முடியாத நிலவின் அரைக்கோளப் பகுதியில் மோதலாம் என்று கணித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு பேராசிரியர் மெக்டோவல் உட்பட பல விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், இதே அளவு கொண்ட ராக்கெட்டை நிலவில் மோதவிட்டு ஆய்வு செய்தனர். நிலவின் மீதான மோதலினால் ஏற்பட்ட பள்ளத்தை ஆராயலாம் என்கிற நோக்கில், மோதலின் போது சென்சார்கள் ஆதாரங்களைச் சேகரித்தன.

ஃபால்கன் ராக்கெட் மோதலிலிருந்து விஞ்ஞானிகள் எதையும் கற்றுக் கொள்ள விரும்பவில்லை என்பது போலத் தோன்றுகிறது என்கிறார் பேராசிரியர் மெக்டோவெல்.

இப்போது விண்வெளியில் சுற்றித் திரியும் குப்பைகள், அரிதாகவே மோதி வெடிக்கின்றன. இதனால் இப்போது எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாமல் இருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார் மெக்டோவெல்.

மார்ச் 4ஆம் தேதி வரை என்னவாகும்? ஃபால்கன் 9 ராக்கெட் நிலவில் மோதி வெடிக்கும் வரை ஈர்ப்பு விதியின்படி விண்ணிலேயே மிதக்கும்.