செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : வியாழன், 29 அக்டோபர் 2020 (15:54 IST)

கொரோனா வைரஸ்: அச்சுறுத்தும் இரண்டாம் அலை - பல ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் முடக்க நிலை

ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையை எதிர்கொள்வதால் அந்த நாடுகள் மீண்டும் தேசிய அளவிலான முடக்க நிலையை அமல்படுத்துகின்றன.

பிரான்ஸில் வரும் வெள்ளிக்கிழமை முதல் அத்தியாவசியப் பணிகள் மற்றும் மருத்துவக் காரணங்களுக்காக மட்டுமே ஆட்கள் வீட்டை விட்டு வெளியில் செல்ல  அனுமதிக்கப்படுவர்.
 
இது தொடர்பாகப் பேசிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோங், கொரோனா வைரஸின் முதல் அலையை விட மோசமான இரண்டாவது அலை நாட்டைத் தாக்கும் இடர்பாடு இருப்பதாகத் தெரிவித்தார்.
 
பிரான்ஸை ஒப்பிடும்போது மென்மையான தேசிய முடக்க நிலை ஒன்றை ஜெர்மனியும் செயல்படுத்தவுள்ளது. இந்த ஜெர்மனி முடக்க நிலையில், உணவகங்கள்,  மதுக்கூடங்கள், உடற்பயிற்சி நிலையங்கள், திரையரங்குகள் ஆகியவை மூடப்பட்டிருக்கும் என்று சான்சலர் ஏங்கெலா மெர்க்கெல் புதன்கிழமை தெரிவித்தார்.
 
ஐரோப்பா முழுவதும் கோவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை திடீரென அதிகரிக்கின்றன. பிரிட்டனிலும் நிலை இப்படித்தான் இருக்கிறது. புதிதாக 310 கோவிட்  மரணங்களும், 24,701 புதிய தொற்றுகளும் ஏற்பட்டதாக பிரிட்டன் புதன்கிழமை அறிவித்தது.
 
பிரிட்டனில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், அந்நாட்டில் தினமும் 1 லட்சம் பேருக்கு கோவிட்-19 தொற்று ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வட்டார அளவில் பிரச்சனையை அணுகும் கொள்கையை மாற்றிக்கொள்வதற்கான அழுத்தத்தை அரசுக்குத் தருகிறது.
 
பிரான்ஸில் ஏப்ரலுக்குப் பிந்திய காலத்தில் இதுவரை இல்லாத அளவில் அதிக அளவில் தொற்றுகளும், மரணங்களும் நிகழ்ந்துள்ளன. புதன்கிழமை அந்நாட்டில் 34,437 கோவிட் தொற்றுகளும், 244 கோவிட் மரணங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளன.
 
ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடுகளில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் நிதிச்சந்தைகளில் பெரும் சரிவுகளுக்குக் காரணமாகியுள்ளன.
 
"இரண்டாவது அலையில் ஆழமாக சிக்கியுள்ளோம்" என்று ஐரோப்பிய கமிஷன் தலைவர் உர்சுலா வோன் டெர் லெயன் தெரிவித்துள்ளார். "இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் வித்தியாசமான கிறிஸ்துமசாக இருக்கும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பாவின் சில பகுதிகளில் கொரோனா வைரஸின் முதல் அலை கடுமையாகத் தாக்கியது. பிற  பகுதிகளில் பாதிப்பு அவ்வளவு மோசமாக இல்லை. மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளும்கூட காலப்போக்கில் தொற்று, மரணங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை  மிகவும் குறைத்தன. ஆனால், அந்நாடுகளின் பொருளாதாரங்கள் பாதிக்கப்பட்டன. கோடைக் காலத் தொடக்கத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அத்தியாவசியம்  அல்லாத கடைகளும், உணவகங்களும், மதுக்கூடங்களும் திறக்கப்பட்டன. ஆனால், ஆகஸ்ட் மாதம் முதல் மீண்டும் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கத்  தொடங்கின. கடந்த சில வாரங்களில் இந்த எண்ணிக்கை சீறிப்பாயத் தொடங்கியுள்ளது.
 
முதல் அலையில் அவ்வளவாகப் பாதிக்கப்படாத செக் குடியரசு, போலந்து ஆகியவையும் இந்த முறை தப்பிக்கவில்லை. இரண்டாவது அலையில் மிக மோசமான அளவில் தொற்றுகள் இருக்கும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
 
கோவிட் 19 முதல் அலையின் தொடக்க நிலையில் கோவிட் பாதிப்பின் மையமாக விளங்கிய ஐரோப்பிய நாடான இத்தாலி திங்கள்கிழமை மீண்டும் புதிய  கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் ஒரு மாத காலத்துக்கு அமலில் இருக்கும். அந்நாட்டில் உள்ள மதுக்கூடங்களும், உணவகங்களும் மாலை 6 மணி அளவில் மூடப்படவேண்டும். உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், திரையரங்குகள், நாடக அரங்குகள் ஆகியவை மூடப்பட்டிருக்கும். ஆனால்  அருங்காட்சியகங்கள் திறந்திருக்கும். கூட்டங்கள், திருமண விழாக்கள், ஞானஸ்னான நிகழ்வுகள் ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளும்,  பணியிடங்களும் மூடப்படவில்லை. ஆனால், பல பள்ளிகள் தொலைதூரக் கற்றல் முறைக்கு மாறிவிட்டன.
 
ஸ்பெயினில் புதிய அவசர நிலை அறிவிக்கப்பட்டு, அக்டோபர் 25 முதல் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கனாரி தீவுகளைத் தவிர நாட்டின் பிற  பகுதிகளில் உள்ளவர்கள் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை வீட்டை விட்டு வெளியேறக்கூடாது.
 
ஐரோப்பாவிலேயே மோசமான கோவிட் தொற்றுவிகிதம் செக் குடியரசில் நிலவுகிறது என்று ஐரோப்பிய நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. அந்நாட்டில் 14 நாட்களில் ஒவ்வொகு 1 லட்சம் பேரிலும் 1,448 பேருக்கு தொற்று ஏற்படுகிறது. இதையடுத்து அங்கு பகுதியளவு முடக்க நிலை  அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அயர்லாந்து குடியரசில் 6 வார காலத்துக்கு இரண்டாவது முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பிரிட்டன் எப்படி இருக்கிறது?
 
புதிய தொற்றுகளின் எண்ணிக்கை, கோவிட் மரணங்களின் எண்ணிக்கை, மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கை ஆகிய அனைத்துமே பிரிட்டனில்  அதிகரித்துவருகின்றன. ஆனால், தேசிய அளவில் மற்றொரு முடக்க நிலையை அமல்படுத்தக்கூடாது என்று கருதுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
 
ஆனால், தேவைக்கேற்ற அளவில் உள்ளூர் அளவிலான முடக்கநிலைகளை அறிவிப்பதற்கான நெறிமுறைகளை அதிகாரிகள் இந்த மாத தொடக்கத்தில்  அறிவித்தனர். லிவர்பூல் உள்ளிட்ட பல பகுதிகள் இந்த முறையின்கீழ் கடுமையான முடக்கநிலை அமல்படுத்தும் பிரிவில் உள்ளன.