செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 17 ஜனவரி 2021 (12:40 IST)

பிக் பாஸ் சீசன் 4: வெல்லப் போவது யார்?

கடந்த மூன்று மாதங்களாக ஒளிபரப்பப்பட்டு வந்த 'பிக் பாஸ் சீசன் - 4' நிகழ்ச்சியின் இறுதி நிகழ்ச்சி இன்று (ஜனவரி 17) நடைபெறுகிறது.

நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 4ஆம் தேதி 16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது.

முந்தைய சீசன்களை போல இந்த சீசன் சுவாரஸ்யமாக இல்லை என்று ஒரு தரப்பில் கூறப்பட்டாலும், வழக்கமாக நிகழ்ச்சி குறித்து சமூக வலைதளங்களில் நடத்தப்படும் விவாதங்களுக்கு எந்த பஞ்சமும் இல்லாமல் இருந்தது.

பிக் பாஸ் சீசன் - 4 நிகழ்ச்சியின் இறுதிகட்ட போட்டியாளர்களாக ரியோ ராஜ், ஆரி அர்ஜுனன், பாலாஜி முருகதாஸ், ரம்யா பாண்டியன், சோம் ஷேகர் மற்றும் கேப்ரியல்லா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

இதில் சோம் ஷேகர் `டிக்கெட் டூ ஃபினாலே` டாஸ்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், ஐந்து லட்சத்தை எடுத்துக் கொண்டு வெளியேறும் வாய்ப்பை தேர்வு செய்து வீட்டை விட்டு வெளியேறினார் கேப்ரியல்லா. எனவே தற்போது ஐந்து போட்டியாளர்கள் களத்தில் உள்ளனர்.

சமூக வலைதளங்களில் விவாதங்கள்

இந்த போட்டியில் ஆரம்பம் முதலே சக போட்டியாளர்களிடமிருந்து விலக்கி நிறுத்தப்பட்ட நடிகர் ஆரி அர்ஜுனனுக்கு சமுக வலைதளங்களில் பெரும் வரவேற்பு உள்ளது.

ஒரு சிலர் அவர் வெற்றியாளராக வாய்ப்புள்ளது என்று தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதே சமயம் பாலாஜி முருகதாஸ், ரியோ ராஜ் மற்றும் ரம்யா பாண்டியனுக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. ஒருசிலர் கடந்த சீசனில் யாரும் எதிர்பார்க்காத விதமாக முகேன் தேர்வு செய்யப்பட்டதுபோல இந்த சீசனில் சோம் ஷேகர் தேர்வு செய்யப்படலாம் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சீசனில் தர்ஷன் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார் என்று பெரிதும் பேசப்பட்ட நிலையில் அவர் போட்டியிலிருந்து `எவிக்ட்` ஆனது குறிப்பிடத்தக்கது

சண்டை சச்சரவுகள் நிறைந்த ஒரு சீசன்

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றால் அதில் சண்டைகளுக்கு பஞ்சமில்லை என்றாலும் இந்த சீசனில் அது சற்று சீக்கிரமாகவே தொடங்கிவிட்டது.

குறிப்பாக ஆரி அர்ஜுனன் மற்றும் பாலாஜி முருகதாஸுக்கு இடையே கடுமையான வாக்குவாதங்கள் பல நிகழ்ந்தன. அது `ப்ரோமோ கன்டெண்ட்` ஆக பல சமயங்களில் பயன்படுத்தப்பட்டன. ஒரு கட்டத்தில் ஆரி அர்ஜுனனுக்கு எதிராக கிட்டதட்ட அனைத்து போட்டியாளர்களும் திரும்பினர். ஆனால் அவ்வப்போது அது அவ்வாறு இல்லை என்பதுபோலவும் காட்சிகள் நிகழ்ந்தன.

தொகுப்பாளர் கமல் ஹாசன்

நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் கடந்த நான்கு சீசன்களையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

கடந்த சீசனில் அரசியல் ரீதியாக மறைமுகமாக சில கருத்துக்களை பதிந்திருந்தாலும், இந்த சீசனில் வெளிப்படையாகவே பல அரசியல் கருத்துகளை அவர் முன் வைத்திருந்தார். மேலும் ஒரு நிகழ்ச்சியின்போது கைப்பகுதியில் மக்கள் நீதி மய்யக் கட்சியின் படம் கொண்ட சட்டை ஒன்றையும் அணிந்து வந்தார்.

இந்த சீசனில் கமல் ஹாசன் போட்டியாளர்களிடம் கடுமையாக இல்லை என்ற விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

மேலும் இந்த சீசனில் தான் தொகுத்து வழங்கிய ஒவ்வொரு நிகழ்ச்சியின் முடிவிலும் புத்தகம் ஒன்றையும் பரிந்துரை செய்து வந்தார் கமல் ஹாசன்.

கொரோனாவால் ஏற்பட்ட தாமதம்

வழக்கமாக ஜூன் மாதம் இறுதியில் தொடங்கப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக அக்டோபர் மாதத்தில்தான் தொடங்கப்பட்டது. அதன் காரணமாக ஆயுத பூஜை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகைகளை போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் கொண்டாடினர்.

மேலும் இந்த சீசனில் இதற்கு முந்தைய சீசன்களில் இல்லாத வகையில் பெரு மழை காரணமாக போட்டியாளர்கள் வீட்டை காலி செய்து ஒரு நாள் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.

2017ஆம் ஆண்டு தமிழில் துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீஸனில் ஆரவ்வும் இரண்டாவது சீஸனில் நடிகை ரித்விகாவும் மூன்றாவது சீஸனில் முகேனும் வெற்றிப் பெற்றுள்ள நிலையில் நான்காவது சீசனின் வெற்றியாளர் யார் என்று ரசிகர்கள் ஆர்வமாக சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.

கடந்த சீசனில் இறுதி வாரத்தில் போட்டியாளர்களுக்கு ஆதரவாக மொத்தம் 20 கோடி வாக்குகள் வந்ததாக நிகழ்ச்சியின்போது கமல் ஹாசன் தெரிவித்திருந்தார். அதில் முகேனுக்கு சுமார் 7 கோடி வாக்குகள் வந்தன என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.