1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 7 செப்டம்பர் 2020 (08:53 IST)

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம்: அரசியலுக்காக பயன்படுத்துகிறதா பாஜக?

பாரதிய ஜனதா கட்சியின் கலாசார பிரிவு 'சுஷாந்த் சிங்கிற்கு நீதி' என்ற ஹாஷ்டேகுடன் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது.

பிகார் தேர்தலை ஒட்டி மக்கள் கவனத்தை ஈர்க்கவும், அவர்களது அனுதாபத்தைப் பெறவுமே இவாறு பா.ஜ.க செய்வதாக அரசியல் விமர்சகர்கள் கருதுவதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர் புகைப்படத்துடன் கூடிய அந்த சுவரொட்டியில், "நாங்களும் மறக்கவில்லை, யாரையும் மறக்கவும் விடமாட்டோம்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மரணத்திலும் அரசியலா?

பிகாரில் பாரதிய ஜனதா கட்சி இது வரை இவ்வாறான 25 ஆயிரம் சுவரொட்டிகளை அடித்துள்ளதாகவும், சுஷாந்த் முகம் தாங்கிய 30 ஆயிரம் மாஸ்க்குகளும் அச்சடிக்கப்பட்டு ஜூலை மாதம் முதல் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தெரிவிக்கிறது.

பா.ஜ.கவின் கலை மற்றும் கலாசார பிரிவு ஒருங்கிணைப்பாளர் வருண் குமார் சிங், "நாங்கள் சுஷாந்த் விஷயத்தை உணர்வுப்பூர்வமாக பார்க்கிறோம். அரசியலாக பார்க்கவில்லை," என கூறுகிறார்.

சுஷாந்த் தொடர்பாக இரண்டு காணொளிகளை தயாரித்து உள்ளதாகவும், விரைவில் அவை சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுபோல பிகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு பா.ஜ.க எழுதிய கடிதமொன்றில், பட்னாவின் ராஜிப் நகர் செளகிற்கு ராஜ்புத் என்று பெயர்சூட்ட வேண்டும் என்றும், நாலந்தா ராஜ்கிரில் உள்ள திரைப்பட நகரத்திற்கும் அவர் பெயர் சூட்ட வேண்டும் என்றும் கோரி உள்ளது.

எதிர்க் கட்சிகள் கூறுவது என்ன?

இதற்கு எதிர்வினையாற்றி உள்ளது காங்கிரஸ்.

"யாருடைய பிணத்தை வைத்தும் அரசியல் செய்யக் கூடாது," என காங்கிரசை சேர்ந்த மிர்ஜுவாய் திவாரி கூறி உள்ளார்.

அதுபோல ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியும் சுஷாந்த்தை வைத்து பா.ஜ.க அரசியல் செய்வதாக குற்றஞ்சாட்டி உள்ளது.

அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நவல் கிஷோர் யாதவ், " ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி கட்சிதான் முதல் முதலாக சுஷாந்த் மரணத்திற்கு நீதி கோரியது, சிபிஐ விசாரணைக்கும் கோரிக்கை வைத்தது. இப்போது விசாரணை நடந்து வருகிறது. மெல்ல உண்மைகள் வெளியே வரும்," என்கிறார்.

இந்த தேர்தலில் பல முக்கிய பிரச்சனைகள் உள்ளன. ஊழல், மாநிலத்தில் அதிகரிக்கும் குற்றங்கள், புலம்பெயர் தொழிலாளர் பிரச்சனை. இவற்றைதான் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி கையில் எடுக்கும் என்கிறார் கிஷோர் யாதவ்.

சுஷாந்த் மரணம் தேர்தலில் எதிரொலிக்குமா?

இன்னும் பிகார் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. கொரோனாவால் ஏற்பட்டுள்ள பல பிரச்சனைகள் உள்ளன. இதற்கு மத்தியில் சுஷாந்த் மரணம் தேர்தலில் எதிரொலிக்குமா?

மூத்த பத்திரிகையாளர் மணிகாந்த் தாகூர், "பா.ஜ.கவும், ஐக்கிய ஜனதா தளமும் அவ்வாறு ஆக வேண்டும் என விரும்புகின்றன. ஆனால், அது பகல் கனவுதான். அவ்வாறு ஆக வாய்ப்பில்லை," என கூறுகிறார்.

"சுஷாந்த் மரணம் பிகாருக்கும் பிகாரிகளுக்கும் உணர்வுபூர்வமான பிரச்சனை. இதில் அனைவரும் உண்மையை அறிந்துகொள்ள விரும்புகிறார்கள். ஆனால், அது தேர்தலில் எல்லாம் எதிரொலிக்காது," என்கிறார்.

'லவ் ஜிஹாத்'

சுஷாந்தை சுற்றி அரசியல் ஏதோ ஒரு விதத்தில் இருந்துவருவதாக சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டுள்ளனர்.

அவர் நடிப்பில் கேதர்நாத் என்ற படம் 2018ஆம் ஆண்டு வெளியானது. அப்போது அந்த படத்தை லவ் ஜிஹாத் என கூறி எதிர்ப்பு தெரிவித்தது இதே பா.ஜ.கதான் என நினைவுகூர்கிறார்கள்.