இரான் மொத்தமாக அழிந்துவிடும்: எச்சரிக்கை விடுத்த டிரம்ப்!
அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே போர் ஏற்பட்டால், அத்துடன் இரான் மொத்தமாக அழிந்துவிடும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"இரானுக்கு போர் வேண்டுமென்றால், அதுவே அந்நாட்டின் முடிவாக இருக்கும். அமெரிக்காவை பயமுறுத்த வேண்டும் என்று நினைக்காதீர்கள்" என அதிபர் டிரம்ப் தனது ட்வீட்டில் பதிவிட்டுள்ளார்.
இதுபோன்ற மிரட்டல்கள் விடுத்து இரானை ஒன்றும் செய்ய முடியாது என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மொஹமத் ஜாவத் சாரிஃப் ட்வீட் செய்துள்ளார். சமீபத்தில் வளைகுடா பகுதியில் கூடுதல் போர்கப்பல்கள் மற்றும் போர்விமானங்களை அமெரிக்கா நிலைநிறுத்தியது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஃபாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய அதிபர் டிரம்ப், இரானை அணு ஆயுதங்கள் தயாரிக்க விடமாட்டோம் என்றும் ஆனால், அந்நாட்டுடன் எந்த சண்டையையும் விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
"எனக்கு போர் செய்ய எந்த விருப்பமும் இல்லை. ஏனெனில் போர் பொருளாதாரங்களை பாதிக்கும். முக்கியமாக போர் மக்களை கொல்லும்" என்று அவர் குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கு இடையே அதிகரிக்கும் பதற்றங்களை தணிக்கும் விதமாக இரானும் சற்று இறங்கி வந்தது. அமெரிக்காவுடன் போர் நடத்தும் எண்ணம் இல்லை என்று இரான் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அதிபர் டிரம்பின் ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள சாரிஃப், "அலெக்சாண்டர், செங்கிஸ் கான் போன்ற மற்ற படையெடுப்பாளர்கள் செய்ய முடியாததை டிரம்ப் செய்ய முடியும் என்று நினைக்கிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.