வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala

போரிஸ் ஜான்சன்: தீவிர சிகிச்சைப் பிரிவில் இரண்டாவது இரவு - எப்படி இருக்கிறார் பிரிட்டன் பிரதமர்?

கொரோனா வைரஸ் தொற்றுக்காக இரண்டாவது நாளாக தீவிர சிகிச்சைப் பிரிவில் போரிஸ் ஜான்சன் சிகிச்சை பெற்று வருகிறார். லண்டன் புனின் தாமஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜான்சன் குணமடைந்து வருவதாகப் பிரிட்டன் பிரதமர் அலுவலகம் தெரிவிக்கிறது.

பிரதமர் பணிகளை தற்போது கவனித்து வரும் பிரிட்டன் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் போரிஸ் ஜான்சனை ஒரு 'போராளி' எனக் குறிப்பிட்டார். இந்த  கொரோனாவையும் விரைவில் வெல்வார் என அவர் தெரிவித்துள்ளார்.
 
"போரிஸ் வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட சுவாசக் கருவிகள் உதவிகள் இல்லாமல் மூச்சு விடுகிறார்," என்று டொமினிக் தெரிவித்தார். கொரோனாவால் மோசாகப்  பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே வெண்டிலேட்டரில் வைக்கப்படுவார்கள்.
 
டொமினிக், "போரிஸ் என் எசமானர் மட்டுமல்ல என் நண்பர். நம்முடைய வேண்டுதல்கள், நம் எண்ணமும் அவரைச் சுற்றியே உள்ளன," என்றார்.

பிரிட்டன் பிரதமர் பொறுப்பில் டொமினிக்
 
போரிஸ் மருத்துவமனையில் உள்ளதால் பிரதமருக்கான முழு பொறுப்பையும் டொமினிக் ஏற்றுக் கொண்டாரா என்ற கேள்விக்கு, போரிஸுக்கு தேவையான  நேரத்தில் எப்போதும் அவருடன் இருப்பதாகக் கூறினார். இப்போது எடுக்கப்படும் அனைத்து முடிவுகளும் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு என்றும்  தெரிவித்தார்.
 
மூன்று வார சமூக முடக்கம் பிரிட்டனில் வரும் திங்கட்கிழமை முடிவுக்கு வருகிறது. இது நீட்டிக்கப்படுமா என்ற சந்தேகம் பிரிட்டனில் அனைவருக்கும்  இருக்கிறது. இது குறித்து அவர், "தரவுகளின் அடிப்படையிலேயே முடிவு எடுக்கப்படும்." என்றார்.
 
கொரோனா காரணமாகப் பிரிட்டனில் இதுவரை 6,159 பேர் பலியாகி உள்ளனர். நேற்று மட்டும் 786 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நிலை என்ன?
 
நியூயார்க்கில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 731 பேர் பலியாகி உள்ளனர். இவ்வளவு மரணங்கள் ஒரே நாளில் பதிவாவது நியூயார்க்கில் இதுவே முதல்முறை.
 
நியூயார்க்கில் பலியானவர்கள் எண்ணிக்கை மட்டும் 5,489. ஒட்டுமொத்தமாக அமெரிக்காவில் 12,700 பேர் உயிரிழந்து உள்ளனர்; 398,185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
பிரான்ஸில் பலியானவர்களின் எண்ணிக்கை 10,238 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 607 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மார்ச் 15ஆம் தேதி முதல்  பிரான்ஸில் சமூக முடக்கம் அமலில் உள்ளது. இது இன்னும் தீவிரப்படுத்தப்பட உள்ளது.
 
பாரிஸில் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மக்கள் வெளியே நடமாடுவது தடை செய்யப்பட உள்ளது.
 
வுஹான் நகர மக்களுக்கு புதிய அனுமதி
 
ட்விட்டர் நிறுவனர் ஜாக் டோர்சி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் தருகிறார். இது அவர் மொத்த சொத்து மதிப்பில்  28 சதவீதமாகும். கொரோனா வைரஸ் உருவான சீன நகரமான வுஹானில், கோவிட்-19 தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டவர்கள் வெளியே பயணிக்க  அனுமதிக்கப்பட்டுள்ளது.
 
தொற்று இல்லை என்று, சீன அரசின் செல்பேசி செயலி மூலம், உறுதிசெய்யப்பட்டவர்கள் மட்டும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி வெளியூர் செல்லலாம்.
 
சர்வதேச அளவில் கொரோனா காரணமாக 1,428,428 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 82,020 பேர் பலியாகி உள்ளனர் மற்றும் 3,00,198 பேர் குணமடைந்துள்ளனர்.