வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 8 மார்ச் 2024 (21:15 IST)

கனடா: இலங்கைப் பெண், 4 குழந்தைகள் உள்பட 6 பேர் கொடூரக் கொலை

Death
கனடா தலைநகர் ஒட்டாவா பகுதியிலுள்ள வீடொன்றில் நான்கு சிறார்கள் உள்ளிட்ட 6 இலங்கையர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
 
இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக ஒட்டாவா போலீஸார் தெரிவிக்கின்றனர்.
 
கனடாவிற்கு புதிதாக வருகைத் தந்த குடும்பமொன்றின் உறுப்பினர்களே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
 
கொலை செய்யப்பட்டவர்களில் மூன்று மாதங்களுக்கும் குறைவான வயதை கொண்ட சிசுவொன்றும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
குறித்த குடும்பத்துடன் வசித்த வந்ததாக கூறப்படும் 19 வயதான இளைஞன் ஒருவனே இந்த கொலையை செய்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
 
''இது முழுமையாக அப்பாவி மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட அர்த்தமற்ற வன்முறைச் செயல்" என ஒட்டாவாவின் உயர் போலீஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
 
ஒட்டாவா புறநகர் பகுதியான பார்ஹேவன் பகுதியிலிருந்து அந்த நாட்டு நேரப்படி வியாழக்கிழமை இரவு 22:52க்கு அவசர அழைப்பொன்று போலீஸாருக்கு கிடைத்துள்ளது.
 
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், சந்தேக நபரை விரைவாக கைது செய்துள்ளதாக ஒட்டாவா போலீஸ் தலைமை அதிகாரியான எரிக் ஸ்டப்ஸ் தெரிவித்துள்ளார்.
 
அதனைத் தொடர்ந்து, வீட்டிற்குள் சென்ற அதிகாரிகள் கொல்லப்பட்டவர்களை அடையாளம் கண்டு கொண்டுள்ளனர்.
 
உயிரிழந்த நிலையில், தாய், நான்கு குழந்தைகள் மற்றும் அந்த குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பை பேணிய நபர் ஆகியோரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
 
சம்பவத்தில் படுகாயமடைந்த தந்தை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.
 
35 வயதான தர்ஷினி திலந்திகா ஏக்கநாயக்க, அவரது 7 வயதான குழந்தை இனுக்கா விக்ரமசிங்க, 4 வயதான அஸ்வினி விக்ரமசிங்க, 2 வயதான ரியானா விக்ரமசிங்க மற்றும் 2 மாத குழந்தை கேலி விக்ரமசிங்க ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
 
அத்துடன், இந்த குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பை பேணி வந்த 40 வயதான காமினி அமரகோன் என்ற நபரும் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
 
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் 19 வயதான மாணவர் பெப்ரியோ டி சொய்சா என போலீஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
 
சந்தேகநபர் மீது 6 கொலை குற்றச்சாட்டுக்கள் மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
கூரிய ஆயுதத்தை பயன்படுத்தி இந்த கொலைகள் நடாத்தப்பட்டுள்ளதாக தலைமை போலீஸ் அதிகாரி ஸ்டப்ஸ் கூறுகின்றார்.
 
ஒட்டாவாவில் அண்மை காலத்தில் இடம்பெற்ற மிகவும் கொடூரமான கொலை சம்பவமாக இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
 
''உண்மையில் சோகமான சம்பவம். இது நாட்டின் தலைநகரில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்" எனவும் அவர் கூறியுள்ளார். “இப்பகுதியினர் மீதும் இந்த சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். சம்பவம் நடந்த இடத்திலிருந்து இப்பகுதியினர் விலகியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.” என்றும் தெரிவித்தார்.
 
 
இந்த சம்பவமானது முதலில் துப்பாக்கி சூடு என கூறப்பட்ட போதிலும், பின்னர் அது கூரிய ஆயுதத்தால் நடத்தப்பட்ட கொலை என கண்டறியப்பட்டதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.
 
இந்த சம்பவத்தைக் “கொடூரமான வன்முறை” என்று குறிப்பிட்ட கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.
 
ஒட்டாவா நகரின் மேயர் மார்க் சட்க்லிஃப் “நகரின் வரலாற்றில் நிகழ்ந்த மிக அதிர்ச்சிகரமான வன்முறை சம்பவம்” என்று தெரிவித்தார். “பாதுகாப்பான சமூகத்தில் வாழ்வது குறித்து பெருமை கொள்கிறோன். ஆனால் இந்த சம்பவம் ஒட்டாவா நகர மக்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.” என்று X தளத்தில் பதிவிட்டிருந்தார்.
 
“இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளித்து, விசாரணையை நடத்தி வரும் அவசர கால ஊழியர்களுக்கு நன்றி” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.