வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 10 மார்ச் 2023 (09:05 IST)

ஆணும் ஆணும் சேர்ந்து குழந்தை பெற முடியுமா? ஆண் எலியின் உயிரணுக்களில் இருந்து கருமுட்டை தயாரித்த விஞ்ஞானி

ஜப்பானிய ஆராய்ச்சியாளர் ஒருவர் ஆண் எலிகளின் உயிரணுக்களில் இருந்து முட்டைகளை உருவாக்கியதாக மரபியல் மாநாடு ஒன்றில் கூறியுள்ளார். எனினும், ஆண்களின் XY பாலின குரோமோசோம்களை பெண்களின் XX குரோமோசோம்களாக மாற்றுவதை உள்ளடக்கிய இந்த ஆராய்ச்சி தற்போது ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது.
 
ஒசாகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கட்சுஹிகோ ஹயாஷி, கருவுருதல் சிகிச்சைகள் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்.
 
நேச்சர் என்ற அறிவியல் இதழில் வெளியிடுவதற்காக அவர் சமர்ப்பித்த தகவல்கள், ஆண் தம்பதிகள் தங்கள் சொந்த குழந்தைகளைப் பெறுவதற்கான வாய்ப்பு தொடர்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
எனினும், அத்தகைய முடிவை நாம் எடுப்பதற்கு இன்னும் நீண்ட காலம் செல்ல வேண்டியுள்ளது என்று கூறுகிறார் ஹார்வர்டு மருத்துவ பள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் ஜார்ஜ் டேலே.
 
“ஹயாஷியின் தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை, அதேவேளையில் அவை சுவாரசியமானவை. மனிதர்களிடம் முயற்சிப்பது என்பது எலிகளிடம் முயற்சித்ததை விட கடினமானது. எலிகளில் செய்ததை போன்று மனிதர்களில் செய்ய மனித கேமடோஜெனீசிஸின் (இனப்பெருக்க உயிரணுக்களின் உருவாக்கம்) தனித்துவமான உயிரியலைப் பற்றி நாம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. ” என்று அவர் கூறுகிறார்.
லண்டனில் உள்ள க்ரிக் இன்ஸ்டிடியூட்டில் மனித மரபணு தொடர்பான உச்சி மாநாட்டில் தனது ஆய்வு தகவல்களை ஹயாஷி வழங்கியுள்ளார்.
 
இந்த துறையில் சர்வதேச அளவில் மதிக்கப்படும் வல்லுநரான ஹயாஷி, மாநாட்டு பிரதிநிதிகளிடம் பேசிய போது, தனது ஆய்வு ஆரம்ப கட்டத்தில் உள்ளதாக குறிப்பிட்டார். தனது ஆராய்ச்சியின் மூலம் உருவாக்கப்பட்ட முட்டைகளின் தரம் மிகவும் குறைவாக உள்ளதாகவும், தற்போதைய நிலையில் இந்த முறையை மனிதர்களிடம் பாதுகாப்பாக மேற்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.
 
எனினும், தற்போதைய பிரச்சனைகளை பத்து ஆண்டுகளில் சமாளித்துவிடலாம் என்றும், இது பாதுகாப்பானது என நிரூபிக்கப்பட்டால் ஆண், பெண் மற்றும் ஒரே பாலின தம்பதிகள் இருவருக்கும் கருவுறுதல் சிகிச்சையாக இது மேற்கொள்ளப்படுவதை பார்க்க ஆசைப்படுவதாகவும் பிபிசியிடம் அவர் தெரிவித்தார்.
 
“மக்கள் இதனை விரும்பினால், சமூகமும் இத்தகைய தொழில்நுட்பத்தை ஏற்றுகொண்டால், நான் இது தொடர்பாக உதவுவேன்” என ஹயாஷி கூறினார்.
 
இந்த தொழில்நுட்பம் முதலில் ஆண் எலியிலிருந்து தோல் செல்களை எடுத்து பின்னர் அதை ஸ்டெம் செல்லாக மாற்றுகிறது.இவை ஆண் செல்கள் என்பதால் அவற்றில் XY குரோமோசோம்கள் இருக்கும். பேராசிரியர் கட்சுஹிகோ ஹயாஷி குழுவினர் அவற்றில் இருந்து Y குரோமோசோமை நீக்கினர். X குரோமோசோமை பிரதியெடுத்த அவர்கள் பின்னர், இரண்டு X குரோமோசோம்களையும் ஒன்று சேர்த்தனர். இது, ஸ்டெம் செல் முட்டையாக மாற்ற உதவுகிறது.
 
பெண்களால் தங்களது கருமுட்டைகளை உற்பத்தி செய்ய முடியாத சூழலில் இந்த தொழில்நுட்பம் உதவக் கூடும். தற்போதைய கருவுறுத்தல் சிகிச்சையில் இருந்து இது வெகு தொலைவில் உள்ளது என்றும் அவர் கூறினார்.
 
“இந்த தொழில்நுட்பம் குறித்து பார்க்கும்போது, எலிகளில் கூட முட்டையின் தரத்தில் பல பிரச்சனைகள் உள்ளன. எனவே, கருவுறுதல் தொடர்பான சிகிச்சையாக இதனை பார்ப்பதற்கு முன்பாக இத்தகைய பிரச்சனைகளை நாம் சமாளிக்க வேண்டும். அதற்கு நீண்ட காலம் ஆகும் ” என்று அவர் கூறினார்.
 
ஒரு ஆண் தனது சொந்த விந்தணுக்கள் மற்றும் செயற்கையாக உருவாக்கப்பட்ட கருமுட்டைகளைப் பயன்படுத்தி ஒரு குழந்தையை உருவாக்க இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை தான் ஆதரிக்க மாட்டேன் என்று பேராசிரியர் ஹயாஷி கூறினார்.
 
“தொழில்நுட்ப ரீதியாக இது சாத்தியமானது. ஆனால், தற்போதைய கட்டத்தில் இது பாதுகாப்பானதா அல்லது சமூகத்திற்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதா என்பது எனக்கு உறுதியாக தெரியவில்லை ” என்று அவர் தெரிவித்தார்.
 
லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஸ்டெம் செல் விஞ்ஞானி பேராசிரியர் அமண்டர் கிளார்க், “இனப்பெருக்கத்திற்காக இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தொடர்பாக LBGTQ+ சமூகம் கருத்து தெரிவிக்க வேண்டும்” என்று கூறுகிறார்.
 
“தங்களுக்கான குடும்பம் என்று வரும்போது LBGTQ+ சமூகத்திற்கு தனிப்பட்ட தேவைகள் உள்ளன. தற்போதைய ஆராய்ச்சியின் அடிப்படையில் ஒரே பாலின இனப்பெருக்கம் எதிர்காலத்தில் சாத்தியமாகலாம் என்று குறிப்பிடும் அவர், தற்போது இந்த தொழில்நுட்பம் மனிதர்களுக்கானதாக இல்லை. பாதுகாப்பு , செயல்திறன் போன்றவை நிரூபிக்கப்படவில்லை. இந்த தொழில்நுட்பம் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பது குறித்தும் தெளிவு இல்லை. இந்த தொழில்நுட்பத்தை மனிதர்களுக்கு பயன்படுத்துவதற்கு தடையாக உள்ள மனித பாலின செல்கள்( கருமுட்டை, விந்து) மற்றும் அடிப்படை அறிவு இடைவெளிகள் குறித்து மேலும் அறிந்துகொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
 
கலாசார வேறுபாடுகள்
விஸ்கான்சின் மேடிசன் பல்கலைக்கழகத்தின் சட்டப் பேராசிரியரான அல்டா சாரோ பேசும்போது, “இந்த தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வந்தாலும் அதைப் பயன்படுத்தலாமா என்பதில் வெவ்வேறு கலாசாரங்கள் `ஆழமான வித்தியாசமான பார்வைகளை` கொண்டிருக்கும்” என்று கூறுகிறார்.
 
“ஒருசில சமூகங்களில், குழந்தைகளுக்கு மரபணு பங்களிப்பு என்பது முக்கியமானதாக கருதப்படுகிறது. அத்தகையோருக்கு `இந்த தொழில்நுட்பம் தேவையா` என்ற கேள்வி எழும். மற்ற சமூகங்களுக்கு அது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை, மேலும் குழந்தை தத்தெடுப்பு முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது. அவர்களை பொறுத்தவரை குடும்பம் என்பது உயிரியல் தொடர்பை கொண்டிருப்பதை விட அதிக தனிப்பட்ட உறவுமுறைகளை கொண்டிருக்க வேண்டும் என்பதையே விரும்புகின்றனர். ” என்றார்.
 
சீன அறிவியல் அகாடமியின் பேராசிரியர் ஹாயோய் வா, இந்த தொழில்நுட்பத்தை நடைமுறையில் பயன்படுத்தலாமா என்று பரிசீலிப்பதற்கு நீண்ட தூரம் செல்ல வேண்டி இருக்கும் என்று நம்புகிறார்.
 
“விஞ்ஞானிகள் முடியாது என்று சொல்லவில்லை. தற்போது இந்த சோதனை எலிகளிடம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மனிதர்களிடமும் செய்ய சாத்தியம் ஏற்படலாம். ஆனால், நிறைய சவால்கள் இருப்பதை நான் பார்க்கிறேன். இந்த தொழில்நுட்பம் சாத்தியப்படுவதற்கு எவ்வளவு ஆண்டுகள் ஆகும் என்பதை என்னால் கணிக்க முடியவில்லை” என்றும் அவர் தெரிவித்தார்.