வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 10 பிப்ரவரி 2020 (15:31 IST)

நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த பாதுகாப்புப்படை வீரர்கள் - காரணம் என்ன?

109 மில்லியன் டாலர் கடன் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து, எல் சால்வடோர் நாட்டில் ஆயுதம் ஏந்திய காவல்துறையினரும் ராணுவ வீரர்களும் நாடாளுமன்றத்தில் புகுந்தனர்.
 
எல் சால்வேடாரின் அதிபர் நையிப் பூகேலே அமைச்சரவை கூட்டத்தில் தனது உரையைத் தொடங்கும்போது காவல்துறையினரும் ராணுவ வீரர்களும் அத்துமீறி உள்ளே நுழைந்தனர். 
 
இதற்கு முன்பு பாதுகாப்புப் படையினரின் இந்த கடன் திட்டத்திற்கு ஆதரவளிக்க, அதிபர் நைப் ஏற்கனவே அனைத்து அமைச்சர்களுக்கும் ஏழு நாட்கள் கெடு விதித்திருந்தார். இந்நிலையில், ராணுவ வீரர்கள் இவ்வாறு நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தது எதிர்பாராத மிரட்டல் போன்று உள்ளதாக அந்நாட்டின் எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளன. உலகில் அதிக கொலைகள் நடக்கும் நாடாக எல் சால்வடோர் இருக்கிறது.
 
மத்திய அமெரிக்காவில் இயங்கும் பல்வேறு வன்முறை கும்பல்களே இங்கு நடைபெறும் பெரும்பாலான குற்றங்களுக்கு காரணமாக உள்ளன. 2019ஆம் ஆண்டு அதிபராக பதவியேற்றபோது, நாட்டில் தலைவிரித்தாடும் வன்முறை மற்றும் ஊழலை துடைத்தெறிவேன் என்று நைப் உறுதியளித்திருந்தார்.
 
38 வயதான நைப் இந்த கடன் தொகையைக் கொண்டு காவல்துறையினருக்கும் ராணுவ வீரர்களுக்கும் ஆயுதங்கள் அளித்து குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என விரும்புகிறார்.
 
குறிப்பாக காவல்துறை வாகனங்கள், சீருடை, கண்காணிப்பு கருவிகள் மற்றும் ஹெலிகாப்டர் ஆகியவை வாங்க இந்த தொகையை பயன்படுத்த வேண்டும் என்று அவர் எண்ணுகிறார்.
 
ஆனால், இந்த முடிவை செயல்படுத்த வகை செய்யும் மசோதா மீது கடந்த வாரம் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்க போவதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்தனர்.
 
மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போனதால், அதிபர் நைப் தனது ஆதரவாளர்களை போராட்டத்தில் இறங்குமாறு அழைப்பு விடுத்ததாக கூறுகிறார் மத்திய அமெரிக்க பிராந்தியத்தின் பிபிசி செய்தியாளர் வில் க்ராண்ட். சுமார் 50 ஆயிரம் பேர் அரசுக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
 
நைபின் இந்த செயல் மிரட்டல் விடுப்பதுபோல் இருப்பதாகவும், அவர் எதேச்சதிகாரத்தை நோக்கி செல்வதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.