புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 11 ஏப்ரல் 2020 (14:33 IST)

கொரோனாவால் 90 ஆண்டுகளில் இல்லாத அளவு பேரடி வாங்கப்போகும் உலக பொருளாதாரம்

கொரோன வைரஸ் தொற்று காரணமாக உலக பொருளாதார வளர்ச்சி இந்தாண்டு எதிர்மறையாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.

1930களில் ஏற்பட்ட மிக மோசமான பொருளாதார மந்தநிலைக்கு பிறகு, உலக பொருளாதாரம் இப்போதுதான் இவ்வளவு கடுமையான நெருக்கடியை சந்திக்க போகிறது என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிரிஸ்டலினா ஜார்ஜிவா கூறியுள்ளார்.

2021ஆம் ஆண்டில் கூட, இதிலிருந்து பாதி அளவே மீள முடியும் என்று அவர் கணித்துள்ளார்.

பல உலக நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளதால், நிறுவனங்கள் மூடப்பட்டு, ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக நிறுவனங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ மூடப்பட்டதால் 330 கோடி மக்கள், வேலையிழந்துள்ளார்கள் என ஐ.நாவின் ஆய்வு தெரிவிக்கிறது.

சர்வதேச நிதி ஆணையம் மற்றும் உலக வங்கியின் கூட்டம் அடுத்த வாரம் நடைபெற உள்ள நிலையிலேயே உலகப் பொருளாதாரம் குறித்த ஆரம்பகட்ட மதிப்பீடு குறித்து கிரிஸ்டலினா பேசினார்.

வளர்ந்து வரும் நாடுகள் இதனால் மிகவும் மோசமாக பாதிக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், அந்நாடுகளுக்கு பில்லியன் கணக்கிலான டாலர்கள் மதிப்புள்ள வெளிநாட்டு நிதி அந்த நாடுகளுக்குத் தேவைப்படும் என்றும் தெரிவித்தார்.

"2020ல் 160க்கும் மேற்பட்ட எங்கள் உறுப்பு நாடுகளில் தனி நபர் வருமானம் அதிகரிக்கும் என்று 3 மாதங்களுக்கு முன்னால் எதிர்பார்த்தோம். இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. தற்போது 170க்கும் மேற்பட்ட நாடுகளில் தனி நபர் வருமானம் வீழ்ச்சியடையும் என கணக்கிடப்பட்டுள்ளது" என கிரிஸ்டினா கூறினார்.

1930களில் ஏற்பட்ட பெருமந்தத்தை அடுத்து, இந்த உலகம் சந்திக்கும் மோசமான பொருளாதார சூழல் இதுவாக இருக்கும் என்று எதிர்ப்பாக்கிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்தாண்டின் இரண்டாம் பாதியில் கொரோனா வைரஸ் தொற்று நிலை சற்று சரியானாலும், அடுத்தாண்டு இதனால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து பாதி அளவே மீள முடியும் என்று குறிப்பிட்ட கிரிஸ்டலினா, இந்த நிலை மோசமானாலும் ஆகலாம் என்று எச்சரித்தார்.

வேலையில்லாமல் இருக்கும்போது வழங்கப்படும் பலன்களை நாடும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அந்நாடு தெரிவித்ததை அடுத்து கிரிஸ்டலினாவின் கருத்துகள் வெளியாகின.

வைரஸ் தொற்று தீவிரமாகிய மூன்றாவது வாரத்தில் அமெரிக்கர்கள் 66 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். கொரொனா நெருக்கடி காலகட்டத்தில் மொத்தம் 1.6 கோடி அமெரிக்கர்கள் வேலையிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா தொற்றால் அங்கு பல நிறுவனங்கள் மூடப்பட்டு, சுமார் 95 சதவீத அமெரிக்கர்கள் முடக்கபட்டுள்ளதால், 2,30,000 கோடி டாலர்கள் மதிப்பிலான நிவாரணத் நிதியை அந்நாடு அறிவித்தது.

மேலும், இந்த கோவிட்-19 தொற்றால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியால் 50 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்படுவார்கள் என பிரட்டனை அடிப்படையாக கொண்ட தொண்டு நிறுவனமான ஆக்ஸ்பாம் எச்சரித்துள்ளது.

இந்த பெருந்தொற்று பரவல் முடியும்போது உலகில் 780 கோடி மக்கள் ஏழ்மையில் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போருக்கு பின்னர், நாம் சந்திக்கும் "மிகவும் மோசமான நெருக்கடி" இது என இந்தவார தொடக்கத்தில் ஐ.நாவின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்திருந்தது.

கடுமையாக பாதிக்கப்படும் உலக பொருளாதாரம் சீராக பல ஆண்டுகள் ஆகலாம் என பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

2001ல் நிகழ்ந்த 9/11 தாக்குதல் அல்லது 2008ல் ஏற்பட்ட நெருக்கடியை விட உலக பொருளாதாரம் ஒரு பெரும் அதிர்ச்சியை சந்தித்துக் கொண்டு இருப்பதாக அதன் பொதுச் செயலாளர் ஏங்கல் குரியா கூறினார்.