புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 25 ஜனவரி 2022 (10:52 IST)

கொரோனா: ஆன்லைனில் மெய்நிகர் சுற்றுலா - இனி இது புதிய வழக்கமா?

திருமணங்கள் முதல் தேர்தல் வரை டிஜிட்டல் முறைமைக்கு (system) மாறிவிட்ட சூழலில், சுற்றுலாத்துறையில் டிஜிட்டல் மாற்றம் எப்படி இருக்கிறது? நாம் போகவேண்டியதில்லை. அந்த இடமே நம்மைத் தேடி வந்தால் எப்படி இருக்கும்?
 
"ஒருவன்‌ தன்‌ வாழ்நாளில்‌ பத்தாயிரம்‌ மைல்‌ பயணம்‌ செய்திருக்க வேண்டும்‌, பத்தாயிரம்‌ புத்தகங்களைப்‌ படித்திருக்க வேண்டும்‌' என்பது சீனப்‌ பழமொழி. மனிதனின் அனுபவம் பயணங்களால்தான் பண்படுத்தப்படுகிறது. இது மனிதவாழ்வின் பூரணத்துவத்தில் பயணங்களுக்கு இருக்கும் பங்கை உணர்த்தும் வாக்கியம்.
 
இப்படியான பயண அனுபவத்தை, திட்டமிட்டுப் பெறும் நிகழ்வுக்குப் பெயர்தான் சுற்றுலா. அந்த நிகழ்வை சந்தைப்படுத்தும் முயற்சிதான் சுற்றுலாத்துறை வணிகம்.
 
வெறுமனே சுற்றிப்பார்ப்பது என்பதைக் கடந்து நோக்கங்களுடன் கூடிய கல்விச்‌ சுற்றுலா, வர்த்தகச்‌ சுற்றுலா, ஆன்மிகச்‌ சுற்றுலா, சரித்திரச்‌ சுற்றுலா, பண்பாட்டுச்‌ சுற்றுலா உள்ளிட்ட 16 வகையான சுற்றுலாக்களை தமிழ்நாடு அரசு பட்டியலிடுகிறது.
 
அதேபோல தனியார் அமைப்புகளும் நிறுவனங்களும் கூட தங்கள் கருத்தியலுக்கும், களப்பணிக்கும் ஏற்ப சுற்றுலாக்களை ஏற்பாடு செய்வது வழக்கம். மொத்தத்தில் சுற்றுலா என்பது தனிமனிதன் முதல் அரசாங்கம் வரை அனைத்துக்குமான பொதுப்பொருள்.
 
கொரோனாவின் தாக்கம் :
ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக உலகின் எல்லாத் துறைகளிலும் தன் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா சுற்றுலாத்துறையையும் விட்டுவைக்கவில்லை. சுற்றுலாத்துறையில் கொரோனாவால் பெரும் சரிவு ஏற்பட்டிருக்கிறது.
 
குறிப்பாக, தமிழ்நாட்டில் பெரும் சரிவைச் சந்தித்துள்ளதாக தமிழக அரசு தெரிவிக்கிறது. 2016 ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான சுற்றுலாப் பயணிகள் வருகைக்கும், 2020ஆம் ஆண்டில் பதிவான பயணிகளின் வருகைக்கும் இடையிலான வேறுபாடு இந்த சரிவை இன்னும் தெளிவாகப் புரியவைக்கும்.
இந்த சரிவுக்குக் காரணம் கொரோனா என்றாலும் இதற்கான மாற்று ஏற்பாடு என்ன என்பது குறித்த சிந்தனைகள் எல்லாத் துறைகளையும் போலவே சுற்றுலாத் துறைக்கும் தேவையாயிருந்தன.
 
டிஜிட்டலுக்கு புலம்பெயர்ந்த வைபவங்கள்:
தேவை தான் படைப்பை உருவாக்குகிறது என்பதற்கான மெய்சாட்சியாக, கொரோனா ஏற்படுத்திய தேவை, டிஜிட்டல் படைப்புகளுக்கும் அதன் விரிவாக்கத்துக்கும் அடிகோலியது.
 
விளைவு, திருமணம் முதல் தேர்தல் வரை எல்லாமும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. இருந்த இடத்தில் இருந்தபடி பிரசாரம் செய்கின்றனர் அரசியல் தலைவர்கள். ஆன்லைனில் நேரலையில் அருளாசி வழங்குகிறார்கள் சில ஆன்மிகத் தலைவர்கள். அப்படியானால் சுற்றுலா?
 
காண வேண்டிய இடம் கை கால் முளைத்து கண்முன்பாகவா கிளம்பி வரும்? ஆம். வரும் என்று சாத்தியப்படுத்தியிருக்கிறது அறிவியல். அந்த சாத்தியத்தை தேவையாக்கியிருக்கிறது கொரோனா.
 
சுற்றுலா தலங்களின் காட்சியைக் கண்ணால் காணும்போது மனித மனம் அடையும் பரவசத்தை, இருந்த இடத்திலிருந்தே ஏற்படுத்தும் வி.ஆர். (Virtual Reality) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுற்றுலாத்துறையும் மெய்நிகர் சுற்றுலாக்களைத் தொடங்கியது.
 
இந்திய சுற்றுலா துறை ஒவ்வொரு ஆண்டும் பாரத் பர்வ் என்ற கண்காட்சியை நடத்தும். ஆனால், கடந்த 2021ஆம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக, இந்தக் கண்காட்சி மெய்நிகர் வடிவில் நடத்தப்பட்டது. இப்போதும் இந்த இணைப்பின்வழி அந்தக் கண்காட்சியை நீங்கள் காணலாம்.
 
குறிப்பிட்ட இணைய வழி மூலம் நீங்கள் கண்காட்சியின் அனைத்துப் பகுதிகளுக்கும் போகலாம். ஆயுதப்பிரிவு, கைவினைப் பொருட்கள், உணவு அங்காடி உள்ளிட்ட அனைத்தும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. உள்ளே ராணுவ அணிவகுப்பு, ராணுவ இசைப்பாடல்கள் ஆகியவை உங்களுக்கு திரையிடப்படும். நீங்கள் நினைக்கும்போது வெளியேறி அடுத்த அரங்குக்குள் செல்லலாம்.
 
இணைப்பு: https://www.bharatparv2021.com/apps/vf/tourism/v1/home
இந்த வரிசையில் தமிழ்நாடு சுற்றுலா துறையும் மெய்நிகர் சுற்றுலாக்களை முறைப்படுத்தி வருகிறது.
 
தஞ்சை பெரியகோயில், ஊட்டி மலை ரயில் என தமிழகத்தின் தனித்துவம் வாய்ந்த பல சுற்றுலாத்தலங்களை, ஏறக்குறைய முற்றிலுமாகச் சுற்றிப்பார்க்கும் விதத்தில் காட்சிப்படுத்தப்பட்ட காணொளிகள் இதில் பதிவேற்றப்பட்டுள்ளன.
 
மெல்ல மெல்ல கோயிலுக்குள் நுழைந்து, நந்தியை சுற்றிப்பார்த்து பின் பிரகார வலம் கூட வரமுடியும். இதற்கு குறைந்தபட்சம் ஒரு ஸ்மார்ட்போன் போதுமானது. மெய்நிகர் காட்சிகளுக்கான பிரத்யேக கருவிகள் மூலம் இவற்றைப் பார்க்கும்போது இருக்குமிடம் மறந்து நாம் பார்க்குமிடத்தில் பயணப்படுவதாகவே உணர்வோம்.
 
https://view360.in/virtualtour/thanjavurbigtemple/index.html
 
Incredible India - 2018
2018ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து இந்திய சுற்றுலாத்துறை வியத்தகு இந்தியா Incredible India திட்டத்தை தொடங்கி அதற்கான இணையதளமும் வெளியானது.
 
அப்போது இந்தியா சுற்றுலாத்துறை இணையமைச்சராக (பொறுப்பு) இருந்த அல்ஃபோன்ஸ், "இது இந்தியாவின் பல்வேறு தனித்துவங்களையும், வளமான தொன்மையையும் உலகுக்கு காட்ட ஒரு வாய்ப்பு" என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
 
இதுதொடர்பாக incredible india Caper travels, CEO, விஷால் பிபிசி தமிழுடன் பேசியபோது,
 
மெய்நிகர் சுற்றுலா ஒருபோதும் உண்மையான சுற்றுலாவுக்கு ஒப்பாக முடியாது. ஆனால், வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் சமயஙகளில் மக்களுக்கு குறைந்தபட்ச ஆசுவாசமாக இந்த மெய்நிகர் சுற்றுலாக்கள் இருக்கின்றன.
 
அதுபோக, ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு அதிகமான ஓய்வு நேரம் இருந்தது. அவர்கள் பேசிக்கொள்ளும்போது பயணங்களைப் பற்றி பேசிக் கொள்கிறார்கள். அப்போது அவற்றை குறைந்தபட்சம் ஒரு சினிமா பார்ப்பதைப் போல வீடியோ வடிவில் பார்க்கிறார்கள். அவ்வளவுதான்.
 
ஆனால், யாருக்குத் தெரியும். உடல்நலம் அல்லது பொருளாதாரக் காரணங்களால் பயணம் போக முடியாதவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகவும் இருக்கிறது.
 
பயணங்களை முன்கூட்டித் திட்டமிட இப்போதெல்லாம் ஒரு மெய்நிகர் சுற்றுலா போய்விடுவது என்பதும் வழக்கமாகிவிட்டது" என்று தெரிவித்தார்..
 
எதிர்காலம் என்ன?
 
மேலும், இந்தத் தொழில்நுட்பம் ஆரம்பத்தில் வந்தபோது, என்ன இருந்தாலும் நேரில் போவது போல வருமா என்ற கேள்விதான் இருந்தது. இதற்கு முன்பு ஆன்லைன் வகுப்புகளுக்கும் மின் நூல்களுக்கும் இதே கேள்விதான் முன்வைக்கப்பட்டது. ஆனால், வேறுவழியின்றி காலத்தின் தேவையாக மாறிவிட்டன மெய்நிகர் வகுப்பும் வாசிப்பும்.
 
ஆன்லைன் மூலம் பயணம் செய்யும் அனுபவமும் கூட இப்படி மாறினாலும் ஆச்சரியமில்லை. கொரோனாவால் பிரபலமானது என்றாலும் மக்களுக்குப் பிடித்துவிட்டால் அந்த முறைமை (system) வென்றுவிடும் என்றும் தெரிவிக்கிறார் விஷால்.