வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 4 மே 2022 (13:38 IST)

எல்ஐசி பங்குகளை வாங்குவது லாபமா, நஷ்டமா?

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் அதாவது எல்ஐசி யின் தொடக்கப்பங்கு வெளியீடு (ஐபிஓ), இன்று மே 4ஆம் தேதி காலை வெளியானது. மே 9ஆம் தேதி வரை அதற்கு விண்ணப்பிக்கலாம்.
 
எல்.ஐ.சி பாலிசி எடுக்காத அதாவது காப்பீடு பெறாத குடும்பங்கள் நம் நாட்டில் இருக்கும் வாய்ப்பு குறைவு. எல்ஐசியின் ஐபிஓ இப்போது வரப்போகிறது. இது என்ன பெரிய விஷயம் என்ற கேள்வி இப்போது எழுகிறது.
 
இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்ஐசி) இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாகவும், உலகின் ஐந்தாவது பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமாகவும் உள்ளது.
 
கூடவே இது நாட்டின் மிகப்பெரிய நில உரிமையாளர்களில் ஒன்றாகும். அதாவது, நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள மிகவும் மதிப்புமிக்க சொத்தின் பெரும்பகுதி இந்த நிறுவனத்திடம் உள்ளது. இந்தியாவின் பங்குச் சந்தைகளில் பணத்தை முதலீடு செய்யும் மிகப்பெரிய நிறுவனம் எல்ஐசி ஆகும்.
 
நாட்டின் எல்லா மியூச்சுவல் ஃபண்டுகளும் சேர்ந்தாலும், சந்தையில் எல்ஐசியின் முதலீட்டில் பாதித் தொகையை மட்டுமே திரட்ட முடிகிறது. அதனால்தான் எல்ஐசியின் பங்குகளை விற்க அரசும் முடிவு செய்யும் போது, இந்த மதிப்புமிக்க நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் நீண்ட காலமாக காத்திருக்கிறார்கள்.
 
கடந்த ஆண்டு பட்ஜெட்டில், எல்ஐசியின் 5 முதல் 10 சதவிகித பங்குகளை விற்கும் யோசனையை நிதியமைச்சர் முன்வைத்திருந்தார். அதன் பிறகு இந்த காத்திருப்புக்கு மேலும் உற்சாகம் கிடைத்தது. எல்ஐசியின் ஐபிஓ அரசுக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் அதிலிருந்து பெறப்படும் தொகை, அரசு பங்கு விற்பனை இலக்கை அடைய உதவிடும்.
 
எல்ஐசியின் சொத்து மதிப்பு என்ன?
இது மிகவும் கடினமான கேள்வி. நிதியமைச்சரின் அறிவிப்பிலிருந்து, ஐபிஓ வெளிவரும் வரையிலான காலத்தின் பெரும்பகுதி, நாடு முழுவதும் பரவியுள்ள எல்ஐசியின் சொத்துகளின் சந்தை மதிப்பு என்ன என்பதையும், அதையெல்லாம் சேர்த்த பிறகு, எல்ஐசியின் மொத்த சொத்து எவ்வளவு என்று கணக்கிடுவதற்கும் செலவிடப்பட்டது.
 
இதற்குப் பிறகுதான் எல்ஐசியின் பங்குகளை அரசு எந்த விலைக்கு விற்க வேண்டும் என்று கணக்கிட முடியும். இதனுடன், எல்ஐசியின் காப்பீட்டு வணிகத்தின் மதிப்பையும், பங்குச்சந்தையில் அதன் மொத்த முதலீட்டையும் சேர்க்க வேண்டியது அவசியம். எல்லாவற்றையும் சேர்த்துவிட்டு, எல்ஐசியின் மதிப்பை வெறும் கணிதமாக மட்டும் கணக்கிட்டால், அது சுமார் 5.4 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்ற முடிவுக்கு நிபுணர்கள் வந்தனர்.
 
இதை எம்பெடட் வேல்யூ அதாவது உள்ளே பொதிந்துள்ள மதிப்பு என்றும் அழைக்கலாம். ஆனால் நிறுவனங்கள் சந்தையில் நுழையும் போது, இந்த விலையில் இருந்து எத்தனை மடங்கு அதிக விலையில் தங்கள் பங்குகளை சந்தையில் விற்கலாம் என்பதை அவர்கள் தீர்மானிக்க வேண்டும்.
 
நிறுவனத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் அதாவது, எந்த விகிதத்தில் இந்த விலை அதிகரிக்கக்கூடும் என்பதைப் பொருத்து விலை தீர்மானிக்கப்படுகிறது.
 
சந்தையில் நிறுவனத்திற்கு எவ்வளவு பிடிப்பு உள்ளது அதாவது போட்டி எவ்வளவு கடினமானது அல்லது எளிதானது போன்ற மேலும் பல விஷயங்கள் உள்ளன. அதன் அடிப்படையில் எல்ஐசி நிறுவனத்தின் மதிப்பு சுமார் பதின்மூன்றரை லட்சம் கோடி அதாவது சுமார் இரண்டரை மடங்கு அதிகம் என்று ஆலோசகர்கள் கண்டறிந்தனர்.
 
ஆனால் முதலீட்டாளர்கள் மற்றும் ஆலோசகர்களுடன் கலந்துரையாடிய பிறகு அரசு, மறைமுக விலையை விட 1.1 மடங்கு அதிக விளையில் ஐபிஓவில் எல்ஐசியின் பங்குகளை விற்கப் போகிறது.
 
சந்தை நிலவரங்கள் மற்றும் யுக்ரேன் போரால் உருவாகியுள்ள நிச்சயமற்ற தன்மை ஆகியவை இதற்கான காரணமாகும். அதனால்தான் எல்ஐசியின் ஐந்து முதல் 10 சதவிகிதப் பங்குகளை விற்க அரசு முடிவெடுத்திருந்த நிலையில், இப்போது 3.5 சதவிகிதப் பங்குகளை மட்டுமே விற்பனை செய்கிறது அதாவது ஐபிஓவின் அளவு மிகவும் சிறியதாகிவிட்டது.
 
இருப்பினும் இதுவரை இந்திய சந்தையின் மிகப்பெரிய ஐபிஓ இதுவாகும். 221,374,920 பங்குகளை விற்று சுமார் 2,0557 கோடி ரூபாய் திரட்ட அரசு தயாராகி வருகிறது. இதற்கு முன், இன்று வரையிலான மிகப்பெரிய ஐபிஓ Paytm உடையதாக இருந்தது. இதில் 18.5 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டப்பட்டது.
 
எல்ஐசியின் ஐபிஓ காலதாமதம் ஆனது ஏன்?
எல்ஐசி மற்ற நிறுவனங்களைப் போல் இல்லை. 1956 ஆம் ஆண்டில், இந்திய அரசு ஆயுள் காப்பீட்டு வணிகத்தை தேசியமயமாக்கியபோது, அது ஒரு சிறப்புச் சட்டத்தை உருவாக்கி, நாட்டின் எல்லா ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் வணிகத்தையும் இணைத்து எல்ஐசியை உருவாக்கியது. இதன் கீழ், எல்ஐசியின் எல்லா பங்குகளும் அரசிடம் இருந்தன.
 
அதன் மதிப்பை கணக்கிடுவதற்கு கூட நேரம் எடுக்கும் அளவிற்கு, நிறுவனம் மிகப் பெரியதாகிவிட்டது. மேலும் அதன் 5 முதல் 10 சதவிகித பங்குகளை விற்பது கூட பங்குச் சந்தைக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று அரசு அஞ்சியது.
 
எனவே விதிகளை மாற்றி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஐபிஓவில் நேரடியாக விண்ணப்பிக்க அனுமதிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனுடன், எல்ஐசியின் பாலிசிதாரர்களுக்கும் தனி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்படி எல்லா ஏற்பாடுகளையும் செய்த பிறகு அரசு, பிப்ரவரி மாதம் ஐபிஓவுக்கு செபியிடம் விண்ணப்பித்தது.
 
அண்மையில் செபியிடம் இருந்து ஒப்புதல் கிடைத்தது. ஆனால் இதற்கிடையில் யுக்ரேன் போர் காரணமாக சந்தையில் காணப்படும் நிச்சயமற்ற தன்மையை கருத்தில் கொண்டு அரசு, ஐபிஓ அளவைக் குறைக்க வேண்டி வந்தது. 60 ஆயிரம் முதல் 1.5 லட்சம் கோடி ரூபாய் திரட்ட முடியும் என்று முன்னர் மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இப்போது இந்த ஐபிஓ சுமார் இருபதாயிரம் கோடிக்கு மட்டுமே வருகிறது.
 
எல்ஐசியின் மேலும் அதிக பங்குகளை அரசு விரைவில் சந்தையில் விற்குமா?
விதிகளின்படி, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள எந்தவொரு நிறுவனத்திலும், குறைந்தபட்சம் 25% பங்குகள் பொதுமக்களிடம் இருக்க வேண்டும் அதாவது நிறுவனத்தின் உரிமையாளர் அல்லாதவர்கள். இந்த விதிக்கு இணங்க அரசு தனது பங்குகளை 100 சதவிகிதத்திலிருந்து 75 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும்.
 
இந்த விதியை அமல் செய்ய அரசு நிறுவனங்களுக்கு மேலும் சிறிது கால அவகாசம் கிடைக்கும். அதனால்தான் எல்ஐசியின் 3.5 சதவிகித பங்குகளை மட்டுமே விற்க சிறப்பு அனுமதியும் கிடைத்துள்ளது.
 
இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் மேலும் 10 முதல் 20 சதவிகித பங்குகளை விற்க முடியும் என்று அரசு முன்பு கூறியிருந்தது. விதிகளின்படி அரசு அதை செய்யவும் வேண்டும்.
 
ஆனால் இன்று ஐபிஓவில் முதலீடு செய்பவர்களுக்கு இது கவலையளிக்கும் விஷயமாக இருக்கலாம். எனவேதான் ஐபிஓவுக்குப் பிறகு, குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு சந்தையில் தன் மீதமுள்ள பங்குகளை விற்கப்போவதில்லை என்று அரசு உறுதியளித்துள்ளது. எனவே தற்போதுள்ள பங்குதாரர்கள், தங்கள் பங்குகளின் விலை திடீரென வீழ்ச்சியடையும் என்று பயப்பட வேண்டாம்.
 
எல்ஐசியின் பாலிசிதாரர்களுக்கு ஏன் பங்குகள் கொடுக்கப்படுகின்றன?
ஒரு நிறுவனம் தனது எல்லா வாடிக்கையாளர்களையும் தன் பங்குதாரர்களாக மாற்றுவது இதுவே முதல் முறை. காரணம், எல்ஐசியின் ஐபிஓவுக்கு அரசு தயாரான போது, இவ்வளவு பெரிய ஐபிஓவுக்கு சந்தையில் முழு கிராக்கி இருக்குமா என்ற அச்சம் நிலவியது.
அதனால்தான் இந்த தனித்துவமான வழி சிந்திக்கப்பட்டது. எல்ஐசியில் சுமார் 29 கோடி பாலிசிதாரர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பானவர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்யாதவர்கள்.
 
இவர்களில் 10% பேர் எல்ஐசி பங்குகளுக்கு விண்ணப்பித்தாலும் இரட்டை பலன் கிடைக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர். ஒன்று, எல்ஐசியின் ஐபிஓ வெற்றிபெறும் வாய்ப்புகள் அதிகரிக்கும், இரண்டாவதாக இவர்கள் பங்குச் சந்தையின் பாதையில் நுழைவார்கள். பிறகு மற்ற இடங்களிலும் முதலீடு செய்வது பற்றி இவர்கள் சிந்திக்கக்கூடும்.
 
இதனால்தான் எல்ஐசியும், அரசும் மட்டுமின்றி ஒட்டுமொத்த பங்குச் சந்தையும் இதைப் பற்றி உற்சாகமாக இருக்கிறது. எல்.ஐ.சி. முகவர்கள் இது தொடர்பான பணியில் பல மாதங்களாக மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். பங்குதாரராக ஆவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அதற்கான வழிகளையும் பாலிசிதாரர்களுக்கு சொல்லி வருகிறார்கள்.
 
பாலிசிதாரர்களுக்கு எல்ஐசி பங்குகள் இலவசமாக கிடைக்குமா?
இல்லை. இந்தப் பங்குகள் யாருக்கும் இலவசமாக கிடைக்காது. பாலிசிதாரர்களும் அதற்கான விலையை செலுத்த வேண்டும். அவர்களுக்கென தனி ஒதுக்கீடு உள்ளது.
 
இந்த ஐபிஓவில் பத்து சதவிகிதம் அதாவது 2 கோடியே 21 லட்சம் பங்குகள் பாலிசிதாரர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனுடன் அவர்களுக்கு பங்கு விலையில் 60 ரூபாய் தள்ளுபடியும் வழங்கப்படும். பொது முதலீட்டாளர்கள் 902 ரூபாய் முதல் 949 ரூபாய் வரை செலுத்தி வாங்கும் பங்குகளின் விலை பாலிசிதாரர்களுக்கு 842 ரூபாய் முதல் 889 ரூபாய் வரை இருக்கும்.
 
இந்த பங்குகளைப் பெற பாலிசிதாரர் என்ன செய்ய வேண்டும்?
பாலிசிதாரர்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீண்ட காலமாக தனது ஏஜெண்டுகள் மற்றும் விளம்பரங்கள் மூலம் எல்ஐசி ஆலோசனை வழங்கி வருகிறது. பாலிசியை, பான் கார்டுடன் இணைப்பது மிக முக்கியமான விஷயம். இதன் மூலம் நீங்கள் பாலிசிதாரர் ஒதுக்கீட்டின் கீழ் பங்குகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
 
ஏப்ரல் 22 வரை பாலிசியை வாங்கியவர்கள் இந்த வாய்ப்பைப் பெறலாம். இருப்பினும், பழைய பாலிசிதாரர்கள் தங்களது பாலிசி மற்றும் பான் எண்ணை இணைக்கும் பணியை பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். ஆறரை கோடி பேர் தங்கள் பாலிசிகளை பான் உடன் இணைத்துள்ளனர் என்று எல்ஐசி தலைவர் தெரிவித்துள்ளார்.
 
இவர்கள் ஒரு லாட்டுக்கு அதாவது 15 பங்குகளுக்கு விண்ணப்பித்தால் கூட, சுமார் 100 கோடி பங்குகளுக்கு விண்ணப்பங்கள் வந்துவிடும்.
 
இதற்குப் பிறகு, IPO படிவத்தை நிரப்பும்போது, பாலிசிதாரர் ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பம் செய்வதாக இவர்கள் தெரிவிக்க வேண்டும். அவர் பாலிசிதாரர் என்பதற்கு அவரது பான் எண் சாட்சியாக இருக்கும்.
 
பங்குகள் கிடைத்தால் 60 ரூபாய் மலிவாகக் கிடைக்கும். அது நேரடியாக டிமேட் கணக்கிற்குச் சென்றுவிடும். எனவே அவர்கள் டிமேட் கணக்கு வைத்திருப்பது அவசியம். இது வரை டீமேட் கணக்கு இல்லையென்றால், அதை இப்போதுகூட திறக்கலாம்.
 
பாலிசி எவ்வளவு பெரியது அல்லது சிறியது என்பது, கிடைக்கும் பங்குகளின் எண்ணிக்கையை தீர்மானிக்குமா?
இல்லை. பாலிசி பெரியதாக இருந்தாலும் சிறியதாக இருந்தாலும், அனைவருக்கும் இந்த ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்க வாய்ப்பு கிடைக்கும். இதன்பின், அனைவரையும் சமமாக கருதி பங்குகள் அளிக்கப்படும். ஒதுக்கீட்டை விட அதிக பங்குகளுக்கு விண்ணப்பங்கள் வந்தால், லாட்டரி பார்முலாவை முடிவு செய்து, அதன் அடிப்படையில் பங்குகள் வழங்கப்படும்.
 
விண்ணப்பிக்கக்கூடிய குறைந்தபட்ச பங்குகளின் எண்ணிக்கை என்ன?
பாலிசிதாரர் அல்லது பொது நபர் இருவருமே குறைந்தது ஒரு லாட்டுக்கு அதாவது பதினைந்து பங்குகளுக்கு விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். இதை விட குறைவாக விண்ணப்பிக்க முடியாது. பாலிசிதாரர் ஒதுக்கீட்டின் கீழ், அதிகபட்சமாக இரண்டு லட்சம் ரூபாய் வரை விண்ணப்பிக்கலாம்.
 
அதாவது, அதிகபட்சமாக 14 லாட்டுகளுக்கு விண்ணப்பம் செய்யலாம். பொது விண்ணப்பதாரர்களும் குறைந்தபட்சம் அல்லது அதிக பட்சம் அதே எண்ணிக்கைக்குத்தான் விண்ணப்பிக்க முடியும்.
 
2 லட்சம் ரூபாய்க்கு மேல் விண்ணப்பம் செய்ய வேண்டுமெனில், HNI அல்லது High Networth Individual பிரிவின் கீழ் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்தப்பிரிவில் முதலீட்டுக்கான உச்சவரம்பு எதுவும் இல்லை.
 
ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களைச் செய்ய முடியுமா?
ஐபிஓவில் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களைச் செய்ய முடியாது என்றாலும், எல்ஐசியின் ஐபிஓவில் முதல்முறையாக பாலிசிதாரர்கள் ஒரே பான் கார்டைப் பயன்படுத்தி இரண்டு விண்ணப்பங்களைச் செய்யலாம். அதாவது பாலிசிதாரர் ஒதுக்கீட்டின் கீழ் ஒரு விண்ணப்பத்தை செய்யலாம். பொது முதலீட்டாளர்கள் பிரிவு அல்லது HNI பிரிவில் மற்றொரு விண்ணப்பத்தை அளிக்கலாம். எல்ஐசி பாலிசி இல்லாதவர்கள் அல்லது தங்கள் பாலிசியை PAN உடன் இணைக்காதவர்கள் ஒரே ஒரு விண்ணப்பத்தை மட்டுமே அளிக்க முடியும்.
 
IPO வுக்கு எப்போது முதல் எப்போது வரை விண்ணப்பிக்க முடியும்?
எல்ஐசியின் ஐபிஓ மே 4 ஆம் தேதி திறக்கப்பட்டது. இது மே 9 ஆம் தேதி நிறைவடைகிறது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பத்தை செய்யலாம். சில ஆன்லைன் தளங்களில் விண்ணப்பத்தின் இறுதி நேரம் சற்று முன்னதாகவே முடிவடைகிறது என்பதை கடைசி நாளில் விண்ணப்பிக்க நினைப்பவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். எனவே இந்த வேலையை அன்றைய தினம் நண்பகல் 12 மணிக்குள் முடித்துவிடுவது நல்லது.
 
எல்ஐசியின் ஐபிஓவுக்கு விண்ணப்பிப்பது நன்மை தருமா?
இந்த கேள்விக்கான பதில் ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறாக இருக்கும். நிறுவனம் நீண்ட காலமாக லாபம் ஈட்டி வருகிறது. பங்குகள் எந்த விலைக்கு வெளிவர உள்ளதோ, அது நன்றாகவே இருக்கிறது. ஆனால் சந்தையில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டால் என்ன ஆகும் என்று தெரியவில்லை. எனவே ஒவ்வொரு முதலீட்டாளரும் தங்கள் நம்பகமான முதலீட்டு ஆலோசகரிடம் கலந்தாலோசித்த பின்னரே முடிவு செய்யவேண்டும்.