திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: வியாழன், 19 நவம்பர் 2020 (13:59 IST)

அலெக்சாண்டர் டுபியான்ஸ்கி: 50 ஆண்டுகளாக தமிழுக்கு உழைத்த ரஷ்ய தமிழறிஞர் மரணம்

ரஷ்ய நாட்டு தமிழறிஞர் பேராசிரியர் அலெக்சாண்டர் டுபியான்ஸ்கி, மாஸ்கோவில் கொரோனாவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79.

இவர் கடந்த 50 ஆண்டு காலமாக தமிழ் பணியாற்றி வந்தார். ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் அலெக்சாண்டர் டுபியான்ஸ்கி  காலமானார்.
 
அவர் உயிரிழந்த தகவலை சென்னையில் உள்ள ரஷ்ய அறிவியல் கலாசார மையத்தின் நிர்வாகிகளும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
 
1941-ல் பிறந்த அலெக்ஸாண்டர் டுபியான்ஸ்கி, மாஸ்கோ அரசு பல்கலைக்கழகத்தில் 1970-ல் கீழைநாட்டு மொழிகளுக்கான நிறுவனத்தில் பட்டம் பெற்றார். தமிழ், சமஸ்கிருதம் இரண்டிலும் புலமை பெற்றவர் துப்யான்ஸ்கி. தமிழைச் சரளமாகப் பேசக்கூடியவர்.
 
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக டுபியான்ஸ்கி ரஷ்யாவில் 10 பல்கலைக்கழகங்களின் இளங்கலை மாணவர்களுக்கு தமிழ் கற்பித்து வந்தார்.
 
கடந்த பல ஆண்டுகளாக, ஆண்டுக்கு ஒரு முறை சங்க இலக்கியம் பற்றிய வாசிப்புப் பட்டறையை அவர் நடத்தி வந்தார்.
 
இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், செம்மொழி மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பித்த ரஷ்ய நாட்டுத் தமிழறிஞர் - ஆய்வாளர் -  பேராசிரியர் அலெக்ஸாண்டர் டுபியான்ஸ்கி கொரோனா பெருந்தொற்றால் மறைவெய்தியது ஈடுசெய்ய இயலாத பேரிழப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.

"பொன்னியும் - வைகையும் - பொருநையும் இன்னும் பல ஆறுகளும் பாய்ந்து வளம் செழிக்கச் செய்த தமிழ்ப் பண்பாட்டினை - இலக்கியத்தினை - வரலாற்றினை  வால்கா நதி பாயும் ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயிற்றுவித்தவர் அறிஞர் டுபியான்ஸ்கி.
 
சோவியத் யூனியனில் இருந்த பகுதிகள் தனித்தனியாகப் பிரிந்தபிறகு, அங்கே தமிழ்மொழி சார்ந்த பதிப்புகள் குறைந்து போன நிலையில், பேராசிரியர் துப்யான்ஸ்கி தன் சொந்த முயற்சியாலும் ஆய்வுப் பார்வையாலும் தமிழ் வளர்க்கும் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தது போற்றுதலுக்குரியதாகும்" என்று முக ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
அவரது மறைவுக்கு கவிஞர் வைரமுத்து வெளியிட்ட இரங்கல் செய்தியில், "வால்காவோடு வைகையை இணைத்தவருக்கு எங்கள் புகழ் வணக்கம். இது ஈடுசெய்தாக வேண்டிய இழப்பு. செய்தால்தான் டுபியான்ஸ்கியின் உயிர் ஓய்வுறும். யார் முன்வரினும் எங்கள் உறுதுணையும் உறுபொருளும் உண்டு" என்று ட்வீட் செய்துள்ளார்.