செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 23 ஜூலை 2020 (09:12 IST)

பச்சிளம் குழந்தைக்கு 1000 கி.மீ தொலைவிலிருந்து வரும் தாய்ப்பால்: டெல்லியில் நெகிழ்ச்சி

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பச்சிளம் குழந்தைக்காகத் விமானத்தில் தாய்ப்பால் கொண்டு வரப்படும் நெகிழ்ச்சி மிக்க நிகழ்வு டெல்லியில் நடந்துள்ளது என பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

லடாக் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த டோர்ஜே பால்மோ என்பவருக்குக் கடந்த ஜூன் 16-ம் தேதி லே நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில், அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க முயன்றபோது, குழந்தையால் தாய்ப்பால் குடிக்க முடியவில்லை. இதைக் கண்டு குழந்தையின் தாய் டோர்ஜே அதிர்ச்சியடைந்தார்.

’’நான் அப்போது மைசூரில் இருந்தேன். தாய்ப்பால் குடிக்காததால் குழந்தையை சண்டிகர் அல்லது டெல்லியில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். எனது மனைவியின் சகோதரர் ஜூன் 18-ம் தேதி காலை குழந்தையை விமானத்தில் டெல்லிக்கு அழைத்து வந்தார்’’ என்கிறார் குழந்தையின் தந்தை ஜிக்மெட் வாங்டஸ்.

மைசூரில் வேலை செய்து வந்த ஜிக்மெட், அதே நாளில் கர்நாடகாவிலிருந்து டெல்லி வந்து சேர்ந்தார்.

’’ நான் எனது குழந்தையை அதிக நேரம் கையில் வைத்திருக்கவே அஞ்சினேன். ஏனெனில் கர்நாடகாவிலிருந்து வந்த எனக்கு கொரோனா அச்சம் இருந்தது’’ என்கிறார் அவர்.

டெல்லிக்கு அழைத்துவரப்பட்ட குழந்தை மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.

குழந்தையின் உணவுக்குழாயில் பிரச்சனை இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். ’’esophageal atresia எனும் இந்த பாதிப்பு ஆயிரம் குழந்தைகளில் மூன்று குழந்தைகளுக்கு ஏற்படும்’’ என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

’’இந்த பாதிப்பினால், குழந்தையின் உணவுக் குழாய் மற்றும் மூச்சுக்குழாய் இணைக்கப்பட்டிருக்கும். இதனால் குழந்தையால் தாய்ப்பால் குடிக்க முடியாது.’’ எனவும் மேக்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகின்றனர்.

’’குழந்தை பிறந்து வெறும் 4 நாட்களே ஆனது. இருந்தாலும் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தோம். 3 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது’’ என்கிறார் மருத்துவர் ஹர்ஷ்வர்தன்.

தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்த குழந்தைக்கு, மூக்கு வழியாக உணவு செலுத்தப்பட வேண்டும். ஆனால், குழந்தையின் தாயோ லேவில் உள்ளார். என்ன செய்வது என யோசித்த குழந்தையின் தந்தை, தனது நண்பர்கள் மூலம் லேவில் இருந்து டெல்லிக்கு தாய்பாலை அனுப்ப முடிவு செய்தார்.

ஒரு தனியார் விமான நிறுவனம், லேவில் இருந்து டெல்லிக்கு வரும் தங்களது விமானத்தில் தாய்ப்பாலை இலவசமாகக் கொண்டுவர ஒப்புக்கொண்டது.

டெல்லியிலிருந்து 1000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லேவில் இருந்து, 1 மணி நேரம் 15 நிமிட விமான பயணம் மூலம் குழந்தைக்குத் தாய்ப்பால் வந்து சேர்ந்தது.

’’ஜூன் மாத இறுதி முதல் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை விமானத்தில் வரும் பாலை, எனது மனைவியின் சகோதரர் டெல்லி விமான நிலையத்தில் இருந்து பெற்றுக்கொண்டு மருத்துவமனைக்கு வருவார். கொரோனா அச்சம் காரணமாக இப்போது எனது மனைவியால் டெல்லிக்கு வரமுடியவில்லை.’’என்கிறார் ஜிக்மெட் வாங்டஸ்.

’’நல்லபடியாக எங்களது குழந்தைக்குச் சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 24) நாங்கள் குழந்தையுடன் லே திரும்ப உள்ளோம்’’ என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் அவர்.