புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (21:46 IST)

கொரோனா வைரஸ்: 10 லட்சம் போலி மருந்துகளை நீக்கிய அமேசான் - coronavirus news

கொரோனா வைரஸ்: 10 லட்சம் போலி மருந்துகளை நீக்கிய அமேசான் - coronavirus news
உலகின் அனைத்து நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவாமல் போனாலும், பெரும்பாலான நாடுகளில் கொரோனா பரவ வாய்ப்புள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
 
கொரோனா தொற்று உண்டாக்கும் கோவிட்-19 பாதிப்புக்கு தீர்வு தரும் மருந்து எனும் பெயரில் விற்கப்பட்ட 10 லட்சத்துக்கும் மேலான போலி மருந்துகளை இணையதள வர்த்தக நிறுவனமான அமேசான் தங்கள் தளத்தில் இருந்து நீக்கியுள்ளது.
 
அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட, நேர்மையற்ற விற்பனையாளர்களின் போலி மருந்துகளை நீக்கியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் அமேசான் தெரிவித்துள்ளது.
 
சீனா உள்பட 50க்கும் மேற்பட்ட உலக நாடுகள் தங்கள் நாட்டில் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று உண்டாகியுள்ளதை உறுதி செய்துள்ளன.
 
ஆசிய, ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ள நிலையில், கோவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதை ஆப்ரிக்க நாடான நைஜீரியாவும் உறுதி செய்துள்ளது.
 
ஆப்ரிக்காவின் வடக்கு பகுதியில் உள்ள அரபு நாடுகள் அல்லாமல், சகாரா பாலைவனத்துக்கு தெற்கே உள்ள ஆப்ரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது இதுவே முதல் முறை.
 
பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி
 
கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக, ஆசியாவின் பிற நாடுகளில் உள்ளதுபோலவே, இந்திய பங்குச்சந்தையும் வெள்ளிக்கிழமை பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
 
சென்செக்ஸூம், நிஃப்டியும் கிட்டத்தட்ட 2.5% வீழ்ச்சியை கண்டுள்ளன. இந்த வாரம் மட்டும், இந்த இரண்டு சந்தைகளும், சுமார் 6% வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
 
கடந்த 2016ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் ஏற்பட்ட வீழ்ச்சியைப்போல, ஒரு மோசமான சரிவை நோக்கி இந்த சந்தைகள் சென்றுகொண்டு இருக்கின்றன.
 
இந்திய பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி
 
கடந்த ஆறு நாட்களாக தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது இந்திய பங்குச்சந்தை. சென்செக்ஸின் வீழ்ச்சி காரணமாக, இதுவரை முதலீட்டாளர்கள் ரூ.5 லட்சம் கோடி இழந்துள்ளதாக தி எகனாமிக் டைம்ஸ் மற்றும் மிண்ட் பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன.
 
2008ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, இப்போதுதான் உலகச்சந்தை இத்தகைய ஒரு வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
 
கடந்த சில வாரங்களாக உலகின் பல நாடுகளிலும், கோவிட் 19 என்று கூறப்படும் கொரோனா வைரஸின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. சீனாவை தாண்டி நைஜீரியா, தென் கொரியா என பல நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் தாக்கம், பங்குச்சந்தையிலும் எதிரொலித்துள்ளது.
 
வரலாற்றில் இல்லாத அளவிற்கு, வால் ஸ்ட்ரீட்டில் டெள டோ ஜோன்ஸ் குறியீட்டு எண் நேற்று (வியாழக்கிழமை) 1200 புள்ளிகள் வீழ்ந்துள்ளன. ஆசியாவைப் பொருத்தவரை, ஜப்பான், ஆஸ்திரேலியா, கொரியா மற்றும் சீன சந்தைகளில் தாக்கம் அதிகமாக இருந்துள்ளது.
 
ஜப்பானில் நிக்கி குறியீட்டு எண் வெள்ளிக்கிழமை மட்டும் 3% வீழ்ந்துள்ளன. இந்த வாரத்தில் மட்டும் நிக்கி 9% வீழ்ந்துள்ளது.
 
ஆஸ்திரேலியாவின் முக்கிய சந்தையான ASX200 வெள்ளிக்கிழமை மட்டும் 3.5% வீழ்ச்சியை கண்டுள்ளது.
 
"இந்த வைரஸின் தாக்கம் சில வாரங்களாக நீடித்து வரும் நிலையில், இந்த பரவலை தடுப்பது, அதனால் ஏற்படும் பொருளாதார தாக்கத்தை கையாள்வது எந்த அளவிற்கு சாத்தியம் என்ற ஒரு நிலையற்ற சூழல் உள்ளது. உற்பத்தித் துறையை பொருத்தவரையில், கொரோனாவின் பரவலால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைவிட, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது என்ற கலவையான முடிவை பார்க்க முடிகிறது." என்கிறார் ஐ.ஹெச்.எஸ் மார்கிட்டின் மூத்த பொருளாதார நிபுணரான பெனார்ட்.
 
ஸ்டாண்டர்ட் சாட்டர்ட் வங்கியின் மாயங்க் மிஸ்ரா, "வைரஸ் பரவலை தடுப்பதற்கான எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக, வைரஸ் தொற்று சீனாவில் குறைந்து வந்த நேரத்தில், பங்குச்சந்தை வீழ்ச்சி சற்றே தணிந்து இருந்தது. ஆனால், இப்போது, சீனாவைத்தாண்டி, தென்கொரியா, இத்தாலி, ஜப்பான் என இது அதிகம் பரவத்தொடங்கியுள்ளதால், பலரின் கவனத்தை இது ஈர்த்துள்ளது என்றே கூறவேண்டும்." என்கிறார்.