வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 28 மே 2020 (16:34 IST)

கொரோனா வைரஸ், உம்பான், வெட்டுக்கிளிகள், சுட்டெரிக்கும் வெயில் - தாங்குமா இந்தியா?

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்தே இன்னும் நாம் மீண்ட பாடில்லை. எப்போது இயல்பு நிலை திரும்பும் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் அவ்வப்போது எழுந்து கொண்டிருக்கிறது. முதலில கொரோனா, அடுத்து உம்பான் புயல், வெட்டுக்கிளிகள் என தொடர் பிரச்சனைகள் பட்டியலில் வந்து சேர்ந்திருக்கிறது சுட்டெரிக்கும் வெயில்.

அடுத்தடுத்த சவால்களை எதிர்கொண்டு வருகிறது இந்தியா. செவ்வாயன்று இந்தியத் தலைநகர் டெல்லி 47.6 டிகிரி வெப்பநிலையை பதிவு செய்தது.

வட இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில் கடுமையான அனல் காற்று வீசி வருகிறது.ராஜஸ்தானில் சுரு என்ற இடத்தில் அதிகபட்சமாக 50 டிகிரி வெப்பநிலை பதிவாகி உள்ளது.

இந்தியாவிலேயே இதுதான் மிக அதிகம். வீட்டை விட்டு மக்கள் வெளியேவர வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பல தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு மே மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை இதுவாகும்.சொல்லப்போனால் செவ்வாயன்று சுருவில் பதிவான வெப்பநிலைதான், அந்நாளில் உலகிலேயே அதிக வெப்பம் கொண்ட இடமாக இருந்துள்ளதாக பருவநிலையை பதிவு செய்யும் இணையதளமான எல் டொரடோ கூறுகிறது.

இந்த வெப்பத்திற்கு என்ன காரணம்?

இந்தளவு அதிக வெப்பத்திற்கும் கடுமையான அனல் காற்றுக்கும் காரணம், சமீபத்தில் கரையை கடந்த உம்பான் புயல்தான் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த வாரம் கரையை கடந்த உம்பான் புயல் கிழக்கு இந்தியா மற்றும் வங்க தேசத்தில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது.

 
"இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்த காற்றின் ஈரப்பதத்தை உம்பான் புயல் உறிஞ்சிவிட்டதாக" பிராந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் குல்தீப் ஸ்ரீவஸ்தவா இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடுமையான வெப்பத்தால் சமீப ஆண்டுகளில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. எனினும், தறபோது நிலவும் இந்த வெப்பம், மக்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து எந்தத் தரவுகளும் இதுவரை இல்லை.

கொரோனா ஊரடங்கால், ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு இன்னும் நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். பலருக்கும் சரியான உணவு மற்றும் தண்ணீர் கிடைப்பதில்லை. இந்த அனல்காற்றால் அவர்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.

அடுத்த பிரச்சனைக்கு செல்வோம்

வெட்டுக்கிளி தாக்குதல்கள்

இந்தியாவின் மேற்குப் பகுதியில் வெட்டுக் கிளிகள் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பெருமளவில் பயிர்களை நாசம் செய்துள்ளன.

கடுமையாக வீசிவரும் அனல்காற்றால் வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசம் செய்வதை கட்டுப்படுத்துவது சிரமமாகி உள்ளது.

தகிக்கும் வெப்பத்தில் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள், வாகனம் பொருத்தப்பட்ட தெளிப்பான்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் ட்ரோன்கள் ஆகியவற்றின் மூலம் வெட்டுக்கிளிகளை துரத்த போராடி வருகின்றனர்.

இந்தத் தாக்குதல் மிகவும் மோசமானதாக இருக்கிறது என்று ராஜஸ்தான் மாநிலத்தில் தாவர பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரியும் ஓம் பிரகாஷ் கூறுகிறார்.

இந்தியா இதுபோன்ற வெட்டுக்கிளிகள் தாக்குதலுக்கு ஆளாவது இது முதல் முறையல்ல. 1964ஆம் ஆண்டிலிருந்து 1997 வரை 25 முறை இதுபோன்ற சம்வங்கள் நடந்திருக்கிறது.

1939ஆம் ஆண்டில் தற்போது பாகிஸ்தானில் இருக்கும் கராச்சியில் வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசம் செய்வது தொடர்பாக எச்சரிக்கை விடுக்கும் அமைப்பை அரசு அமைத்தது.

1946ஆம் ஆண்டு இந்திய அரசு தனியே இதற்கான அமைப்பை அமைத்தது.
வெட்டுக்கிளிகள் விவசாய நிலங்களை சேதம் செய்வதை கட்டுப்படுத்தவில்லை எனில், உணவுக்கான பயிர்கள் நாசம் செய்யப்பட்டு, பஞ்சம் ஏற்படும் நிலைக்கு தள்ளப்படலாம்.
90 நாடுகளில் சுமார் 45 மில்லியன் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு வெட்டுக்கிளித் தாக்குதலுக்கு ஆளாகும் அபாயம் இருப்பதாக ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவிக்கிறது.