செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: ஞாயிறு, 31 மே 2020 (00:28 IST)

கொரோனா வைரஸ்: "உலக சுகாதார நிறுவனத்துடனான உறவை முறித்துக்கொள்கிறோம்" - டிரம்ப்

உலக சுகாதார நிறுவனத்துடனான அமெரிக்காவின் உறவை துண்டிப்பதாக அந்த நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று விவகாரத்தில் சீனாவை பொறுப்பாக்குவதில் உலக சுகாதார நிறுவனம் தோல்வியடைந்து விட்டதாக அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சீனாவை தண்டிக்கும் நோக்கத்தோடு கூடிய அறிவிப்புகளை வெளியிடும்போது பேசிய டிரம்ப், "உலக சுகாதார நிறுவனம் சீனாவின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது" என்று குற்றஞ்சாட்டினார்.

உலக சுகாதார நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டு வரும் நிதி மற்ற அமைப்புகளுக்கு வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

 
உலக சுகாதார நிறுவனத்துக்கு அதிக நிதி அளிக்கும் ஒற்றை நாடான அமெரிக்கா, கடந்த 2019இல் மட்டும் 400 மில்லியன் டாலர்களுக்கு மேல் அளித்துள்ளது.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் களம் காணவுள்ள டிரம்ப், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் திறம்பட செயல்படவில்லை என்று உள்நாட்டிலேயே விமர்சிக்கப்பட்டு வருகிறார். ஆனால், டிரம்போ நோய்த்தொற்று பரவலுக்கு சீனாவே காரணமென்று தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.

 

கோவிட்-19 நோய்த்தொற்று பரவலால் உலகிலேயே மிகவும் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில் இதுவரை 1,02,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
டிரம்ப் கூறியது என்ன?
 
"இன்று உலக சுகாதார நிறுவனத்துடனான எங்கள் உறவை துண்டித்துவிட்டு, அந்த நிதியை மற்ற உலகளாவிய பொது சுகாதார தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கவுள்ளோம்" என்று டிரம்ப் வெள்ளை மாளிகையில் தெரிவித்தார்.

சீனா "உலகளாவிய பெருந்தொற்றை பரப்பியது. இதன் விளைவாக அமெரிக்கா ஒரு லட்சத்துக்கும் அதிகமான உயிர்களை இழந்துள்ளது" என்று அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் வைரஸ் விவகாரத்தில் "உலகத்தை தவறாக வழிநடத்த" உலக சுகாதார நிறுவனத்திற்கு சீனா அழுத்தம் கொடுப்பதாக டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.
பின்னணி என்ன?
IMAGES

கொரோனா வைரஸ் பரவலை கையாள்வது தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தை முதல் முறையாக கடந்த மாதம் டிரம்ப் விமர்சித்திருந்தார். மேலும், உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதில் "அதன்
அடிப்படை கடமையில் தோல்வியுற்றது" என்று கூறிய டிரம்ப், அதற்கான நிதியுதவியை நிரந்தரமாக நிறுத்தப்போவதாக அச்சுறுத்தினார்.

"கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் நீங்களும் உங்களது
நிறுவனமும் தொடர்ச்சியாக தவறான நடவடிக்கைகளை எடுத்ததன் விளைவாக தற்போது உலக நாடுகள் பெரும் விலையை கொடுத்து வருகின்றன" என்று கடந்த மே 18ஆம் தேதியன்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயசஸுக்கு எழுதிய கடிதத்தில் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

"சீனாவின் கைப்பாவையாக" உலக சுகாதார நிறுவனம் செயல்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இதைத்தொடர்ந்து கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.