1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 15 ஆகஸ்ட் 2021 (16:35 IST)

ஆப்கானிஸ்தான்: காபூல் எல்லையில் காத்திருக்க போராளிகளுக்கு தாலிபன்கள் உத்தரவு - களத்தில் என்ன நடக்கிறது?

ஆப்கான் தலைநகர் காபூலின் நாலா புறமும் தாலிபன்கள் சூழ்ந்துள்ளனர். அங்குள்ள நகர எல்லையில் காத்திருக்குமாறு தமது போராளிகளை தாலிபன்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மக்கள் அதிகம் வாழும் காபூல் நகரில் உள்ளூர் மக்களுக்கு ஆபத்து நேரலாம் என்று கருதி, நகரின் எல்லைகளிலேயே தயாராக காத்திருக்குமாறு தமது போராளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தாலிபன்கள் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர்.

அதில், தற்போதைக்கு நகரின் பொறுப்பு அரசிடமே உள்ளது. அமைதியான வழியில் ஆட்சிப்பொறுப்பை அரசு ஒப்படைப்பது தொடர்பாக அதனுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், ஆப்கானியர்கள் நாட்டுக்குள்ளேயே தங்கியிருக்குமாறு வலியுறுத்தியுள்ள தாலிபன்கள், வாழ்வின் அனைத்து நிலைகளிலும் உள்ள மக்கள், அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொறுப்புள்ள அரசாங்கம் மூலம் எதிர்கால இஸ்லாமிய அரசு முறைக்கு நாடு மாறுவதை காண வேண்டும் என்று கூறியுள்ளனர்.

எனினும், காபூல் வீதிகளில் தாலிபன் போராளிகள் தங்களுடைய கொடிகளை ஏந்தியவாறு நிற்பதையும் சில இடங்களில் துப்பாக்கி சூடு சத்தமும் கேட்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆட்சி மாற்றத்துக்கு தயாராகும் அமைச்சர்கள்

இதற்கிடையே, ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா. சிறப்புப் பிரதிநிதியுடன் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். அங்கு அமைதியான முறையில் ஆட்சி அதிகாரம் தாலிபன்கள்வசம் ஒப்படைக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

எனினும், அந்த பிராந்தியத்தில் விரிவாக செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பிபிசியின் யால்டா ஹக்கிம், "தாலிபன்கள் தலைநகருக்குள் முன்னேறி வரும்போது பெரிய எதிர்ப்பு காணப்படவில்லை," என்று தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் தற்போதுள்ள நிலைமை, மனிதாபிமான பேரழிவாகி விட்டது என்று ஐ.நா சர்வதேச வளர்ச்சிக்குழுவின் முன்னாள் செயலாளர் ரோரி ஸ்டீவார்ட் கூறியுள்ளார்.

"இந்த நாட்டில் எல்லாமே தவறாக நடக்கிறது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மருத்துவ நிலையங்கள் அடைக்கப்பட்டுள்ளன. மக்கள் தங்களுடைய வீடுகளிலேயே முடங்கியிருக்கிறார்கள். எங்கும் சூறையாடல்கள் நடக்கின்றன. சொந்த நாட்டை விட்டே மக்கள் அகதிகள் போல வெளியேறுகிறார்கள். நடக்கும் சம்பவங்களைப் பார்த்து பல ஆப்கானியர்களும் அச்சம் அடைந்து காணப்படுகின்றனர்", என்று அவர் தெரிவித்தார்.

காபூலுக்கு முன்னர் கடைசி முக்கிய நகரை கைப்பற்றிய தாலிபன்கள்

தற்போது ஆப்கானிஸ்தானின் அரசுப் படைகள் வலுவாக இருந்த வடக்குப் பகுதியின் கடைசி முக்கிய நகரமான மசர் இ ஷரீஃப்பையும் தாலிபன்கள் கைப்பற்றியுள்ளனர்.

பன்னெடுங்காலமாகவே மசர் இ ஷரீஃப் நகரம் தாலிபன்களுக்கு எதிராக இருந்தது. அப்படிப்பட்ட நகரத்தை தாலிபன்கள் கைப்பற்றி இருப்பது, தாலிபன்களின் முக்கிய முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.

சில தினங்களுக்கு முன்பு தான் ஆப்கானிஸ்தானின் அதிபர் அஷ்ரப் கனி அந்நகரத்தில் பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தானில் மசர் இ ஷரீஃப் உட்பட பல்வேறு முக்கிய நகரங்கள் தொடர்ந்து தாலிபன்கள் வசமாகி வருகின்றன. மேலும் தாலிபன்கள் ஆப்கன் தலைநகரான காபூலை நோக்கி முன்னேறி வருவதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

இந்த வன்முறையால் சுமார் 2.5 லட்சம் மக்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களை விட்டு பாதுகாப்புக்காக காபூலுக்குத் தப்பிச் சென்றுள்ளனர்.

இதுவரை தாலிபன்கள் கைப்பற்றிய நகரங்களில், பெண்கள் புர்கா அணிய கட்டாயப்படுத்தப்படுவதாகவும், சமூக விதிகளை பின்பற்றாதவர்களை அடிப்பதாகவும் கூறப்படுகிறது. மேற்குலக நாடுகளோ ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டு மக்களைக் காப்பாற்றும் முயற்சியில் இருக்கின்றனர்.

மசர் இ ஷரீஃப் வீழ்ந்தது எப்படி?

ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தின் தலைநகர் மற்றும் ஆப்கனின் நான்காவது பெரிய நகரமான மசர் இ ஷரீஃப் பெரிய போராட்டங்களின்றி தாலிபன்கள் வென்றதாக அந்நகரத்தின் உள்ளூர் அதிகாரி ஒருவர் கூறினார்.

அந்நகரத்தில் தேசிய ராணுவம் முதலில் சரணடைந்ததால், மற்ற அரசுக்கு ஆதரவான படைகள் மற்றும் ஆயுதமேந்திய போர் குழுக்கள் சரணடைய வேண்டி வந்ததாக பால்க் மாகாணத்தைச் சேர்ந்த அபாஸ் இப்ராஹீம்சாதா அசோசியேடட் பிரஸ் முகமையிடம் கூறியுள்ளார்.

மசர் இ ஷரீஃப் ஒரு முக்கிய பொருளாதார மையம். இந்நகரம் உஸ்பெகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் போன்ற நாடுகளின் எல்லைப் புறத்தில் அமைந்திருக்கிறது. 1990-களில் இந்நகரம் தாலிபன்கள் வசம் இருந்தது நினைவுகூரத்தக்கது.

உஸ்பெக் இனத்தைச் சேர்ந்த அப்துல் ரஷீத் டோஸ்டம் மற்றும் தஜிக் தலைவர்களில் ஒருவரான அட்டா மொஹம்மத் நூர் ஆகியோர் அம்மாகாணத்தை விட்டு தப்பி ஓடியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அப்துல் ரஷீத் டொஸ்டம்மின் ஆளில்லா வீட்டில் தாலிபன்கள் இருப்பது போன்ற சில காணொளி காட்சி சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த தோல்விக்கு ஆப்கன் அரசுப் படைகளே காரணம் என சனிக்கிழமை வெளியான ஃபேஸ்புக் பதிவில் தஜிக் தலைவர் அட்டா மொஹம்மது நூர் குறை கூறியுள்ளார். மேலும் அரசுப் படைகள் தங்களின் ஆயுதங்கள் மற்றும் சாதனங்களை தாலிபன்களிடம் கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தானும் (நூர்), டோஸ்டமும் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"தாலிபன்கள் ஒவ்வொரு வீடாக சோதனை செய்கிறார்கள். நாங்கள் வீட்டிலேயே தான் இருக்கிறோம். துரதிர்ஷ்டவசமாக எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை" என அந்நகரத்தைச் சேர்ந்த ஒருவர் பிபிசியிடம் கூறியுள்ளார்.

மேலும் "நாங்கள் மிகவும் பயத்தில் இருக்கிறோம். என் குழந்தைகள் பயத்தில் இருக்கிறார்கள். என் மனைவி அழுது கொண்டிருக்கிறார். நாளை என்ன செய்யப் போகிறோம்?" என்கிறார் அவர்.

மசர் இ ஷரீஃப் போலவே, சனிக்கிழமை (ஆகஸ்ட் 14) பக்திகா மற்றும் குன்வார் மாகாண தலைநகரங்களும் தாலிபன்கள் வசமாகியுள்ளன.

குன்வர் மாகாணத்தைச் சேர்ந்த அசாதாபாத் நகரத்து மக்கள் தாலிபன்களின் கொடியை ஏந்திக் கொண்டு சாலைகளில் நடப்பது போன்ற காட்சிகள், சரிபார்க்கப்படாத காணொளி ஒன்றில் இடம்பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஆப்கானிஸ்தானில் இருக்கும் பாதிக்கும் மேற்பட்ட மாகாண தலைநகரங்கள் தாலிபன்கள் வசம் உள்ளன. முக்கிய நகரங்களை எடுத்துக் கொண்டால் காபூல் மற்றும் ஜலாலாபாத் மட்டுமே இப்போதும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.

தாலிபன் கமாண்டர்கள், ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளில் திருமணமாகாத பெண்களை தங்களின் போராளிகளுக்கு திருமணம் செய்து கொடுக்கும் படி கோருவதாக சில செய்திகள் வெளியாகி உள்ளன.

"தாலிபன்கள் என்னை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்துவதற்கு பதிலாக, என் உயிரை விட்டுவிடுவேன்" என தன் இரு சகோதரிகளோடு பர்வான் நகரத்தை விட்டு வெளியேறி தற்போது காபூல் நகரத்தில் இருக்கும் 35 வயதான முஸ்டா என்கிற பெண் கூறியுள்ளார்.