1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : புதன், 17 மார்ச் 2021 (09:22 IST)

கொரோனா தடுப்பூசி: "ஆஸ்ட்ராசெனிகா மருந்தால் ரத்தம் உறையும் அறிகுறியில்லை"

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக தயாரிப்பான ஆஸ்ட்ராசெனீகா தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டவர்களுக்கு ரத்த உறைவு அறிகுறிகள் ஏற்படுவதற்கான ஆபத்து  கிடையாது என்ற ஆய்வு நிறுவனத்தின் வாதத்தை உறுதிபட நம்புவதாக ஐரோப்பிய ஒன்றிய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான ஐரோப்பிய மருந்துவ ஏஜென்ஜி  தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் முன்னர் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கிய தங்களின் அமைப்பு எடுத்த முடிவில் உறுதியுடன் இருப்பதாக அந்த அமைப்பின் தலைமை அதிகாரி  எமெர் குக் தெரிவித்துள்ளார்.
 
ஆஸ்ட்ராசெனீகா தடுப்பூசி போட்டுக் கொண்ட நோயாளிகள் பலருக்கு ரத்தம் உறைவதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து சில நாடுகள் அந்த தடுப்பூசி போடும்  திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை ஐரோப்பிய மருந்துகள் ஏஜென்சி நடத்தி வரும் நிலையில், தடுப்பூசி  திட்டத்தை நிறுத்த வேண்டாம் என சம்பந்தப்பட்ட நாடுகளை உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
 
இந்த நிலையில், ஐரோப்பாவில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 17 லட்சம் பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், 37 பேர் மட்டுமே ரத்த உறைவு பாதிப்பை  எதிர்கொண்டது தெரிய வந்துள்ளதாக ஆஸ்ட்ராசெனீகா கூறியுள்ளது. இதேபோல, ஐரோப்பிய மருந்துகள் ஏஜென்சியும் தடுப்பூசி போட்டுக் கொண்வடவர்களில்  எல்லோருக்கும் இதுபோன்ற ரத்த உறைவு பாதிப்பு ஏற்படுவதில்லை என்று தெரிவித்துள்ளது.
 
அந்த அமைப்பின் தலைமை அதிகாரி எமெர் குக், "ரத்த உறைவு பிரச்னையால் பலரும் ஐரோப்பாவில் இருப்பதாக அறிகிறோம். ஆனால், அந்த பாதிப்பு,  தடுப்பூசியின் விளைவா என்பதை ஆராய்ந்து வருகிறோம். இதேவேளை, கொரோனா வைரஸை எதிர்க்கும் ஆற்றலை ஆஸ்ட்ராசெனீகா மருந்து பெற்றுள்ளது  என்பதை நாங்கள் முழுமையாக நம்புகிறோம்," என்று தெரிவித்துள்ளார்.
 
இதுவரை ரத்த உறைவு பிரச்னையை எதிர்கொண்டவர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையின் முழுமையான முடிவுகளை ஐரோப்பிய மருந்துகள் ஏஜென்சி வரும்  வியாழக்கிழமை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஐரோப்பிய நாடுகள் என்ன செய்கின்றன?
 
ஆஸ்ட்ராசெனீகா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் சிலருக்கு ரத்த உறைவு பாதிப்பு ஏற்படுவதாக கூறப்பட்டதையடுத்து, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி,  ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள், அந்த தடுப்பூசி திட்டத்தை இடைநிறுத்தியிருக்கின்றன. ரத்த உறைவு என்பது ரத்தத்தின் ஓட்டத்தில் தடங்களை ஏற்படுத்தக்கூடியது  என்பதால் அதை உடனடியாக சீராக்காவிட்டால் அது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக அமையும்.
 
இந்த நிலையில், தங்கள் நாட்டில் தடுப்பூசி திட்டம் இடைநிறுத்தப்பட்டது பற்றி ஜெர்மனி சுகாதார அமைச்சர் யென்ஸ் ஸ்ஃபான் கூறும்போது, "இது ஓர்  தொழில்முறை முடிவு. நாட்டின் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தொடர்பான மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் பரிந்துரை பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை," என  தெரிவித்தார்.
 
ஜெர்மனி நிதித்துறை அமைச்சர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், "ஐரோப்பிய மருந்துகள் ஏஜென்சி இந்த விவகாரத்தில் எடுக்கும் முடிவைத் தொடர்ந்து மீண்டும்  ஆஸ்ட்ராசெனீகா மருந்தை பயன்படுத்துவது பற்றி முடிவு செய்யப்படும்," என கூறியுள்ளார்.
 
ஆஸ்ட்ராசெனீகா தடுப்பு மருந்தின் குறிப்பிட்ட சில விநியோக பிரிவுகளில் இருந்து வந்த மருந்துகளின் பயன்பாட்டை ஆஸ்திரியா நாடு இடைநிறுத்தியிருக்கிறது.  இதேசமயம், பெல்ஜியம், போலாந்து, செக் குடியரசு, யுக்ரேன் ஆகிய நாடுகள், தொடர்ந்து ஆஸ்ட்ராசெனீகா தடுப்பூசியை பயன்படுத்துவோம் என தெரிவித்துள்ளன.
 
உலக அளவில் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை சமீப வாரங்களாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதற்கு மத்தியில் தடுப்பூசி திட்டங்கள்  பல நாடுகளில் செயல்படுத்தப்பட்டு வந்தாலும், அதிகரிக்கும் பாதிப்புகளுக்கு இணையாக ஐரோப்பாவில் தடுப்பூசி மருந்துகளின் விநியோகம் இல்லை என்ற கவலை  சில நாடுகளுக்கு உள்ளது.
 
இதேவேளை, இத்தாலி நாட்டில் தடுப்பூசி பயன்பாட்டை இடைநிறுத்திய நடவடிக்கை ஓர் அரசியல் முடிவு என்று கூறியிருக்கிறார் அதன் மருந்துவ துறை தலைமை  இயக்குநர் நிகோலா வரினி. "ஆஸ்ட்ராசெனீகா தடுப்பூசி மருந்து மிகவும் பாதுகாப்பானது என்றும் அதை பெற்றுக் கொண்டவர்களின் விகிதத்துடன் ஒப்பிடுகையில்,  பரவலாக சாதகமான முடிவுகளே வந்துள்ளன" என்று அவர் தெரிவித்தார்.
 
ஆஸ்ட்ராசெனீகா விளக்கம் என்ன?
 
தடுப்பூசி காரணமாக ரத்த உறைவு ஏற்படும் அபாயம் இருப்பதற்கான எந்த ஆதாரமும் கண்டறியப்படவில்லை என்று ஆஸ்ட்ராசெனிகா நிறுவனம் கூறுகிறது.
 
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டன் முழுவதும் 15 நரம்பு ரத்த உறைவு (டிவிடி) பிரச்னையை எதிர்கொண்ட நிகழ்வுகள், ஒரேயொரு நரம்பில் ரத்தம் உறைந்த  நிகழ்வு மற்றும் நுரையீரல் தக்கை அடைப்பு தொடர்பான 22 நிகழ்வுகள், நுரையீரலுக்குள் நுழைந்த ரத்தம் உறைதல் ஆகிய நிகழ்வுகள் பதிவாகியிருப்பதாக அந்த  நிறுவனம் கூறியுள்ளது.
 
இந்த புள்ளிவிவரங்கள் "பொதுவான மக்கள் தொகையில் இயல்பாகவே காணப்படும் பிரச்னைகளின் அறிகுறியே தவிர, உலகின் பிற பகுதிகளில் தங்களின் தடுப்பூசி  மருந்தை போட்டுக் கொண்டவர்களுடன் ஒப்பிடும்போது, இந்த எண்ணிக்கை குறைவு" என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
ஆக்ஸ்ஃபோர்டு-ஆஸ்ட்ராசெனீகா தடுப்பூசியை தயாரித்த ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பூசி குழுவின் இயக்குநர் பேராசிரியர் ஆண்ட்ரூ பொல்லார்ட் பிபிசியிடம் பேசும்போது,  "ஐரோப்பாவில் பெரும்பாலான தடுப்பு மருந்து டோஸ்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், பிரிட்டனில் ரத்த உறைவு நிகழ்வு தொடர்ச்சியாக இருக்கவில்லை" என  கூறியுள்ளார்.
 
பின்லாந்து நாட்டில் இந்த விவகாரம் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டதில் ஆபத்து அதிகரித்ததற்கான அறிகுறி இருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.  பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுவதில் எந்த சிக்கலும் இல்லை என்பதுதான் இதில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய சாரம்சம் என்றும் அவர்  கூறியிருக்கிறார்.
 
ஐரோப்பிய ஒன்றியத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் சுமார் 5.75 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அதன் உறுப்பு நாடுகளில் கொரோனா வைரஸ் எதிர்ப்பு திட்டங்கள் மிகத்தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.