வியாழன், 22 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 13 அக்டோபர் 2020 (14:47 IST)

பெலாரூஸ் போராட்டம்: ஆபத்தான ஆயுதங்களை பயன்படுத்த காவல்துறைக்கு அதிகாரம்

பெலாரூஸ் போராட்டம்: ஆபத்தான ஆயுதங்களை பயன்படுத்த காவல்துறைக்கு அதிகாரம்
பெலாரூஸில் நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்க காவல்துறையினருக்கு ஆபத்தான ஆயுதங்களை பயன்படுத்த அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் மூத்த அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.
 
அங்கு ஆளும் ஆட்சியாளர் லூகஷென்கோவுக்கு எதிரான குழுக்கள், அரசுக்கு எதிரான போராட்டங்களின்போது மிகவும் கடும்போக்குவாதத்துடனும் வன்முறையிலும் இறங்குவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அந்த அதிகாரி கூறினார்.
 
இந்த நிலையில், பெலாரூஸில் அமைதியை கொண்டு வருவதற்காக, அதிபர் அலெக்சாண்டர் லூகஷென்கோவுக்கு எதிரான தடைகளை கொண்டு வர தயார் நிலையில் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
 
கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த தேர்தலில் அதிபர் லூகஷென்கோ அடைந்த வெற்றி முறைகேடு மூலம் சாத்தியமானதாகக் கூறி அந்நாட்டில் எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அவை விடுத்த அழைப்பின்பேரில் கடந்த இரு மாதங்களாக தினமும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
 
அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் மிகவும் கடுமையான நடவடிக்கைகளை கையாண்டு போராட்டக்குழுவினரை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்குவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
 
கடந்த திங்கட்கிழமை தலைநகர் மின்ஸ்கில் நடந்த போராட்டத்தை கலைப்பதாகக் கூறி, கையெறி குண்டுகள், கண்ணீர் புகை குண்டுகளை காவல்துறையினர் பயன்படுத்தியதாக போராட்டக்காரர்கள் கூறுகிறார்கள். இந்த சம்பவத்தில் ஏராளமான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பெலாரூஸ் உள்துறை அமைச்சக செய்த்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.