1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: ஞாயிறு, 10 மார்ச் 2019 (13:31 IST)

இரானில் பொது இடத்தில் காதலை வெளிப்படுத்திய தம்பதியினர் கைது

இரானில் வணிக வளாகத்தில் ஆர்பரிக்கும் கூட்டத்தினர் முன்பு நிச்சயதார்த்தம் செய்து கொண்ட தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாணமான அராக்கில் ஆண் ஒருவர் பெண் ஒருவருக்கு மோதிரம் அணிவிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. அதில் அவர்கள் ரோஜா இதழ்களால் ஆன வளையத்திற்குள் நிற்பது போன்று உள்ளது.
 
அந்த பெண் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்ததும் அவரின் இணையை கட்டிபிடிக்கிறார். பின் அவர்களை நோக்கி கூட்டத்தினர் மகிழ்ச்சி ஆரவாரங்களை எழுப்புவது போன்று அந்த வீடியோவில் தெரிகிறது.
 
ஆனால் அதன்பின் அவர்கள் இஸ்லாமிய மத கோட்பாடுகளுக்கு முரணாக நடந்து கொண்டதாக போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இரானின் இஸ்லாமிய சட்டங்களின்படி, ஆண் பெண் பொது இடங்களில் ஒன்றாக இருப்பதும், மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதும் குற்றமாகும்.
 
அந்த தம்பதியினர் பொதுமக்களின் கோரிக்கைபடி போலிஸாரின் பிடியில் வைக்கப்பட்டுள்ளனர் என அந்த மாகாணத்தின் துணை போலிஸ் ஆணையர் தெரிவித்துள்ளார்.
 
ஆனால் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்த சம்பவம் இரானில் கடைபிடிக்கப்பட்டு வரும் சமூக கட்டுப்பாடுகள் குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்களை எழுப்பி உள்ளன.
 
"கொண்டாட வேண்டிய நேரத்தில் அவர்கள் போலிஸ் பிடியில் அகப்பட்டு பிணையில் வரவேண்டிய சூழலில் சிக்கியுள்ளனர்" என டிவிட்டரில் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
 
"இது வேண்டுமென்றே கேமராவிற்காக நடைபெற்ற ஒன்று. திருமணம் போன்று தனிப்பட்ட ஒரு நிகழ்வை ஏன் விளம்பர படுத்த வேண்டும்" என ஒரு தரப்பினர் டிவிட்டரில் கேள்வி எழுப்புகின்றனர்.
 
பொது வெளியில் நடந்து கொள்வது குறித்தான இரானின் சட்டம் சர்வதேச கவனத்தை பெறுவது இது முதல்முறையன்று .