1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 4 டிசம்பர் 2024 (15:26 IST)

தந்திரமான விஷப் பாம்பு, ஊசித் தும்பி, 4 செ.மீ குட்டித் தவளை - வியப்பூட்டும் காங்கோ படுகை விலங்குகள்

கடந்த 10 ஆண்டுகளில் காங்கோ படுகையில் 700க்கும் மேற்பட்ட புதிய வகை உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக காட்டுயிர் நிதியம் (WWF) என்னும் ஒரு தன்னார்வ இயற்கைப் பாதுகாப்பு நிறுவனம் டிசம்பர் 3ஆம் தேதி வெளியிட்ட ஒரு புதிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 

 

அந்தக் கண்டுபிடிப்புகளுள், ஒரு புதிய வகை காபி செடி, விசித்திரமாக ஓசை எழுப்பும் ஒரு ஆந்தை, ஒரு மெல்லிய வாய் கொண்ட முதலை, தாவரங்களுக்கு மத்தியில் உருமறைப்பு செய்து தந்திரமாகத் தாக்கும் திறன் கொண்ட நச்சுப் பாம்பு ஆகியவையும் அடங்கும்.

 

"ஆப்பிரிக்காவின் நுரையீரல்" என்று அழைக்கப்படும் காங்கோ படுகை, ஆறு நாடுகளில் பரவியுள்ள உலகின் இரண்டாவது பெரிய மழைக்காடு. இது உலகின் மிகப்பெரிய கரிம உறிஞ்சியாகவும் உள்ளது (வளிமண்டலத்தில் வெளியிடப்படும் கரிமத்தைக் கிரகித்துக் கொள்ளும் சூழலியல் அமைப்பு).

 

உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான ஆராய்ச்சியாளர்களின் பணியை இந்த அறிக்கை விவரிக்கிறது.

 

“இந்த அறிக்கை உலகின் மிக முக்கியமான சூழலியல் அமைப்புகளுள் ஒன்றில் இருக்கும் சிறந்த பல்லுயிர்ப் பெருக்கத்தையும், அதன் அவசர பாதுகாப்புத் தேவைகளையும் முன்னிலைப்படுத்துவதாக” உலக காட்டுயிர் நிதியம் தெரிவித்துள்ளது.

 

கடந்த மாதம், உலக காட்டுயிர் நிதியம், உலகளவில் காட்டுயிர்களின் எண்ணிக்கை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் உலகம் முழுக்க காட்டுயிர்களின் எண்ணிக்கை 73% குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

 

"காங்கோ படுகை பற்றி அவ்வளவாக மக்களுக்குத் தெரியாது, மேலும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் பலர் அறிந்திருக்கவில்லை" என்று தன்னார்வ அமைப்பான காங்கோ படுகை பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர் ஜாப் வான் டெர் வார்டே பிபிசியிடம் கூறினார்.

 

பல தனிச் சிறப்புமிக்க உயிரினங்களின் வாழ்விடமாக இருப்பது மட்டுமின்றி, கரிமத்தை உறிஞ்சும் திறன்கொண்ட உலகின் கடைசி மழைக் காடுகளில் இதுவும் ஒன்றாக விளங்குவதாக வான் டெர் வார்டே தெரிவித்தார். மேலும், தனது கரிம கிரகிப்புத் திறனை இழந்து கொண்டிருக்கும் அமேசான் காடுகளை விடவும் அதிகமான கரிம வாயுவை, இந்தப் படுகை உறிஞ்சுவதாக விளக்குகிறார் அவர்.

 

“புதிய இனங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால், அவற்றின் இருப்பு பற்றி உலகிற்கு தெரியப்படுத்தவேண்டும். மேலும், காலநிலை மாற்றத்தில் ஸ்திரத்தன்மை கொண்டுவர காங்கோ படுகை மிகவும் அவசியம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது”, என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

"புதிய உயிரினங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமெனில், அவை குறித்து உலகுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும். அதோடு, காலநிலை நிலைத்தன்மையைக் கொண்டு வருவதற்கான முயற்சியில் காங்கோ படுகைக்கு மிக முக்கியப் பங்கு இருப்பதை நாம் மறந்துவிடக்கூடாது," என்றும் தெரிவித்தார் வான் டெர்.

 

'மியாவ்' என்று குரல் கொடுக்கும் ஆந்தை

 

கடந்த 2022ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட பிரின்சிபி ஸ்கோப்ஸ் ஆந்தை (Otus bikegila), சிறிய தீவு நாடான சௌ தோமே மற்றும் பிரின்சிபியில் மட்டுமே காணப்படுகிறது.

 

தமிழ்நாட்டில் காணப்படும் கொம்பன் ஆந்தையைப் போல், அதன் காதுகளைச் சுற்றி மேல்நோக்கிய வடிவில் இறகுகள் இருக்கும். மேலும் இது பூனையைப் போல 'மியாவ்' என்ற தனித்துவமான ஒரு சத்தத்தைக் கொடுக்கும்.

 

பறவைகளைப் பற்றிய தரவுகளை வைத்திருக்கும் ‘பேர்ட்ஸ் ஆஃப் தி வேர்ல்ட்’ அமைப்பின்படி, இந்த ஆந்தை விரைவாக அழிந்து வரும் நிலையில் இருக்கிறது. உலகில் வெறும் 1,100 முதல் 1,600 வரையிலான பிரின்சிபி ஸ்கோப்ஸ் ஆந்தைகளே வாழ்கின்றன.

 

‘ஊமா குமா’ வகை ஊசித் தும்பிகள்

 

புகழ்பெற்ற பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ராக் இசைக் குழுவான ‘பிங்க் ஃபிலாய்ட்’ லண்டன் நகரில் பன்றி வடிவம் கொண்ட ஒரு பலூன் போன்ற ஒன்றை பறக்கச் செய்தது.

 

இந்த நிகழ்வு, காங்கோ படுகையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய வகை ஊசித் தும்பிக்குத் பெயரிடவும் வித்திட்டது.

 

கடந்த 1969இல், பிங்க் ஃபிலாய்ட் இசைக்குழுவின் ஊமா குமா பாடல் தொகுப்பு வெளியானது. ஊமா என்பது ஒரு பூச்சி இனத்தைக் குறிக்கக்கூடிய பெயர் என்பதால், 'ஊமா குமா' பாடலையொட்டி, விஞ்ஞானிகள், இதற்கு ஊமா குமா ஊசித் தட்டான் எனப் பெயரிட்டனர்.

 

மிகவும் விஷமுள்ள பாம்பு
 

கடந்த 2020ஆம் ஆண்டுதான் மோங்கோ ஹேரி புஷ் வைப்பர் (Atheris mongoensis) எனப்படும் விரியன் வகைப் பாம்பு கண்டறியப்பட்டது என்றாலும், அதற்குள்ளாகவே ஆப்பிரிக்காவில் மிகவும் வீரியம் மிக்க நஞ்சுள்ள பாம்புகளில் ஒன்றாகப் பிரபலம் அடைந்துவிட்டது.

 

இந்தப் பாம்பின் செதில்கள், பச்சை, மஞ்சள் மற்றும் கருப்பு நிறங்களின் கலவையைக் கொண்டவை. ஆகவே, இவற்றால் காட்டிலுள்ள தாவரங்களுக்கு மத்தியில் தன்னை மறைத்துக் கொள்ளும், உருமறைப்புத் திறனைக் கொண்டுள்ளது. நஞ்சு மட்டுமின்றி, இந்த உருமறைப்புத் திறன் காரணமாகவும் இது ஆபத்தானதாகக் கருதப்படுகிறது.

 

குறிப்பால் உணர்த்தும் குட்டித் தவளை

 

ரோபஸ்ட் காங்கோ தவளை (Congolius robustus) என்றழைக்கப்படும், 4 செ.மீ அளவே இருக்கும் இந்தக் குட்டித் தவளை, ஓர் இரவாடி (பகலில் ஓய்வெடுத்து இரவில் இயங்கும் உயிரினம்) உயிரினமாகும்.

 

இது காங்கோ ஜனநாயகக் குடியரசில் மட்டுமே இதுவரை காணப்படுகிறது. இது காங்கோ ஆற்றின் தெற்கே பல இடங்களில் வாழ்கிறது.

 

உலகில் காங்கோ ஜனநாயகக் குடியரசில் மட்டுமே காணப்படும் ஓரிடவாழ் உயிரினம் (Endemic) என்பதால், அப்பகுதியின் சூழலியல் அமைப்பினுடைய தரநிலையையும் இதன் இருப்பு உணர்த்துகிறது.

 

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.