வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வெள்ளி, 13 மார்ச் 2020 (21:40 IST)

கொரோனா வைரஸ்: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மனைவிக்கு கொரோனா, வெறிச்சோடும் நகரங்கள், ரத்தாகும் நிகழ்வுகள்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வண்ணம் உலகெங்கிலும் பல நாடுகளிலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன; அதேபோல் கலாசார மற்றும் கலை தொடர்பான நிறுவனங்களும் மூடப்பட்டு வருகின்றன.
 
அமெரிக்காவில் பெரும் விளையாட்டு போட்டிகள், நிகழ்வுகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
 
இந்நிலையில், கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
 
சமீபத்தில் பிரிட்டன் சென்று திரும்பிய ஜஸ்டின் ட்ரூடோ மனைவி சோஃபிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதுஇந்த நிலையில் மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் அடுத்த 14 நாட்களுக்கு  தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.
 
உலகின் மிக முக்கிய அருங்காட்சியகங்கள் மற்றும் கலைகாட்சிகூடங்கள் பெரும்பாலும் முடங்கியுள்ளன.
 
நெதர்லாந்தில் உள்ள அருங்காட்சியகங்கள் நோய் தொற்று பரவாமல் தடுக்க மார்ச் மாதம் இறுதி வரை மூடப்பட்டுள்ளது.
 
கத்தாரில் உள்ள அனைத்து திரை அரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு மையங்கள் மூடப்பட்டுள்ளது.
 
பிரேசில் அதிபருக்கு கொரோனா சோதனை
 
பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூவுக்கு கொரோனா வைரஸ் செய்யப்பட்டுள்ளது. சோதனை முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை.
 
அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த பொல்சனாரூவின் செய்தி தொடர்பாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பொல்சனாரூவுக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது.
 
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரிசோதனை தாமதப்படுத்தப்படுகிறதா ?
 
அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், சிஎன்என் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின் போது, இதுவரை எத்தனை அமெரிக்கர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று குறித்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கான தரவுகள் குறித்து நிபுணர்களிடம் தான் கேட்க வேண்டும் என்று மைக் பென்ஸ் பதிலளித்தார்.
 
அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையங்கள் அளித்த தரவுகளின்படி இதுவரை அமெரிக்காவில் 11,079 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 
ஆனால் இன்னும் சில அமெரிக்க அரசாங்க அதிகாரிகள், எவ்வளவு பேருக்கு பரிசோதிக்கப்பட்டுள்ளது என்ற தரவுகளை தெளிவாக கூறமுடியாது, ஏனெனில் பலர் தனியார் மருத்துவமனைகளில் பரிசோதித்துள்ளனர் என்று கூறுகின்றனர்.
 
தென் கொரியாவில் இதுவரை 210,000 மக்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதை அறிய பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தென் கொரியாவில் மட்டும் ஒரு நாளைக்கு 20,000 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இதற்கு நேர்மாறாக அமெரிக்காவில் ஒரு நாளைக்கு 1000 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
 
கனடாவில் இதுவரை 100 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 4,185 பேருக்கு மட்டுமே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
ஐ.நா. தலைமையகத்திலும் கொரோனா
 
நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் பிலிப்பைன்ஸ் ராஜரீக அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஏஎஃப்பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.
 
கடந்த திங்கட்கிழமையன்று ஐ.நா. தலைமையகத்துக்கு இவர் வந்திருந்தார். கிட்டத்தட்ட 3000 பேர் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் பணியாற்றி வருகின்றனர்.
 
அமெரிக்க சுகாதார துறை ஆய்வகங்களில் மிக குறைந்த அளவிலான முதலீடே செய்யப்பட்டுள்ளது என்பது இந்த நேரத்தில் தெரியவருகிறது.
 
பரிசோதனைக்கு தேவையான மருத்துவ கருவிகள் மற்றும் இயந்திரங்கள் நம்மிடம் போதிய அளவில் இல்லை, கையுறைகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது என அமெரிக்க நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் சிலர் வெளிப்படையாக தங்கள் குறைகளை விவரித்தனர்.