செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 7 அக்டோபர் 2020 (13:54 IST)

கொரோனா வைரஸ் 6 அடிக்கு அப்பாலும் காற்றில் பரவும்

கொரோனா வைரஸ் கிருமிகள், ஆறு அடிக்கு அப்பாலும் காற்றில் பரவும் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புத்துறை (சிடிசி) தெரிவித்துள்ளது.
 
இது தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை திங்கட்கிழமை வெளியிட்ட அந்தத்துறை, காற்றில் பரவும் கொரோனா வைரஸ் கிருமிகள், சில மணி நேரம் உயிர்ப்புடன் இருப்பதாக சுகாதார வல்லுநர்கள் கூறுவதை உறுதிப்படுத்தியிருக்கிறது.
 
சில வாரங்களுக்கு முன்பு இதேபோன்ற ஓர் எச்சரிக்கையை அந்தத்துறை விடுத்திருந்த நிலையில், அது கடுமையான விவாதங்களுக்கு வழிவகுத்தது. பிறகு அந்த வழிகாட்டுதல்கள் திரும்பப் பெறப்பட்டன.
 
இந்த நிலையில், மீண்டும் அதே வழிகாட்டுதல்களை சிடிசி வெளியிட்டிருக்கிறது. அதில், சிறிய அறையில் காற்றோட்டம் சரியாக இல்லாத இடத்தில் வைரஸ் கிருமிகள் காற்றில் உயிர்ப்புடன் இருப்பது அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து ஆறு அடிக்கு அப்பால் இருக்கும் பிறருக்கு பரவியதன் மூலம் உறுதியாகியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
 
அத்தகைய சூழலில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து, மிகவும் சிறிய அளவிலான நுண் கிருமிகள் அதிக வீரியம் அடைந்து பிறரை தாக்க போதுமானதாக உள்ளது என்று விஞ்ஞானிகள் நம்புவதாக சிடிசி தெரிவித்துள்ளது.
 
ஒருவர் இருமும்போதோ தும்மல் செய்யும்போதோ சிறிய துளியாக காற்றில் வெளிப்படும் கிருமி, பொதுவாக தரையில் விழும் என்று சிடிசி முன்பே எச்சரித்திருந்தது. அதன் அடிப்படையிலேயே கொரோனா தொற்றில் இருந்து தவிர்க்கும் சமூக இடைவெளி, குறைந்தபட்சம் ஆறு அடி அளவுக்கு இருக்க வேண்டும் என்ற நிலை அமல்படுத்தப்படுகிறது.
 
இதேபோல, தும்மலின்போது வெளிப்படும் நீர்த்துளி அளவில் மிகச் சிறியவை. அவை புகை போல காற்றில் சில நொடிகளோ மணிக்கணக்கிலோ படரலாம் என்று சிடிசி கூறுகிறது. அந்த வகையில், கடந்த திங்கட்கிழமை அமெரிக்க விஞ்ஞானிகள் ஓர் மருத்துவ ஆய்வு இதழியில் வெளியிட்டுள்ள வெளிப்படையான கடிதத்தில், மிகவும் நெருக்கத்தில் இருப்பவருக்கு காற்று வழியாக தொற்று பரவும் என்று வலியுறுத்தியுள்ளனர். அந்த பரவலுக்கு முக்கிய காரணம், காற்றில் படர்ந்துள்ள வைரஸ் கிருமி என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
நெருக்கத்தில் இருக்கும் நபர், தொற்றால் பாதிக்கப்பட்டவர் உள்ள பகுதியில் எவ்வளவு நேரம் இருக்கிறாரோ, அதைப் பொருத்தே, காற்று வழியாக அந்த நபருக்கு தொற்று பரவுவது சாத்தியமாகிறது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
 
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சுவாசிக்கும்போதும் பேசும்போதும் வெளிப்படுத்தும் நீர்த்துளி, ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வைரஸ் நுண் கிருமிகளை தாங்கியவையாக இருக்கும் என்றும் அத்தகைய காற்று வழி பரவலை தடுப்பதில்தான் தற்போது அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
 
இருமல் மற்றும் தும்மலின்போது வெளிப்படும் நீர்த்துளிகளை விட, காற்று வழியாக பரவும் ஏரோசொல் எனப்படும் காற்றில் பரவும் திரவத்துளிகள் அதிக தூரம் செல்லும் என்பதை பொது சுகாதாரத்துறையினர் வேறுபடுத்திப் பார்க்க புரிந்து வேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர்.
 
உள்ளரங்கில் காற்றோட்டம் குறைவான இடங்களை விட, வெளிப்புற பகுதி செயல்பாடுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது அவசியம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.