வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 31 அக்டோபர் 2023 (20:41 IST)

கத்தாரில் மரண தண்டனை: இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேரை காக்கும் வழிகள் என்ன?

pm modi-Qatar pm
இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகள் 8 பேருக்கு கத்தாரில் மரண தண்டனை வழங்கப்பட்டதையடுத்து அனைவரின் பார்வையும் இந்தியா அடுத்து என்ன செய்யப்போகிறது என்பதை நோக்கிதான் இருக்கிறது.
 
இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை கூறுகையில் கத்தார் அரசின் இந்த முடிவு அதிர்ச்சியளிப்பதாகவும் இந்த விவகாரத்தில் சட்டரீதியாக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் எனவும் தெரிவித்திருந்தது.
 
கடந்த திங்கட்கிழமை சம்பந்தப்பட்ட இந்தியர்களின் குடும்பங்களை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் சந்தித்தார். அதன்பின்பு பேசிய அவர், “முன்னாள் அதிகாரிகளின் குடும்பத்தினரின் வலியை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்தியர்களை விடுவிக்கும் அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொள்ளும். அவர்களின் குடும்பங்களோடும் நெருங்கிய தொடர்பில் நாங்கள் இருப்போம்” என நம்பிக்கை தெரிவித்தார்.
 
8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளை காப்பாற்றும் இந்திய அரசின் முயற்சிகளை தலைமை தாங்கும் பொறுப்பு பிரதமர் நரேந்திர மோதியின் நம்பிக்கைக்குரிய இராஜதந்திரியான (Diplomat) தீபக் மிட்டலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 
1998 ஆம் ஆண்டு பேட்சைச் சேர்ந்த இந்திய வெளியுறவுப் பணி (IFS) அதிகாரியான தீபக் மிட்டல் தற்போது பிரதமர் அலுவலகத்தில் பணிபுரிகிறார்.
 
அவர் கத்தாருக்கான இந்திய தூதராக பணியாற்றியுள்ளார். மேலும், அவர் கத்தார் அரசாங்கத்தில் உயர்மட்டத்தோடு நல்ல உறவுகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இதன் காரணமாக அவருக்கு இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 
மற்ற நாடுகளுடனான வெளியுறவு பேச்சுவார்த்தைகளை கையாள்வதில் சிறந்த நிபுணராக தீபக் மிட்டல் அறியப்படுகிறார். 2019 ஆம் ஆண்டில் சர்வதேச நீதிமன்றத்தில் குல்பூஷன் ஜாதவ் வழக்கு விசாரணையின் போது, ​​பாகிஸ்தானின் மூத்த அதிகாரி கைகுலுக்க கை நீட்டிய போது தீபக் மிட்டல் கைகளை கூப்பி 'நமஸ்தே' எனக்கூறி பதிலளித்தார். அந்தப்படம் உடனே வைரலானது. அதிலிருந்து ​​மிட்டல் வெளிச்சத்திற்கு வந்தார்.
 
ஏப்ரல் 2020ல், மிட்டல் கத்தாருக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டார்.
 
2021ம் ஆண்டில், கத்தாரில் இந்திய தூதராக பணியாற்றியபோது, ​​உயர் தலிபான் தலைவர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானெக்சாயுடன் மிட்டல் பேச்சுவார்த்தை நடத்தினார்.
 
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, முதல்முறையாக இந்தியா நடத்திய முறையான இராஜதந்திர பேச்சுவார்த்தை அதுதான்.
 
 
இந்த நேரத்தில் அனைவரிடமும் இருக்கக்கூடிய முக்கியக் கேள்வி 8 இந்தியர்களையும் காப்பாற்றுவதற்கு இந்தியாவிடம் இருக்கக்கூடிய வாய்ப்புகள் என்ன என்பதுதான்.
 
நிபுணர்களை பொறுத்தவரை கத்தாரோடு இந்தியாவிற்கு இருக்கக்கூடிய நட்புறவை பயன்படுத்துவதுதான் சிறந்த வழியாக பார்க்கப்படுகிறது.
 
ஏ.கே. மஹபத்ரா, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள மேற்காசியத் துறையில் பேராசிரியராக இருக்கிறார்.
 
அவர் கூறுகையில், “முதலாவதாக, இந்தியாவிற்கு கத்தார் எதிரி நாடு கிடையாது. இந்தியாவோடு கத்தாருக்கு நட்புறவும் பொருளாதார உறவும் உள்ளது. இந்தியாவிற்கு கிட்டத்தட்ட 40 சதவீதம் எரிவாயு கத்தாரிலிருந்துதான் வருகிறது. 6 முதல் 7 லட்சம் இந்தியர்கள் கத்தாரில் பணிபுரிகின்றனர். இந்திய நிறுவனங்கள் கத்தாரில் முதலீடு செய்திருக்கிறார்கள். எனவே இந்த ஒரு விவகாரத்தால் இத்தனை விஷயங்களையும் இரண்டு நாடுகளும் பாழாக்கிக் கொள்ளமாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.
 
“இந்தியர்களின் கைது குறித்து கத்தார் எந்த ஒரு விவரத்தையும் தெரிவிக்காததால் இந்தியா முதலில் வெளியுறவின் மூலம் இந்தப் பிரச்சனையை தீர்க்க முயற்சிக்க வேண்டும்” என மஹபத்ரா தெரிவித்தார்.
 
அவர் மேலும் கூறுகையில் இந்த விவகாரத்தில் பிராந்திய அளவில் இந்தியா கத்தார் மீது அழுத்தம் கொடுக்க முயற்சிக்கலாம் எனத் தெரிவித்தார்.
 
அவர் கூறுகையில், “ஹமாஸ் அமைப்பின் அக்டோபர் 7ம் தேதி தாக்குதலுக்கு பிறகு மேற்கு ஆசியாவில் நாடுகள் மத்தியில் ஒரு பிளவு ஏற்பட்டிருக்கிறது. இரான், துருக்கி, கத்தார் மற்றும் ஒரு அளவிற்கு பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஒரு பக்கமும் மற்ற அரபு நாடுகள் ஒரு பக்கமும் எனப் பிரிந்துள்ளனர்.”
 
“ஓமன் மற்றும் குவைத் போன்ற அரபு நாடுகளுக்கு கத்தாரோடு நல்ல உறவு உள்ளது. எனவே இந்த நாடுகளோடு பேசி கத்தார் மீது இந்தியா அழுத்தம் தரலாம். மேலும், அமெரிக்கா மூலமாகவும் கத்தார் மீது இந்தியா அழுத்தம் தரலாம். கத்தாரில் இன்னும் அமெரிக்காவின் அதிகாரம் உள்ளது. அமெரிக்காவின் கடற்படை தளம் ஒன்று கத்தாரில் உள்ளது” என அவர் தெரிவித்தார்.
 
கத்தார் பிரதமர் ஷேக் அப்துல்லா பின் நாசர் பின் கலீஃபா அல் தானியுடன் பிரதமர் நரேந்திர மோடி (2016 புகைப்படம்)
 
இந்தியர்களுக்கு கத்தார் அரசரின் மன்னிப்பு கிடைக்குமா?
 
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள எட்டு இந்தியர்களுக்கு அந்நாட்டு உயர்நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு இன்னும் உள்ளது. மேல்முறையீடு செய்வதில் இந்தியர்களுக்கு இந்திய அரசு முழு உதவியையும் வழங்கி வருகிறது. இந்த மேல்முறையீட்டில் என்ன முடிவுகள் வரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
சட்ட நடிவடிக்கைகள் மூலம் 8 இந்தியர்களையும் இந்திய அரசால் காப்பாற்ற முடியவில்லை என்றால் கத்தார் அரசரின் மன்னிப்பு மட்டும்தான் இந்தியர்களை காப்பாற்றும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
 
வெளியுறவு நிபுணரும் எழுத்தாளருமான ப்ரம்ம செலானி கூறுகையில், “இந்த தண்டனையை எதிர்த்து இந்தியர்கள் அடுத்த நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். அதிலும் தண்டனை உறுதி செய்யப்பட்டால் கத்தாரின் உச்சநீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்யலாம்.”
 
“இந்த வழக்கின் அரசியல் தன்மையை பார்க்கும்போது, 8 இந்தியர்களின் தண்டனை ரத்து செய்யப்படுவது கத்தார் அரசரின் கையில்தான் உள்ளது. கத்தார் அரசரான ஷேக் தமிம் பின் ஹமத் அல் தனிக்கு எந்த ஒரு குற்றவாளியின் தண்டனையையும் ரத்து செய்யும் அதிகாரம் உள்ளது. கத்தாரின் தேசிய தினத்தில் நிறைய கைதிகளை கத்தார் அரசு விடுதலை செய்யும். ஒரு வேளை 8 இந்தியர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் அது இந்தியா-கத்தார் உறவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்தார்.
 
 
 
பேராசிரியர் ஏ.கே. மஹாபத்ரா கூறுகையில், "கத்தாரில் நடப்பது ஜனநாயக ஆட்சி கிடையாது. அது முடியாட்சி. இந்த வழக்கில் கத்தாரின் ஆட்சியாளர்களும் மன்னிப்பு வழங்கலாம். அவர்கள் விரும்பினால், மரண தண்டனைக்கு பதிலாக சில ஆண்டுகள் சிறைத்தண்டனையும் கொடுக்கலாம். அதன்பின்பு 8 இந்தியர்களுக்கும் வரி விதிக்கப்பட்டு பிறகு அவர்களை இந்தியாவிற்கும் கொண்டு வரலாம்" எனத் தெரிவித்தார்.
 
ஜோர்டான் மற்றும் லிபியாவுக்கான இந்திய தூதராக அனில் திரிகுணாயத் பணியாற்றியுள்ளார். இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் மேற்கு ஆசியப் பிரிவிலும் பணியாற்றியுள்ளார்.
 
திரிகுணாயத்தும் இதை ஒப்புக்கொள்கிறார். அவர் கூறுகையில், "இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு இருதரப்பு பேச்சுவார்த்தை ஒரு வழி. கத்தாருடன் இந்தியா வைத்திருக்கும் உறவுகளை கருத்தில் கொண்டு, கத்தாரின் அரசர் இந்தியர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கலாம். இது தான் கடைசிவழி மற்றும் இரு அரசாங்கங்களின் பேச்சுவார்த்தை மூலம்தான் இந்த விவகாரத்திற்கு தீர்வு காண முடியும்” எனத் தெரிவித்தார்.
 
மேலும் அவர் கூறுகையில், "கைதிகளை மாற்றிக்கொள்வது குறித்து கத்தாருடன் இந்திய அரசு ஒரு ஒப்பந்தம் செய்திருக்கிறது. கத்தார் அரசரின் இந்தியா வருகையின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், மேல்முறையீட்டு நீதிமன்றம் இவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வாய்ப்புள்ளது. அதன் பிறகு அவர்களை கத்தாரில் இருந்து இந்தியாவுக்கு மாற்றுவது பற்றி இந்தியா பேச்சுவார்த்தை நடத்தலாம்” என அவர் தெரிவித்தார்.
 
தோஹாவில் கிரிக்கெட் விளையாடும் இந்திய இளைஞரின் படம். கத்தாரில் ஏராளமான இந்தியர்கள் வசிக்கின்றனர்.
 
மேகமலை காட்டுக்குள் 55 வயது நபரை வனத்துறையினர் சுட்டுக் கொன்றது ஏன்?
 
பேராசிரியர் மஹாபத்ராவின் கூற்றுப்படி, இந்த பிரச்சினைக்கு இராஜதந்திர தீர்வு காணப்படவில்லை என்றால், இந்தியாவுக்கு வேறு ஒரு வழி உள்ளது.
 
குல்பூஷன் ஜாதவ் விவகாரத்தில் செய்தது போல் சர்வதேச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தலாம் என்று அவர் கூறுகிறார்.
 
அனில் திரிகுணாயத் கூறுகையில், சர்வதேச நீதிமன்றத்திற்குச் செல்வதே இந்தியாவிற்கான கடைசி வழியாக இருக்கும் என்றும் இந்த வழியை முயற்சி செய்து பார்ப்பதற்கான அவசியம் இருக்காது. அரசியல்ரீதியான பேச்சுவார்த்தையில்தான் எல்லாம் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
 
மேலும் அவர் கூறுகையில், கத்தாரிடம் இருந்துதான் இந்தியா அதிக எரிவாயு இறக்குமதி செய்வதாகவும் இருநாடுகளுக்கும் பெரிய அரசியல் பிரச்சனையும் எதுவும் இல்லை. எனவே பேச்சுவார்த்தை மூலம் மட்டும்தான் இந்த விவகாரத்திற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.
 
பாரசீக வளைகுடாவில் உள்ள ஒரு சிறிய எரிவாயு வளம் நிறைந்த நாடுதான் கத்தார். அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாக கத்தார் உள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஹமாஸுடன் ஆழமான உறவுகளை வைத்திருப்பதாக கத்தார் மீது குற்றம் சாட்டப்படுகிறது.
 
சமீபத்தில், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் மோதலில் கத்தாரின் பேச்சுவார்த்தையினால்தான் இரண்டு அமெரிக்க பணயக்கைதிகளின் விடுதலை சாத்தியமானது.
 
எனவே இஸ்ரேலுடன் கத்தாருக்கு நல்ல உறவு இல்லை என்பது தெளிவாகிறது.
 
இந்த எட்டு இந்தியர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து கத்தார் அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறவில்லை. ஆனால் அவர்கள் கத்தாரில் இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.
 
இதனையடுத்து, இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கும் இஸ்ரேல் உடனான இந்தியாவின் அணுகுமுறைக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்பதும் விவாதிக்கப்படுகிறது.
 
பேராசிரியர் மொஹபத்ரா கூறும்போது, ​​"இஸ்ரேல்-பாலத்தீனம் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தங்களுக்கு பிடிக்கவில்லை என கத்தார் மறைமுகமாக கூற விரும்புகிறது. இந்தியாவின் நிலைப்பாட்டை புரிந்துகொள்வது கத்தாருக்கு எளிதானது அல்ல, ஏனென்றால் அவர்கள் மீது பயங்கரவாத தாக்குதல்கள் எதுவும் நடக்கவில்லை"
 
 
8 இந்தியர்களின் மரண தண்டனைக்கும் இஸ்ரேல் உடனான இந்தியாவின் அணுகுமுறைக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என விவாதிக்கப்படுகிறது.
 
அனில் திரிகுணாயத் கூறுகையில், "இந்த 8 பேர் மீதான வழக்கு ஒரு வருடமாக நடந்து வருவதால், இந்த இரண்டு விஷயங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நான் நினைக்கிறேன். இதுவரை வெளியான அறிக்கைகளில், தீவிரவாதம் குறித்த விவகாரங்களில் இந்தியா எந்த சமரசமும் செய்துகொள்ளாது என்றும் வன்முறையை எப்படியும் நியாயப்படுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளது”.
 
பல துறைகளில் இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் நம்பியிருக்கும் நிலையில் கத்தாருடன் இந்தியா நேரடி மோதலில் ஈடுபடுவது விவேகமற்றது என்று பேராசிரியர் மஹாபத்ரா கூறுகிறார்.
 
அவர் கூறுகிறார், "தற்போதைய சூழலை மோசமாக்காமல் இந்திய அரசாங்கம் மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.