வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 24 ஜூலை 2020 (15:01 IST)

சோதனைகளுக்கு இடையிலும் செவ்வாய்க்கு வெற்றிகரமாக விண்கலம் அனுப்பிய சீனா

கொரோனா வைரஸ் பரவல், பொருளாதார நெருக்கடி, அமெரிக்காவுடனான வர்த்தக மோதல் உள்ளிட்ட பிரச்சனைகள் சூழ்ந்த சமயத்திலும், திட்டமிட்டபடி செவ்வாய் கிரகத்தை ஆராயும் தனது முதல் விண்கலத்தை சீனா இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

லோங் மார்ச் 5 என்று பெயரிடப்பட்டுள்ள ஏவூர்தி ஹைனன் தீவிலிலுள்ள ஏவுதளத்திலிருந்து உள்ளூர் நேரப்படி 12:40 மணிக்கு இந்த விண்வெளி பயணத்தின் மிக முக்கிய அங்கமான ஆறு சக்கரம் கொண்ட ரோபோ உள்ளிட்டவற்றை சுமந்துகொண்டு விண்ணில் சீறிப்பாய்ந்தது.

செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையை இது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தியான்வென்-1 அல்லது "சொர்க்கத்திற்கான கேள்விகள்" என்று அழைக்கப்படும் இந்த ரோவர் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையை அடைந்த பின்னரும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு மேற்பரப்பில் தரையிறங்க முயற்சிக்காது.

செவ்வாய் கிரகத்தில் நிலவும் மோசமான வானிலையில் சிக்கி ரோவர் செயலிழப்பதை தவிர்க்கும் வகையில், இந்த இடைப்பட்ட காலத்தில் அதன் மேற்பரப்பில் நிலவும் சூழ்நிலை குறித்து ஆராயும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபடுவார்கள். பொறுத்திருந்து முடிவு செய்யும் அணுகுமுறையானது 1970களில் அமெரிக்காவால் கடைபிடிக்கப்பட்டதாகும்.

கடந்த திங்கட்கிழமை முதல் அதற்கடுத்த 10 நாட்களில் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்ப திட்டமிடப்பட்டிருந்த மூன்று திட்டங்களில் இது இரண்டாவது ஆகும். அதாவது, கடந்த திங்கட்கிழமையன்று ஐக்கிய அரபு அமீரகம் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பியிருந்த நிலையில், இன்று இரண்டாவதாக சீனாவும் அந்த பட்டியலில் சேர்ந்துள்ளது. இந்த நிலையில், அடுத்த வாரம் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தனது விண்கலத்தை செவ்வாய் கிரகத்தை ஆய்வு அனுப்ப உள்ளது.

பயணத்தின் நோக்கங்கள் என்னென்ன?

செவ்வாய் கிரகத்தின் உட்டோப்பியா சமவெளிக்கு உட்பட்ட பகுதியில் தரையிறங்க தீர்மானிக்கப்பட்டுள்ள இந்த விண்கலம், அந்த பகுதியின் நிலப்பரப்பின் மேல் மற்றும் கீழ்ப்பகுதியிலுள்ள புவியியல் அமைப்பு குறித்து ஆய்வு செய்யும்.

சூரிய மின்தகடுகளின் மூலம் கிடைக்கும் ஆற்றல் மூலம் இயங்கும் தியான்வென்-1 ரோவர் சுமார் 240 கிலோ எடை கொண்டது. இது 2000ஆவது ஆண்டுகளில் நாசாவால் பயன்படுத்தப்பட்ட ஸ்பிரிட் மற்றும் ஆபர்ச்சுனட்டி உள்ளிட்ட ரோவர்களை ஒத்தி இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ரோவரில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை படம் எடுப்பதற்கும், ரோவருக்கு வழிகாட்டுவதற்கும் தேவையான கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதைத்தவிர்த்து ரோவரில் இணைக்கப்பட்டுள்ள ஐந்து கருவிகள் செவ்வாய் கிரகத்திலுள்ள பாறைகள் மற்றும் நீர் இருப்பை ஆய்வு செய்யும்.

இதுமட்டுமின்றி, செவ்வாய் கிரகத்தை தொடர்ந்து சுற்றிவரும் விண்கலம் ஏழு தொலை உணர்வு கருவிகளின் மூலம் அதன் மேற்பரப்பு குறித்த ஆய்வில் ஈடுபடும்.

இதற்கு முன்பு, உலக நாடுகளால் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட பாதிக்கும் மேற்பட்ட முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்துள்ளன. இதில் சீனா, ரஷ்யாவின் விண்கலங்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முயற்சியும் அடக்கம். செவ்வாய் கிரகத்தில் நீண்ட நாட்கள் தாக்குபிடிக்கக் கூடிய ஆய்வு பணியை மேற்கொண்ட ஒரே நாடாக அமெரிக்கா திகழ்கிறது.

இருப்பினும், சமீப காலங்களில் நிலவின் இருவேறுபட்ட பகுதிகளுக்கு ரோவர்களை அனுப்பி வெற்றிகண்ட அனுபவத்தை முதலாக கொண்டு இந்த செவ்வாய் கிரக ஆராய்ச்சியிலும் சீனா இறங்கியுள்ளது.

"விண்கலத்தில் இருந்து பிரிந்து செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பில் லேண்டரை களமிறக்குவது மிகவும் கடினமான செயல்முறையாக கருதப்படுகிறது. இதில் சீனா சிறப்பாக செயல்படுவதுடன், ரோவரை பாதுகாப்பாக தரையிறக்க முடியும் என்று நம்புகிறோம்" என்று இந்த விண்வெளி திட்டத்தின் செய்தித் தொடர்பாளர் லியு டோங்ஜி கூறியதாக ராய்ட்டர்ஸ் முகமை வெளியிட்டுள்ளது.

சீன விஞ்ஞானிகள் இந்த ரோபோ குறைந்தது 90 செவ்வாய் நாட்களுக்கு செயல்படும் என்று நம்புகிறார்கள். செவ்வாய் கிரகத்தில் ஒரு நாள் அல்லது சோல் என்பது 24 மணி 39 நிமிடங்கள் நீடிக்கும்.

சீனா என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதைப் பார்ப்பது நம்பமுடியாத அளவிற்கு உற்சாகமாக இருக்கிறது" என்று கூறுகிறார் இங்கிலாந்தில் உள்ள ஆர்ஏஎல் ஸ்பேஸ் நிறுவனத்தை சேர்ந்த டாக்டர் ரெய்ன் இர்ஷாத்.

"சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் 1993 ஆண்டில்தான் உருவாக்கப்பட்டது. ஆனால் அவர்கள் 30 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திலேயே, ஒரு சுற்றுவட்டக்கலன், ஒரு லேண்டர் மற்றும் ரோவரை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புகிறார்கள்."