திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Updated : புதன், 6 ஏப்ரல் 2022 (11:44 IST)

அமெரிக்காவை பதற வைத்த சீனா, ரஷ்யாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் - கூட்டுச் சேரும் 'ஆக்கஸ்'!

ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஒருங்கிணந்து செயல்படும் என்று பிரிட்டன் அரசு கூறியுள்ளது.
 
இந்த திட்டம் கடந்த ஆண்டு மூன்று நாடுகளால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தமான AUKUS கூட்டாண்மையின் ஒரு பகுதியாக இருக்கும்.
 
சீனா மற்றும் ரஷ்யாவால் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் தயாரிக்கப்பட்ட நிலையில், யுக்ரேனில் கடந்த மாதம் ரஷ்யாவால் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சூழலில் இந்த முன்னெடுப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
 
ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு வேகத்தில் பயணிக்கக் கூடியவை.
 
அவற்றின் வேகம் மற்றும் குறைந்த உயரத்தில் பறக்கும் திறன் ஆகியவற்றால் தரையில் இருந்து செயல்படும் ரேடார்களின் பார்வையில் அகப்படாது. மேலும் பறக்கும் போதே திசையை மாற்றிக் கொள்ள முடியும் என்பதால், அவற்றின் தாக்குதலில் இருந்து தப்புவது கடினம்.
 
பிரிட்டனிடம் தற்போது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் இல்லை.
அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் ஹைப்பர்சோனிக் ஆயுதங்களை உருவாக்க ஏற்கனவே கூட்டுத் திட்டத்தைக் கொண்டுள்ளன. ஆனாலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையிலேயே புதிய முயற்சியின் கவனம் இருக்கும் என்று பிரிட்டன் கூறியுள்ளது.
 
சொந்தமாக ஹைப்பர்சோனிக் ஆயுதங்களை உருவாக்கும் எந்த திட்டமும் பிரிட்டனிடம் இல்லை. எனினும் எதிர்காலத்தில் அவற்றை உருவாக்க வேண்டுமா என்பதை ஆராய்வதற்கு புதிய முயற்சி உதவும் என்று பிரிட்டன் கூறுகிறது.
 
தற்போதைய கூட்டு முயற்சி என்பது, யுக்ரேனில் ரஷ்யா ஹைப்பர்சோனிக் ஆயுதங்களைப் பயன்படுத்துவதுடன் தொடர்புடையது அல்ல. ஆனால் பிற நாடுகள் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளில் முதலீடு செய்வதால், அவற்றிடம் இருந்து தற்காப்பது எப்படி என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது என்று பிரிட்டன் கூறியிருக்கிறது.
 
மார்ச் 19 அன்று, மேற்கு உக்ரைனில் உள்ள ஆயுதக் கிடங்கை அழிக்க ஹைப்பர்சோனிக் ஏவுகணையைப் பயன்படுத்தியதாக ரஷ்யா கூறியது. மேலும் அமெரிக்க ராணுவத்தின் உளவுத்துறை ரஷ்யப் படைகள் மீண்டும் மீண்டும் அவற்றைப் பயன்படுத்தியதாகக் கூறியிருக்கிறது.
 
போர் ஒன்றில் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
 
அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் திறன கொண்ட இரு ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை சீனா சோதித்தபோது, ​​அமெரிக்க உளவுத்துறை அதிர்ச்சியடைந்தது.
 
சீனாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஒவ்வொன்றும் பூமிக்கு திரும்பி வருவதற்கு முன்பு பூமியின் தாழ் வட்டப்பாதையில் உலகத்தை வட்டமிட்டன. இரண்டாவது ஏவுகணை அதன் இலக்கை சுமார் 40 கி.மீ. தொலைவில் தவறவிட்டது.
 
இந்த ஏவுகணையானது பகுதியளவு சுற்றுப்பாதை குண்டுவீச்சு அமைப்பு என்று அழைக்கப்படும் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்படக்கூடியது என்று கருதப்படுகிறது.
 
முன்னர் புரிந்து கொள்ளப்பட்டதை விட சீனா மிகவும் மேம்பட்ட விண்வெளி திறனை கொண்டுள்ளது என்பதை சோதனைகள் நிரூபித்துள்ளன.
 
ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை பரிசோதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக வடகொரியாவும் கூறியுள்ளது.
 
ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் எப்படி செயல்படும்?
 
ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் என்றால் என்ன?
ஹைப்பர்சோனிக் என்றால் ஒலியைவிட குறைந்தது 5 மடங்கு வேகத்தில் செல்ல வேண்டும். அந்த அடிப்படையில் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் குறைந்தது ஒலியைவிட 5 மடங்குக்கும் அதிகமான வேகத்தில் பாய்ந்து செல்லும் திறன்கொண்டவை.
அவை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைப் போல நெடுந்தொலைவு செல்லக்கூடியவை அல்ல. ஆனால், அவை பறந்து கொண்டிருக்கும்போது கண்டறிவது மிகவும் கடினம். சிலவகை ஏவுகணைகள் ராடாரில் இருந்து தப்பிவிடும். அதனால் ஏவுகணைத் தடுப்பு அமைப்புகள் பயனற்றதாக ஆகிவிடும்.
 
ரஷ்ய அதிகாரிகளின் கூற்றுப்படி, அந்த நாடு யுக்ரேனில் பயன்படுத்திய கின்ஸல் ஏவுகணை 2,000km (1,240 மைல்கள்) தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும். இதனால் மணிக்கு 12,350 கி.மீ. வேகத்தில் பறக்க முடியும்.
 
கின்ஸல் ஏவுகணையை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் புதின் அறிமுகப்படுத்தினார். இவற்றுடன் ஸிர்கோன், அவான்கார்ட் ஆகிய ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளையும் தாங்கள் தயாரிப்பதாக அவர் கூறினார். இவையிரண்டும் மேலும் கூடுதல் வேகத்தில் செல்லக்கூடியவை.
 
ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் வலிமை என்ன?
 
கின்ஸல் ஏவுகணை அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது. ஐரோப்பிய நாடுகளுக்கு மிக அருகில் இருக்கும் ரஷ்யாவின் பகுதியான கலினின்கிராடுக்கு மிக்-31 விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்று செய்திகள் வெளியாகின.
 
கடந்த டிசம்பரில் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை சீனா பரிசோதிப்பதாக தகவல்கள் வந்தன. ஆனா சீனா அதை மறுத்தது. ஆயினும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைத் தயாரிப்பில் சீன ராணுவம் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
 
ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன. அவற்றுள் ஒன்று ஹைப்பர்சோனிக் க்ளைட் ஏவுகணைகள். இவை பூமியின் வளிமண்டலத்துக்குள் இயங்கும். மற்றொன்று FOBS எனப்படும் பூமியின் தாழ்நிலை சுற்றுப்பாதை குண்டுவீச்சு அமைப்பு. இவை இலக்கை நோக்கி விரையும்வரை பூமியின் தாழ்நிலை சுற்றுப்பாதையில் பறக்கின்றன.
 
ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஒரு கேம்-சேஞ்சராக இல்லாவிட்டாலும், எட்டாத சில இலக்குகளை தாக்குதல் அபாயத்துக்கு உள்பட்டவையாக மாற்றிவிடும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக விமானம் தாங்கிப் போர்க் கப்பல்களை ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளில் இருந்து பாதுகாப்பது கடினம்.
 
ஆக்கஸ் என்பது என்ன?
 
கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவிக்கப்பட்ட ஆக்கஸ் AUKUS ஒத்துழைப்பு என்பது, இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கான முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தமாகும். அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெறுவதற்கு அமெரிக்காவும் பிரிட்டனும் ஆஸ்திரேலியாவுக்கு உதவுவதே ஒப்பந்தத்தின் முதன்மை நோக்கம்.
 
இது சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.
 
இணையத் திறன்கள், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பங்கள் மற்றும் கடலுக்கடியில் கூடுதல் திறன்கள் ஆகியவற்றில் ஒத்துழைப்பை ஆழமாக்குவதையும் இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
 
"நமது மூன்று நாடுகளின் தொழில்நுட்ப அறிவு மற்றும் திறன்களை ஒன்றிணைக்கும் போது, ​​நம்மையும் நமது நட்பு நாடுகளையும் கூட்டாளிகளையும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் ஒரு பெரிய இலக்கை அடைய முடியும்." என்று பிரிட்டனின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்டீபன் லவ்க்ரோவ் கூறியுள்ளார்.