செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: சனி, 4 ஏப்ரல் 2020 (22:02 IST)

கொரோனா வைரஸ்: மத நிகழ்வில் பங்கேற்றவர்களை கண்டறிய முயலும் மலேசிய அரசு

483ஆக அதிகரித்துள்ளது. நோய்த்தொற்று காரணமாக இதுவரை 57 பேர் பலியாகியுள்ளனர்.

இன்று ஒரே நாளில் புதிதாக 150 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட அதே வேளையில், 88 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன் மூலம் முழுமையாக குணமடைந்தோர் எண்ணிக்கை 915ஆக உயர்ந்துள்ள நிலையில், இது ஒட்டுமொத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் 26.7 விழுக்காடு என மலேசிய சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.
தற்போது 99 நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருப்பதாகவும் அவர் இன்றைய செய்தியாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டார்.

மத நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களால் அதிகமாகும் நோயாளிகள் எண்ணிக்கை

நாடு முழுவதும் பதிவாகி உள்ள நோய்த் தொற்று சம்பவங்களில் 44.36 விழுக்காடு கோலாலம்பூரில் நடைபெற்ற மத நிகழ்வுடன் தொடர்புள்ளவை என்று சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
அந்நிகழ்வில் பங்கேற்றவர்களில் மேலும் மூவாயிரம் பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட வேண்டியுள்ளதாக அமைச்சு தெரிவித்தது.

அந்த பங்கேற்பாளர்களையும் அவர்தம் குடும்பத்தாரையும் தேடும் நடவடிக்கை நீடித்து வருவதாக டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார். அவர்கள் தாமாக முன்வந்து மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

நோய்த் தொற்று பாதிப்பு அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகள் தனிமைப்படுத்தப் பட்டதற்கு நல்ல பலன் கிடைத்திருப்பதாக குறிப்பிட்ட நூர் ஹிஷாம், இந்த நடவடிக்கையின் மூலம் புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதாக தெரிவித்தார்.

40 ஆயிரம் பேரை அடையாளம் கண்டுள்ள மலேசிய காவல்துறை

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புள்ளதாக கருதப்படும் 40 ஆயிரம் பேரை அடையாளம் கண்டுள்ளதாக மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ் தொற்று கொத்துச் சங்கிலியில் அண்மையில் கோலாலம்பூர் சமய நிகழ்வில் பங்கேற்றவர்களும் இருப்பதாக காவல்துறை தலைவர் அப்துல் ஹமிட் படோர் தெரிவித்துள்ளார்.

"கோலாலம்பூர் சமய நிகழ்வில் பங்கேற்ற 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தப்லிக் உறுப்பினர்களை அடையாளம் காணும் பணியில் சுகாதார அமைச்சுக்கு மலேசிய காவல்துறை உதவி செய்தது. கையில் உள்ள தரவுகளின் அடிப்படையில், குறிப்பிட்ட சில வழிமுறைகள் மூலம் நோய்த் தொற்றியோரும், அவர்களுக்கு நெருக்கமானவர்களும் அடையாளம் காணப்பட்டனர். மேலும் அவர்கள் மூலம் வேறு யாருக்கெல்லாம் நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கும் என்றும் கணக்கிட்டோம்.

"அந்த வகையில் தற்போதுள்ள தகவல்களின் அடிப்படையில் எந்தெந்த பகுதியில் தனி நபர்கள் அல்லது குழுக்களுக்கு நோய்த் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை காவல்துறை அடையாளம் கண்டுள்ளது.

"ஏராளமான தப்லிக் உறுப்பினர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவர்களை விமர்சிக்கவோ, புறக்கணிக்கவோ வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்," என்றார் அப்துல் ஹமிட் படோர்.
சிறையிலும் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன

இதற்கிடையே பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறிய குற்றச்சாட்டின் பேரில் ஏராளமானோர் கைதானதால் நாட்டில் உள்ள சிறைச்சாலைகள் நிரம்பி வழிவதாக கூறப்படுவதை நூர் ஹிஷாம் மறுத்துள்ளார். மேலும் சிறைச்சாலையிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனைகள் நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

"பொது வெளியில் மட்டுமல்லாது சிறைச்சாலைகளிலும் அதிகமானோர் கூடுவதை தடுத்து வருகிறோம். சிறையில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறது.

"பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை முழுமையாக கடைபிடிக்க வேண்டிய பொறுப்பு பொதுமக்களுக்கு உள்ளது. சமூக ஒழுக்கத்துடன் அனைவரும் செயல்பட வேண்டும். இல்லையெனில் நமது நாட்டை நாமே ஆபத்தான நிலைக்கு தள்ளியது போல் ஆகிவிடும்," என்றார் டாக்டர் நூர் ஹிஷாம்.

பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மேலும் நீட்டிக்கப்படுமா என்ற வழக்கமான கேள்வியை அவர் இன்றும் எதிர்கொண்டார். இது குறித்து தீர்மானிப்பதற்கான நேரம் இன்னும் வரவில்லை என்றும், பல்வேறு தரவுகளின் அடிப்படையில் மட்டுமே முடிவு எடுக்க இயலும் என்றும் அவர் தெரிவித்தார்.

இத்தகைய முடிவை எடுப்பதற்கு ஏப்ரல் 10ஆம் தேதி சரியான தேர்வாக இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், அதற்குள் தேவையான தரவுகள் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

409 தனிமைப்படுத்தும் மையங்களில் 40 ஆயிரம் பேர் தங்க முடியும்

மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், அவர்களைத் தனிமைப்படுத்தவும் 409 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் நூறு விழுக்காடு தயார் நிலையில் இருக்கும் பட்சத்தில், 40 ஆயிரம் பேரை ஒரே சமயத்தில் தனிமைப்படுத்த இயலும் என மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்துள்ளார்.

தற்போது 90 தனிமைப்படுத்தும் மையங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். ஏப்ரல் 3ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 1,888 பேர் உட்பட மொத்தம் 4,933 மலேசியர்கள் தனிமைப்படுத்தப் பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இவர்களுள் 711 பேர் நேற்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்ததாக குறிப்பிட்ட அவர், நாட்டில் தனிமைப்படுத்தப்படும் மையங்கள் போதுமான அளவில் இருப்பதால் கவலைகொள்ளத் தேவையில்லை என்றார்.

தனிமைப்படுத்தப் படுபவர்கள் டிரக் வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டதாக வெளியான தகவலை திட்டவட்டமாக மறுத்த அவர், அனைவரும் பேருந்துகளில் மட்டுமே அழைத்துச் செல்லப்பட்டதாக குறிப்பிட்டார். சம்பந்தப்பட்டவர்களின் உடமைகள் மட்டுமே டிரக் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்.

தனிமைப்படுத்தப் பட்டவர்களுக்கு மலேசியாவை சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்று இலவச சிம் கார்ட் அளித்ததுடன், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த 10 GB டேட்டாவும் அளித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.