ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 30 ஜனவரி 2023 (23:21 IST)

பூஞ்சைத் தொற்றால் மனிதர்களை ஜாம்பிகளாக மாற்ற முடியுமா?

hand
பயங்கரமான ஒரு உண்மையை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் - பாதிக்கப்பட்டவர்களை ஜாம்பிகளாக மாற்றும் பூஞ்சைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
 
அதன் விதை உடலுக்குள் நுழைந்து, பின்னர் அது பூஞ்சையாக வளர்ந்து அது வளர்ந்தவரின் மனதை கட்டுப்படுத்த தொடங்கி, மிகப்பெரிய முடிவுகளை எடுக்கக் தூண்டுகின்றன.
 
அந்த ஒட்டுண்ணி பூஞ்சை அது இருக்கும் மனிதனின் உடலில் எஞ்சி இருக்கும் கடைசி ஊட்டச்சத்தையும் பிரித்தெடுக்கிறது.
 
இறுதியாக, பயங்கரமான திகில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி போல தலையை விட்டு வெடித்து சிதறி வெளியேறி மற்றவர்களின் உடலில் விதையை பரப்பி ஒரு பேரழிவை உருவாக்கும்.
 
 
இதை கேட்கும் போது புனை கதை போலத் தெரியலாம். ஆனால் பூஞ்சைகளின் ஆற்றல் மிகப்பெரியது. பூஞ்சைகள், தாவரங்கள் மற்றும் விலங்குகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. உண்ணக்கூடிய காளான்கள் முதல் ஒட்டுண்ணிகள் வரை பூஞ்சைகளில் பட்டியல் மிகப்பெரியது.
 
கார்டிசெப்ஸ் மற்றும் ஓபியோகார்டிசெப்ஸ் ஒட்டுண்ணி பூஞ்சை இனங்களின் இருப்பு நிஜமானது. பிபிசியின் பிளானட் எர்த் தொடரில், சர் டேவிட் அட்டன்பரோ பூஞ்சைகள் ஒரு எறும்பைக் கட்டுப்படுத்துவதைப் பதிவு செய்தார்.
 
ஜாம்பி எறும்புகளின் அந்த கிளிப் "தி லாஸ்ட் ஆஃப் அஸ்" என்ற வீடியோ கேம் உருவாக உத்வேகமாக அமைந்தது. அநேகமாக நான் விளையாடிய சிறந்த வீடியோ கேம், இப்போது அதே கதையைப் பின்பற்றி ஒரு தொலைக்காட்சி தொடரும் உருவாக்கப்பட்டுள்ளது.
 
வீடியோ கேமிலும், தொலைக்காட்சியிலும், கார்டிசெப்ஸ் அதன் வழக்கமான பாணியில் பூச்சிகள் மூலமாக மனிதர்களிடம் பரவி பெருந்தொற்றை உருவாக்கிறது. இந்த தொற்று க மனித சமூகத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது.
 
ஆனால் நிஜ உலகில், கார்டிசெப்ஸ் அல்லது மற்றொரு பூஞ்சையால் இதுபோன்று நடக்க வாய்ப்புள்ளதா?
 
லண்டனில் உள்ள வெப்பமண்டல நோய்களுக்கான மருத்துவமனையின் பூஞ்சைத்தொற்று நிபுணர் டாக்டர் நீல் ஸ்டோன், "பூஞ்சை தொற்றுநோய்களை நாம் குறைத்து மதிப்பிடுகிறோம் என்று நான் நினைக்கிறேன்," என்றார்.
 
"நாங்களும் நீண்ட காலமாக அதைச் செய்துள்ளோம், ஆனால் பூஞ்சையால் ஏற்படும்  தொற்றுநோயைக் கையாள நாம் முற்றிலும் தயாராக இல்லை." எனக் கூறினார்.
 
கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில், உலக சுகாதார நிறுவனம் உயிருக்கு ஆபத்தான பூஞ்சைகளின் முதல் பட்டியலை வெளியிட்டது.
 
அங்கு சில மோசமான பிழைகள் உள்ளன, ஆனால் அதில் ஜாம்பியாக்கும் கார்டிசெப்ஸ் இடம்பெறவில்லை என்பதை அறிந்து நீங்கள் நிம்மதியடையலாம்.
 
யூட்ரெக்ட் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் நிபுணர் டாக்டர் சரிசா டி பெக்கர், கார்டிசெப்ஸ் எவ்வாறு ஜாம்பி எறும்புகளை உருவாக்குகிறது என்பதை ஆய்வு செய்துள்ளார். ஆனால் மனிதர்களிடம் இது போல நடந்து பார்க்க முடியவில்லை என்கிறார் அவர்.
 
"நமது உடல் வெப்பநிலை அதிகமாக உள்ளதால், பெரும்பாலான பூஞ்சைகளால் நமது உடலில் குடியேறி நன்றாக வளர முடியாது. இது கார்டிசெப்ஸுக்கும் பொருந்தும்," என டி பெக்கர் கூறுகிறார்.
 
"பூச்சிகளின் நரம்பு மண்டலம் நம்மை விட எளிமையாக இருக்கும். அது போலவே பூச்சிகளின் நோய் எதிர்ப்பு ஆற்றல் மனிதர்களை ஒப்பிடும் போது குறைவாக இருக்கும். அதனால் இந்த பூஞ்சைகளால், பூச்சிகளை கட்டுப்படுத்தியது போல மனிதர்களை கட்டுப்படுத்த முடியாது. மனிதர்களின் நரம்பு மண்டலத்தை இந்த பூஞ்சைகளால் அவ்வளவு எளிதாக கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள முடியாது."
 
பெரும்பாலான ஒட்டுண்ணி கார்டிசெப்ஸ் இனங்கள் பல லட்சம் ஆண்டுகளாக ஒரு பூச்சி இனத்தை மட்டுமே பாதிப்புக்கு உள்ளாக்குவதில் நிபுணத்துவம் பெற்றுள்ளன. அதனால் இவை பெரும்பாலும் ஒரு பூச்சியிலிருந்து மற்றொரு பூச்சிக்கு பரவுவதில்லை.
 
"இந்த பூஞ்சை ஒரு பூச்சியிடமிருந்து நமக்கு பரவி தொற்றுநோயை ஏற்படுத்த முடிந்தால் அது மிகப்பெரிய முன்னேற்றம்," என்று டாக்டர் டி பெக்கர் கூறுகிறார்.
 
பூஞ்சைகளால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் நீண்ட காலமாக நிராகரிக்கப்பட்டுள்ளன. "மக்கள் அதை அற்பமான, மேலோட்டமான அல்லது முக்கியமற்ற ஒன்றாக நினைக்கிறார்கள்," என்று டாக்டர் ஸ்டோன் கூறுகிறார்.
 
லட்சக்கணக்கான பூஞ்சை இனங்களில் ஒரு சில மட்டுமே பாதிப்பை ஏற்படுத்துகின்றன. கால் விரல்களுக்கு இடையில் தோன்றும் அத்லெட்ஸ் ஃபூட் என்ற நோய் அல்லது நோய்த் தொற்றிய கால் விரல் நகம் ஆகியவற்றால் ஏற்படும் வலியைவிட சில பூஞ்சைகளால் ஏற்படும் வலி மிக மோசமாக இருக்கும்.
 
பூஞ்சைகள் ஆண்டுக்கு சுமார் 17 லட்சம் மக்களைக் கொல்கின்றன, இது மலேரியாவால் ஏற்படும் மரணங்களைவிட மூன்று மடங்கு அதிகம்.
 
உலக சுகாதார நிறுவனம் 19 வகையான பூஞ்சைகளை அடையாளம் கண்டு கவலைக்குறியதாக கருதுகிறது.
 
இந்த பட்டியலில் உள்ள கேண்டிடா ஆரிஸ்(Candida auris), மியூகோர்மைசெட்ஸ்(Mucormycetes) ஆகியவை நம் சதையை மிக விரைவாக தின்று முகத்தில் கடுமையான காயங்கள் ஏற்பட வழிவகுக்கிறது.
 
டாக்டர் நீல் ஸ்டோன் லண்டனில் உள்ள சுகாதார சேவைகள் ஆய்வகத்தில், இங்கிலாந்து நோயாளிகளிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகளை பகுப்பாய்வு செய்து, அவை பூஞ்சையால் ஏற்படுகின்றனவா, அதற்கு என்ன சிகிச்சைகள் தேவைப்படும் என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறார்.
 
இதில் ஆபத்தை ஏற்படுத்தும் பூஞ்சைகளில் முதலிடத்தில் கேண்டிடா ஆரிஸ் இருக்கிறது.
 
இது ஓர் ஈஸ்ட் வகை பூஞ்சை. இது உங்கள் அருகில் இருக்கும்போது ஒரு மதுபானம் அல்லது நொதித்த ரொட்டி மாவின் வலுவான வாசனையைப் பெறுவீர்கள்.
 
ஆனால் அது உடலுக்குள் சென்றால், ரத்தம், நரம்பு மண்டலம் மற்றும் உள் உறுப்புகளை ஆக்கிரமிக்கும். கேண்டிடா ஆரிஸ் தொற்றினால் பாதிக்கப்படும் நபர்களில் பாதி பேர் வரை இறந்து போவதாக உலக சுகாதார நிறுவனம் மதிப்பிடுகிறது.
 
"இது கடந்த 15 ஆண்டுகளில் தோன்றிய பூதம் போன்றது, ஆனால் இப்போது உலகம் முழுவதும் காணப்படுகிறது," என்று டாக்டர் ஸ்டோன் கூறுகிறார்.
 
 2009ஆம் ஆண்டு டோக்கியோ முதியோர் மருத்துவமனையில் இது ஒரு நோயாளியின் காதில் முதன்முதலாக கண்டறியப்பட்டது.
 
'கேண்டிடா ஆரிஸ்' இயற்கையாகவே பூஞ்சை காளான் மருந்துகளை எதிர்க்கிறது. மேலும் சில திரிபுகள் நம்மிடம் உள்ள அனைத்து மருந்துகளையும் எதிர்க்கின்றன. அதனால்தான் இது ஒரு மருந்தை மதிக்காத நோய்க் கிருமி என்று கருதப்படுகிறது.
 
இது மருத்துவமனைகளில் அசுத்தமான மேற்பரப்புகள் மூலம் பரவுகிறது. இது நரம்புகளில் செலுத்தும் ஊசிகளிலும், ரத்த அழுத்தம் கண்டறியும் கருவியின் கைப்பட்டையிலும் ஒட்டிக் கொள்வதால் இதை சுத்தம் செய்வது மிகக் கடினமாகிறது. இதை தடுக்க பாதிக்கப்பட்ட வார்டுகளை மூடுவதே தீர்வு. இது இங்கிலாந்திலும் நடந்துள்ளது.
 
டாக்டர் ஸ்டோன், "இது 'மிகவும் கவலைக்குரிய' பூஞ்சை என்றும், இதை கவனிக்கத் தவறினால், அது முழு சுகாதார அமைப்புகளையும் மூடும் அபாயத்தை உருவாக்கும்," என்றும் கூறுகிறார்.
 
மற்றொரு உயிரை பறிக்கும் பூஞ்சை, 'கிரிப்டோகாக்கஸ் நியோஃபார்மன்ஸ்'( Cryptococcus neoformans). இது மனிதர்களின் நரம்பு மண்டலங்களுக்குள் நுழைந்து மோசமான மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும்.
 
சித் மற்றும் எல்லி, தேனிலவுக்காக கோஸ்டாரிகா சென்று இருந்தனர். அப்போது எல்லி நோய்வாய்ப்படத் தொடங்கினார்.
 
அவருக்கு முதலில் தலைவலி மற்றும் வாந்தி ஏற்பட்டது. ஆனால் இது வெயிலின் தாக்கத்தால் ஏற்பட்டு இருக்கலாம் என இந்த அறிகுறிகள் புறந்தள்ளப்பட்டன. பின்பு அவருக்கு உடல்நிலை மோசமாகி வலிப்பு ஏற்படவே, படகின் உதவியுடன் மருத்துவ உதவியை பெற எல்லி அழைத்து செல்லப்பட்டார்.
 
"இதைவிட பயங்கரமான மற்றும் கையறு நிலையை நான் பார்த்ததில்லை" என்று சித் கூறுகிறார்.
 
ஸ்கேன் செய்த போது அவரது மூளையில் ஏற்பட்ட வீக்கம் தெரிந்தது. பின்பு நடந்த சோதனையின் போது அவருக்கு கிரிப்டோகாக்கஸ் பூஞ்சைத் தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியானது. ஆனால் நல்வாய்ப்பாக எல்லிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளை அவரது உடல் ஏற்றுக்கொண்டது. 12 நாட்களாக வென்டிலேட்டரில் இருந்த அவர் கோமாவில் இருந்து மீண்டார். 
 
"நான் கத்தியது எனக்கு நினைவிருக்கிறது," என்று எல்லி கூறுகிறார். "அவளுக்கு பிரமைகள் ஏற்பட்டன. ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்தது என்றும், அவரது கணவரான நான் பணத்தை சூதாடி இழந்து விட்டேன் என்றும் அவள் கருதினார்," என்று சித் கூறினார்.
 
தற்போது எல்லி குணமடைந்து வருகிறார். ஒரு பூஞ்சைத்தொற்று இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று தான் ஒருபோதும் நினைத்ததில்லை என்று அவர் கூறுகிறார். 
 
கருப்பு பூஞ்சை என்றும் அழைக்கப்படும் மியூகோர்மைசெட்டுகள் சதை உண்ணும் நோயான மியூகோர்மைகோசிஸை ஏற்படுத்துகின்றன.
 
"உங்களிடம் ஒரு துண்டு பழம் இருக்கும்போது, அடுத்த நாள் அது அழுகிப் போனால், அதற்கு காரணம் அதனுள்ளே இருக்கும் மியூகோர் பூஞ்சை தான்" என்று ஹெச்.எஸ்.எல் ஆய்வக விஞ்ஞானி டாக்டர் ரெபேக்கா கார்டன் கூறுகிறார். இது மனிதர்களுக்கு மிகவும் அரிதாக ஏற்படுகிறது. ஆனால் மோசமான பாதிப்பை இதனால் ஏற்படுத்த முடியும் என்று அவர் கூறுகிறார்.
 
கருப்பு பூஞ்சை என்பது பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு இருப்பவர்களிடம் எளிதாக நுழையும் தொற்று. இது முகம், கண்கள் மற்றும் மூளையைத் தாக்கி முக அமைப்பை சிதைத்து, சில நேரங்களில் உயிர் கொல்லியாகவும் மாறும் என்று என்று டாக்டர் கார்டன் எச்சரிக்கிறார்.
 
கொரோனா பெருந்தொற்றின் போது, இந்தியாவில் கருப்பு பூஞ்சை பாதிப்புகள் அதிகரித்தன. 4,000-க்கும் மேற்பட்டோர் இதன் பாதிப்பால் உயிரிழந்தனர். கோவிட் தொற்றுக்காக அதிக அளவில் எடுத்துக் கொள்ளப்பட்ட ஸ்டீராய்டுகள் நோயெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தியதாலும், நீரிழிவு நோயினாலும் கருப்பு பூஞ்சை பெருக்கம் அதிகமானதாக கருதப்படுகிறது.
 
பாக்டீரியா மற்றும் வைரஸ்களில் இருந்து மிகவும் மாறுபட்டது பூஞ்சைத் தொற்று. ஒரு பூஞ்சை நம்மை நோய்வாய்ப்படுத்தும்போது, அது இருமல் மற்றும் தும்மல் மூலம் பரவுவதை விட சுற்றுச்சூழல் மூலமாக பரவுகிறது. 
 
ஒரு பூஞ்சை பெருந்தொற்று, கொரோனா பெருந்தொற்றை விட வேறு வடிவில் இருக்கும் என்று டாக்டர் ஸ்டோன் கூறுகிறார். பரவும் வகையிலும், மக்களுக்கு ஏற்படும் பாதிப்பின் வகையிலும் இந்த வேறுபாடு இருக்கும்.
 
"காலநிலை மாற்றம், சர்வதேசப் பயணங்கள், மக்களிடம் நிலவும் விழிப்புணர்வு குறைபாடு என பூஞ்சை பரவுவதற்கான சாதகமான சூழல் இப்போது நிலவுகிறது," என டாக்டர் ஸ்டோன் கூறுகிறார்.
 
பூஞ்சைகளால் நம் அனைவரையும் ஜாம்பிகளாக மாற்ற முடியாது என்றாலும், பூஞ்சைத் தொற்று ஏற்படுத்தும் பாதிப்புகள் மோசமானதாக இருக்கக்கூடும்.