வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 22 மே 2023 (23:31 IST)

'பகுதி நேர வேலை' பெயரில் நடக்கும் சைபர் பண மோசடி – விழிப்புடன் இருப்பது எப்படி?

நண்பர் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு இணைய வழியில் பகுதிநேர வேலை செய்து பணம் சம்பாதிப்பதாகத் தொடர்ந்து தினமும் வாட்ஸ்ஆப் ஸ்டேடஸ் வைத்துக்கொண்டே இருந்தார். அதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது தினசரி 500 ரூபாய், 1000 ரூபாய் சம்பாதிப்பதாகப் பெருமிதமாகக் கூறினார்.
 
என்னையும் அதில் இணைந்து சம்பாதிக்குமாறு வலியுறுத்தினார். ஆனால், அவர் தனக்கே தெரியாமல் என்னையும் ஒரு சைபர் கிரைம் கும்பலின் பண மோசடி வலையில் சிக்க வைப்பதற்கான முயற்சியை மேற்கொண்டிருந்தார் என்பது அப்போது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.
 
அந்தச் செயலியில் எப்படிப் பணம் சம்பாதிப்பது என்ற விவரத்தை அந்த நபர் விளக்கினார்.
 
அதாவது, ஒரு குறிப்பிட்ட செயலியைக் குறிப்பிட்டு, அதில் ஆரம்பத்தில் தினசரி அவர்கள் பார்க்கச் சொல்லும் வீடியோவை முழுமையாகப் பார்த்து அவர்கள் சொல்லும் கேப்ட்சாப்வை (Captcha) உள்ளீடு செய்தால், ஒரு குறிப்பிட்ட சிறு அளவிலான தொகை கிடைக்கும்.
 
அந்தச் செயலியில் மேற்கொண்டு அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால், அதே செயலியில் ஓர் அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது.
 
அதன்படி, முதலீடு செய்யும் பணத்தின் அளவைப் பொறுத்து தினசரி வருமானம் கிடைக்கும். சான்றாக, சில ஆயிரங்களில் முதலீடு செய்தால், நாளொன்றுக்கு ரூ. 200, 300 என்ற அளவில் தினமும் நமது வங்கிக்கணக்கிற்கு பணம் வந்துகொண்டே இருக்கும்.
 
இதுவே பல ஆயிரங்களிலோ பல லட்சங்களிலோ முதலீடு செய்தால், அதற்கு ஏற்ப தினசரி கிடைக்கும் பணத்தின் அளவும் உயரும். இப்படியாக நமது வங்கிக்கணக்கில் பணம் போடப்படுவது ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட சில ஆண்டுகளுக்கோ அல்ல, ஆயுள் முழுவதும்.
 
ஆம், “ஆயுள் முழுவதும் நமது வங்கிக் கணக்கிற்கு பணத்தைச் செலுத்திக் கொண்டேயிருப்பார்கள்” என்று இதில் ஈடுபட்டிருந்த நண்பர் கூறினார்.
 
இணையவழி பகுதிநேர வேலை மோசடி
 
இப்படியாகப் பல மோசடி வலைகள் இணையத்தில் பகுதிநேர வேலை தேடுவோருக்காக விரிக்கப்பட்டுள்ளன. இந்த வலைகளில் சிக்கித் தங்களுடைய முழுநேர வேலைகளில், தொழில்களில் சம்பாதித்த மொத்த பணத்தையும் இழந்து தவிப்பவர்கள் ஏராளம்.
 
“ஒரு செயலியில் இதுபோன்ற பகுதிநேர வேலை மோசடியில் ஈடுபடுபவர்களின் நெட்வொர்க் மிகப் பெரியது.
 
இப்படியாக தினசரி ‘நான் இவ்வளவு சம்பாதித்துள்ளேன்’ என்று பல பயனர்கள் பதிவிடுவதை நாம் பார்ப்போம். ஆனால், அந்தத் தொகை முழுமையாக அவர்களின் கைக்கு வராது.
 
அந்தச் செயலியிலேயே ‘நீங்கள் இதுவரை சம்பாதித்த தொகை ரூ.40,000. அந்தப் பணத்தை எடுக்க வேண்டுமெனில் அதற்கு நீங்கள் கூடுதலாக ரூ.10,000 செலுத்த வேண்டும்’ என்று கூறுவார்கள்.
 
இப்படியாக தினசரி அவர்கள் வேலை கொடுத்து சிறுகச் சிறுக நம்மை அவர்களது வலைக்குள் விழ வைத்து, நாம் செய்த வேலையில் ஒரு குறிப்பிட்ட தொகையைச் சம்பாதித்து விட்டோம் என்று நம்பவும் வைத்து விட்டு, பிறகு நாம் அவர்கள் கொடுத்த வேலையில் சம்பாதித்த தொகையை முழுமையாகப் பெறுவதற்கு ஆர்பிஐ விதிகளின்படி ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டும் என்றும் கூறுவார்கள்.
 
அதை நம்பி பயனர்களும் அவர்கள் கேட்கும் பணத்தைச் செலுத்துவார்கள்,” என்று இந்த சைபர் கிரைம் கும்பல் எப்படிச் செயல்படுகிறது என்பதை விளக்கினார் சைபர் வல்லுநர் ஹரிஹரசுதன் தங்கவேலு.
 
இதற்கிடையே பயனரின் விவரங்களை அலசி ஆராய்ந்துவிடும் சைபர் க்ரைம் கும்பல், அவரிடம் அதிக பணத்தைச் சுரண்டியெடுக்க முடியும் என்று தெரிந்தால், அப்போதைக்கு “அந்தப் பணத்தைக் கொடுத்துவிட்டு, இன்னும் கூடுதலாகப் பணம் சம்பாதிக்க முடியும் என்று ஆசை காட்டுவார்கள்.”
 
அதற்காக மேற்கொண்டு அதிக பணத்தைச் செலுத்தி இன்னும் அதிகமாகச் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் அவர்கள் மேன்மேலும் பணத்தைச் செலுத்துவார்கள்.
 
இதற்குமேல் ஒருவரிடம் பணத்தைச் சுரண்ட முடியாது என்ற கட்டம் வரும்போது அவர்களுக்குப் பணம் செலுத்துவதை நிறுத்தி, அவர்களிடம் எவ்வளவு சுரண்ட முடியுமோ சுரண்டிவிட்டு அவர்களுடனான பேச்சுவார்த்தைகளைத் தவிர்க்கத் தொடங்குவார்கள்.
 
அதிலும் இந்தக் குறிப்பிட்ட மோசடியில் ஈடுபடும் சைபர் கிரைம் கும்பல் மிகவும் கச்சிதமாகத் திட்டமிட்டு அற்புதமாக காய் நகர்த்தும் ஒரு கும்பல் என்று வர்ணிக்கிறார் சைபர் வல்லுநர் ஹரிஹரசுதன். அதாவது இவர்கள் “உங்கள் கார்டில் இருக்கும் 16 டிஜிட் நம்பரை சொல்லுங்க சார்” என்று அழைக்கும் உள்ளூர் சைபர் கிரைம் கும்பல் கிடையாது.
 
“இவர்கள் மிகவும் தொழில்முறையாக இதைச் செய்யக்கூடியவர்கள். பயனர்களிடம் இறுதிவரை தொடர்பிலேயே இருப்பார்கள். கடைசி வரைக்கும் கன்னியமாகவும் மரியாதையாகவுமே அவர்களுடைய அணுகுமுறை இருக்கும். பயனரின் அனைத்து சிரமங்களையும் புகார்களையும் காது கொடுத்துக் கேட்டு நடவடிக்கை எடுப்பவரைப் போலவே செயல்படுவார்கள்.
 
ஆனால், பின்னணியில் நம்மை அவர்களது வலையில் சிக்க வைத்து பறித்த பணத்தை வெளிநாடுகளில் கிரிப்டோ காயின்களாக சேமித்துக்கொண்டிருப்பார்கள்,” என்கிறார் அவர்.
 
அவர்கள் செய்த வேலைக்கான பணமாக லட்சங்களில் காட்டும் அந்த மெய்நிகர் பணத்தைத் தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றுவதற்காக அவர்கள் சொல்லும் பணத்தை நாம் செலுத்தத் தயாராக இருப்போம். இதுவொரு வகையான மனோவியல் ஆட்டம்.
 
நம்மை வருமான ஆசை காட்டி, சம்பந்தமே இல்லாத வேலைகளைச் செய்ய வைப்பார்கள். அந்த வேலைகளுக்கு நாம் இவ்வளவு தொகையைச் சம்பாதித்துள்ளோம் என்று ஒரு குறிப்பிட்ட அளவிலான தொகையை செயலியில் உள்ள நமது கணக்கில் காட்டுவார்கள்.
 
அது அந்தச் செயலியில் மட்டும்தான் தெரியும். அதை நம்மால் எடுக்க முடியாது. “இப்படி எடுக்க முடியாத நிலையில் கண்முன்னே இருக்கும் லட்சக்கணக்கான பணத்தை எப்படியாவது தனது கைகளுக்குக் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற ஆசை நிறைந்த மனநிலையில் பயனர்கள் இருப்பார்கள்.”
 
அந்த நேரத்திற்காகக் காத்திருக்கும் அந்தக் கும்பல், “ஆர்பிஐ விதிகளின்படி ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தினால் மட்டுமே உங்களால் இந்தப் பணத்தை எடுக்க முடியும் என்று பயனர்களிடம் வலியுறுத்துவார்கள்,” என்று விளக்குகிறார் ஹரிஹரசுதன்.
 
மேலும், “செயலியில் நீங்கள் செய்த வேலைக்கான தொகை என்று காட்டும் சில கோடிகள் அல்லது சில லட்சங்கள் பணத்தை வாங்குவதற்காக அவர்கள் கேட்கும் சில ஆயிரங்கள் முதல் சில லட்சங்கள் வரை செலுத்த வேண்டி வரும்.
 
பயனர்கள் அதைச் செலுத்துவார்கள். ஆனால், அவர்களுக்கு வரவேண்டிய பணம் என செயலியில் காட்டும் தொகையோ அவர்கள் செலுத்திய தொகையோ எதுவுமே திரும்பக் கிடைக்காது,” என்கிறார். இந்த மோசடியில் சிக்கியவர்கள் சில ஆயிரங்களில் தொடங்கி கோடிகள் வரைக்குமே இழந்துள்ளனர் என்று கூறுகிறார்.
 
பயனர்களை மோசடிக்கான கருவியாக மாற்றும் சாமர்த்தியசாலிகள்
 
நான் முன்பு சொன்ன நண்பரின் கதைக்கு வருவோம். அவர் தனக்கே தெரியாமல், அவரை ஏமாற்றிக்கொண்டிருக்கும் சைபர் மோசடியின் பிடியில் என்னையும் சிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாகக் கூறினேன் அல்லவா! அது எப்படி தெரியுமா?
 
இதுபோன்ற சைபர் கும்பலில் இருப்பவர்களிடம் சிக்கும் பயனர்களுக்கு ஆரம்பக்கட்டத்தில் சில நூறுகள் முதல் சில ஆயிரங்கள் வரை பணம் செலுத்துவார்கள் என்பதை முன்னமே பார்த்தோம். அப்படி செலுத்தப்படும் “பணம் கிடைத்துவிட்டத்தை உறுதி செய்யும் தகவலை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து தங்களுடைய வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் ஆக வைக்க வேண்டும் என்பதும் அவர்களுக்குக் கொடுக்கப்படும் ஒரு வேலையாக இருக்கும்.”
 
மேலும், “தினசரி அப்படி ஒரு ஸ்டேட்டஸ் வைத்துக்கொண்டே இருக்கையில், அவர்களுடைய நட்பு வட்டத்தில் இருப்பவர்களில் சிலர் ‘எப்படி தினமும் இந்தப் பணத்தைச் சம்பாதிக்கிறாய்?’ என அவர்களிடம் கேட்பார்கள். அப்போது தினசரி கொடுக்கப்படும் வேலையைச் செய்தால் சம்பாதிக்கலாம் என்றும் அது மிகவும் எளிமையான வேலைதான் என்றும் பயனர்கள் கொடுக்கும் விளக்கத்தைக் கேட்டு அவர்களது நட்பு வட்டத்தில் இருப்போரும் இதில் இணைவார்கள், பிறகு அவர்களும் ஏமாற்றப்படுவார்கள்,” என்கிறார் ஹரிஹரசுதன்.
 
“இதில் வேதனையே, தான் ஏமாறுவது மட்டுமின்றி, தனது நட்பு வட்டத்தில் இருப்போரையும் தங்களுக்கே தெரியாமல் அந்த மோசடி வலையில் சிக்க வைத்துவிட்டோமே என்ற அவமானத்திற்கும் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளாக்கப்படுகிறார்கள்.”
 
“இந்த மோசடியில் சிக்கி, அதற்குள் செலுத்திய பணத்தைத் திரும்பப் பெற வேண்டுமென்ற பதற்றத்திலேயே மேன்மேலும் தொடர்ந்து பணத்தை இழக்கும் நிலையில் நடுத்தர மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் அதிகமாக சிக்கிக் கொள்கிறார்கள்,” என்று விளக்குகிறார் ஹரிஹரசுதன்.
 
சமூக ஊடகங்களில் நாம் பார்ப்பது, படிப்பது அனைத்துமே உண்மை என்ற மனநிலை இன்றைய பொதுப்புத்தியில் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தப் பொதுப்புத்தியை இணையவழி மோசடிகளில் பணம் பறிக்கும் கும்பல்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.
 
சான்றாக 50 பேர் கொண்ட ஒரு டெலிகிராம் குழுவை உருவாக்கி, அதில் பகுதி நேர வேலை என்ற பெயரில் இணைக்கப்படும் புது பயனர்களை நம்ப வைப்பதற்காக அதில் உள்ள 50 பேருமே தாங்களும் அந்த வேலையில் சம்பாதிப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். அதைப் பார்க்கும் பயனர்களும் அதை உண்மை என்று நம்பி பணத்தை இழக்கத் தொடங்குகிறார்கள்.
 
“இதுபோன்ற பகுதிநேர வேலை வழங்குவதாக இணையத்தில் இருக்கும் 90% செயலிகள் போலியானவைதான்” என்று கூறுகிறார் சைபர் குற்றப்பிரிவு வல்லுநரும் வழக்கறிஞருமான கார்த்திகேயன்.
 
மேலும், “இன்றைய சூழலில் வீடியோவுக்கான பார்வையாளர் எண்ணிக்கையைப் பெருக்க, லைக்குகளை பெருக்க பாட்களை பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் இன்று பயன்பாட்டில் உள்ளன.
 
தனிப்பட்ட முறையில் ஒருவர் சென்றுதான் பார்வையாளர் எண்ணிக்கையைப் பெருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆகவே, வீடியோ பார்த்தால் பணம் கிடைக்கும் என்று கூறுவது ஏமாற்றுவதற்காக மட்டுமே.
 
சைபர் குற்றப்பிரிவு வல்லுநரும் வழக்கறிஞருமான கார்த்திகேயன்
 
ஆரம்பத்தில் அப்படி பார்க்க வைத்து, 300 ரூபாயோ 500 ரூபாயோ கொடுத்து பயனர்களை நம்ப வைத்து, அடுத்தடுத்து அவர்களது பணத்தைச் செலுத்த வைப்பதே சைபர் கிரைம் கும்பலின் நோக்கம்,” என்றும் அவர் விளக்குகிறார்.
 
இதுபோன்ற வலையில் சிக்கும் மக்களில் பெரும்பாலானோர் அதிலிருந்து மீள முடியாமல் தவித்து வருவதாகக் கூறும் கார்த்திகேயன், “இதுபோன்ற பகுதி நேர வேலை மோசடியில் சிக்குவோர், செயலியில் அவர்களுடைய கணக்கில் செய்த வேலைக்காக எனக் கூறி சேர்ந்திருக்கும் பணத்தை வங்கிக் கணக்குக்கு மாற்றுவது குறித்துக் கேட்டால், அதைப் பெறுவதற்கு நீங்கள் குறிப்பிட்ட ஒரு தொகையைச் செலுத்த வேண்டும் என்று கூறுவார்கள்.
 
அதையும் செலுத்தினால், விதிமுறைகள் மாறிவிட்டன எனக் கூறி மேன்மேலும் பணத்தைக் கேட்பார்கள். பயனர் ஒரு கட்டத்தில் சுதாரித்துக்கொண்டு, அவர் செலுத்திய பணத்தை மட்டுமே கேட்டாலும்கூட, ‘எங்களுடன் நீங்கள் போட்டுள்ள ஒப்பந்தத்தின்படி நீங்கள் வேலை செய்துதான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துவார்கள். அதற்கு மறுத்தால், போலியாக ஒரு வக்கீல் நோட்டீஸ் தயாரித்து அனுப்புவார்கள், அதைத் தொடர்ந்து போலி முதல் தகவல் அறிக்கையை அனுப்பி, ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக மிரட்டுவார்கள். அதற்கு அஞ்சி நாம் தொடர்ந்து அந்த வலையில் வலிய சிக்கிவிடக்கூடாது,” என்று விளக்குகிறார்.
 
“இப்படியாக அடுத்தடுத்து பணத்தை ஏமாந்துகொண்டே இருக்கக்கூடிய சுழலில் பலர் சிக்கியுள்ளனர்.”
 
 
“இதுபோன்ற செயலிகளை சமீப காலங்களில் பல்வேறு யூட்யூப் சேனல்களும் விளம்பரப்படுத்துவதைப் பார்க்க முடிகிறது. யூட்யூப் காணொளிகளில் கூறப்படும் அனைத்துமே உண்மையில்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். விளம்பரக் காணொளியாக செயலி நிறுவனங்களில் குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக்கொண்டு அதற்காக விளம்பரப்படுத்தும் காணொளிகளை நம்பிவிடக்கூடாது.”
 
“எந்தவொரு நிறுவனமும் வேலை கொடுப்பதற்காக பணம் பெறாது என்பதை முதலில் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்,” என்று கூறும் கார்த்திகேயன், “பகுதி நேர வேலை செய்வதற்காக பணம் செலுத்த வேண்டும் எனக் கூறும் எந்தவொரு இணையவழி விளம்பரத்தையும் நிறுவனத்தையும் நம்ப வேண்டாம். அப்படியே அதில் அறியாமல் இணைந்துவிட்டாலும்கூட உடனடியாக அதிலிருந்து மீண்டு வருவதற்கான வழிகளைப் பார்க்க வேண்டும்,” என்று அறிவுறுத்துகிறார்.
 
“ஒரு குறிப்பிட்ட தொகையை இழந்துவிட்ட பிறகு, அதை மீண்டும் பெறுவதற்காக எனக் கூறி அடுத்து மீண்டும் மீண்டும் பணம் செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
 
அதோடு, பணத்தை இழந்திருந்தால், உங்களைத் தொடர்புகொள்ளப் பயன்படுத்தப்பட்ட மொபைல் எண், அதிலிருந்து உங்களுக்கு வந்த தகவல்கள் அனைத்தையும் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து 1930 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்க வேண்டும்,” என்று வலியுறுத்துகிறார் சைபர் வல்லுநர் ஹரிஹரசுதன் தங்கவேலு.
 
பாதிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணில் எவ்வளவு விரைவாகப் புகார் அளிக்கிறார்களோ அதைப் பொறுத்து பணம் திரும்பிக் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
 
மேலும், “ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெற்றுவிட்டதாக வாட்ஸ்ஆப் ஸ்டேடஸ் வைக்கச் சொல்லும்போது, வாட்ஸ் ஆப் குழுக்களில் பகிரச் சொல்லும்போது அதைச் செய்யக்கூடாது. அப்படிச் செய்வது அடுத்தவர்களையும் இதில் சிக்க வைக்கக்கூடும். அதோடு, எந்த எண்ணுக்கு பணம் அனுப்பினார்களோ அந்த எண்ணை கூகுள் பே செயலியில் புகார் செய்யவேண்டும். அதன்மூலம், எதிர்காலத்தில் அதே எண்ணுக்கு வேறு யாராவது பணம் அனுப்பினால், அவர்களுக்கு எச்சரிக்கைச் செய்தி கொடுக்கப்படும்,” என்றும் ஹரிஹரசுதன் தெரிவித்தார்.