திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : சனி, 30 அக்டோபர் 2021 (16:03 IST)

அமெரிக்க பூர்வகுடி தலைவரின் தலைமுடியை வைத்து கொள்ளுப் பேரனை உறுதி செய்த விஞ்ஞானிகள்

19-ம் நூற்றாண்டை சேர்ந்த புகழ் பெற்ற அமெரிக்க பூர்வகுடி இனத் தலைவர் 'சிட்டிங் புல்' என்பவரின் தலைமுடி மாதிரியை வைத்து அவரது கொள்ளுப் பேரன் யார் என்பதை உறுதி செய்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

வாஷிங்டன் டி.சி.யில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த சிட்டிங் புல்லின் தலை முடி மாதிரியில் இருந்து எடுக்கப்பட்ட டி.என்.ஏ.வை வைத்து ஆய்வு செய்யப்பட்டது. இதன் மூலம், எர்னி லா பாயின்டே என்கிற 73 வயது மனிதர் சிட்டிங் புல்லின் கொள்ளுப்பேரன் என்பது உறுதி செய்யப்பட்டது. இவர் சவுத் டகோடாவை சேர்ந்தவர்.
 
நீண்ட காலம் முன்பு இறந்தவர்களின் மரபணு (டி.என்.ஏ.) சிதைவுகளில் இருந்து, அவர்களது குடும்ப வரிசையை கண்டுபிடிக்க உதவுகிற ஒரு புதிய முறையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
 
மற்ற வரலாற்று நாயகர்களின் வாழும் வாரிசுகளை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பின் கதவை இது திறந்துவிட்டுள்ளது.
 
"என் கொள்ளுத் தாத்தாவுக்கும் எனக்குமான வாரிசு உறவை அடையாளம் காண்பதற்கான வேறொரு முறைதான் இந்த டி.என்.ஏ. ஆய்வு என்று நான் கருதுகிறேன்," என லா பாயின்டே ராய்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறினார். அவருக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர்.
 
"எங்கள் முன்னோர்களுக்கும் எங்களுக்குமான உறவை சிலர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். அவர்கள் எப்போதும் தொல்லைதான். இந்த ஆய்வு முடிவைக்கூட அவர்கள் சந்தேகிப்பார்கள்," என்கிறார் அவர்.
 
மரபணு சிதைவைக் கொண்டு பாரம்பரிய கிளைகளைக் கண்டறியும் இந்தப் புதிய முறையை எஸ்கே வில்லர்ஸ்லவ் என்பவர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு உருவாக்கியது.
 
இவர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயிர் மரபியல் மையத்தை சேர்ந்த லுண்ட்பெக் ஃபவுண்டேஷனின் இயக்குநராக உள்ளார்.
 
தலைமுடியில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட மரபணுச் சிதைவுகளில் இருந்த ஆட்டோசோமல் டி.என்.ஏ.வை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஆய்வு முறை செயல்படுகிறது.
 
தன் சிறுவயதில் இருந்தே சிட்டிங் புல் வாழ்க்கை குறித்து தாம் வியப்பு கொண்டிருந்ததாகவும், லா பாயின்டேவுக்கு உதவி செய்வதற்கு தாம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு முன்வந்ததாகவும் ஆய்வுக் குழுவின் தலைவர் வில்லர்ஸ்லெவ் தெரிவித்தார்.
 
சிட்டிங் புல்லின் நீள் சிண்டு முடியை 2007ம் ஆண்டு லா பாயிண்டேவிடம் ஒப்படைத்தது, வாஷிங்டன் டிசி-யில் உள்ள ஸ்மித்சோனியன் இன்ஸ்டிட்டியூஷன். இந்த நீள் சிண்டு முடியை ஆய்வுக் குழுவிடம் தருவதற்கு முன்பு, தங்கள் பாரம்பரிய சடங்கு ஒன்றில் பங்கேற்கவேண்டும் என்று வில்லர்ஸ்லெவ்வை கேட்டுக்கொண்டார் லா பாயின்டே.
 
மருத்துவர், மேளக்காரர், மந்திரம் ஓதல் எல்லாம் இடம் பெறும் இந்த சடங்கில் பங்கேற்றால் இந்த ஆய்வுக்கு சிட்டிங் புல்லின் ஆவி ஆசி வழங்கும் என்று லா பாயின்டே நம்பினார்.
 
இந்த சடங்கில் சிட்டிங் புல்லின் ஆவியின் கட்டளை என்று கூறி பெரும்பாலான சிண்டு முடியை எரித்துவிட்டார் லா பாயின்டே. இதனால், ஆய்வுக் குழுவுக்கு வெறும் 4 சென்டி மீட்டர் முடியே மிஞ்சியது என்று ஏ.எஃப்.பி. செய்தி முகமையிடம் கூறினார் விஞ்ஞானி வில்லர்ஸ்லெவ்.
 
அப்போது எல்லாம் நாசமாகிவிட்டதாகவும், ஆனால் வெறும் 4 செ.மீ. முடி மட்டுமே எஞ்சியிருந்ததால், ஆய்வுக் குழுவுக்கு புதிய ஆய்வு முறையை உருவாக்கவேண்டிய நெருக்கடி ஏற்பட்டது என்றும் வில்லர்ஸ்லெவ் கூறினார்.
 
5 கம்பெனி அமெரிக்கப் படையை நாசம் செய்த சிட்டிங் புல்
 
1876ம் ஆண்டு நடந்த லிட்டில் பிக்ஹார்ன் போரில் 1,500 பூர்வகுடி அமெரிக்கர்களைக் கொண்ட படைக்கு சிட்டிங் புல் தலைமையேற்று போர் புரிந்தது மிகவும் புகழ் பெற்ற சம்பவம்.
 
அமெரிக்க ராணுவ ஜெனரல் கஸ்டர் என்பவரையும், ஐந்து கம்பெனி ராணுவத்தினரையும் இந்தப் போரில் துடைத்தெறிந்தது சிட்டிங் புல்லின் படை.
 
டடன்கா - ஐயோடன்கா என்ற இயற்பெயர் கொண்ட சிட்டிங் புல் 1890ம் ஆண்டு அமெரிக்க அரசாங்கத்தின் சார்பாக செயல்பட்ட "இந்திய போலீஸ்" படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.