1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 28 மார்ச் 2024 (22:48 IST)

ஆடு ஜீவிதம் விமர்சனம்: மிரள வைத்த பிரித்விராஜ் நடிப்பு - படம் எப்படி இருக்கிறது?

மலையாளத் திரைப்படங்கள் இந்திய சினிமா ரசிகர்களிடையே இந்த ஆண்டின் தொடக்கம் முதலே தனிக் கவனம் பெற்று வருகின்றன. பிரமயுகம், மஞ்ஞும்மல் பாய்ஸ், அன்வெஷிப்பின் கண்டேதும், பிரேமலு போன்ற மலையாள திரைப்படங்களைத் தொடர்ந்து இன்று தமிழகத்தில் வெளியாகியுள்ளது ‘ஆடு ஜீவிதம்’ திரைப்படம்.
 
மலையாள இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படம், மலையாள எழுத்தாளர் பென்யாமின் (பென்னி டேனியல்) எழுதிய 'ஆடு ஜீவிதம்' என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
 
பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகியுள்ள ‘ஆடு ஜீவிதம்’ அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துள்ளதா? தொடர்ந்து மலையாளத் திரைப்படங்களைக் கொண்டாடி வரும் தமிழ் ரசிகர்கள் இப்படத்தையும் வெற்றிப் படமாக மாற்றுவார்களா?
 
ஆடு ஜீவிதம் படத்தின் கதை என்ன?
கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த நஜீப் முகம்மது. வெளிநாடு சென்று வேலை பார்த்தால், தனது குடும்பத்தின் கஷ்டங்கள் தீரும் என நம்பி சௌதி அரேபியாவிற்கு செல்லும் இவருக்கு பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் வேலை வழங்கப்படுகிறது.
 
உணவு, நீர், ஓய்வு இல்லாமல் பல்வேறு கொடுமைகளுக்கு இடையே பாலைவனத்தில் துன்புறும் இவர் எவ்வாறு தப்பித்து தாயகம் திரும்பினார் என்பதே ‘ஆடு ஜீவிதம்’ நாவலின் கதை.
 
 
நஜீப் முகமது (பிரித்விராஜ் சுகுமாரன்) மற்றும் ஹக்கீம் (கே.ஆர். கோகுல்) ஆகியோர் தங்கள் பாஸ்போர்ட் மற்றும் விசாக்களுடன் கேரளாவில் இருந்து சௌதி அரேபியா வருகிறார்கள். அவர்கள் தங்கள் முதலாளிக்காகக் காத்திருக்கும்போது, ​​கஃபீல் (தாலிப் அல் பலுஷி) என்பவர் அவர்களின் பாஸ்போர்ட்டை எடுத்து வைத்துக்கொண்டு, பாலைவனப் பகுதிகளில் உள்ள வெவ்வேறு பண்ணைகளுக்கு வேலைக்காக அனுப்பி வைக்கிறார்.
 
அவர்கள் 3 ஆண்டுகள் அடிமையாக வாழ நிர்பந்திக்கப்படுகிறார்கள். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, நஜீப்பும் ஹக்கீமும் மீண்டும் இணைகிறார்கள். ஒரு ஆப்பிரிக்க அடிமையான இப்ராஹிம் கான் (ஜிம்மி ஜீன்-லூயிஸ்) அவர்கள் தப்பிக்க உதவுகிறார். அவர்களால் அங்கிருந்து தப்பிக்க முடிந்ததா என்பதே ஆடு ஜீவிதம் திரைப்படத்தின் கதை.
 
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சுனில் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு- ஸ்ரீகர் பிரசாத் மற்றும் ஒலிக்கலவைப் பணியை ரசூல் பூக்குட்டி செய்துள்ளார்.
 
பிரபலங்களின் பாராட்டுகள்
'ஆடு ஜீவிதம்' படத்தின் பிரீமியர் ஷோவை இயக்குநர் மணிரத்னமுடன் இணைந்து பார்த்த நடிகர் கமல்ஹாசன், “இயக்குநர் பிளெஸ்ஸிக்கு நன்றி. மாற்று சினிமா எடுக்க வேண்டும் என்ற பிளெஸ்ஸியின் தாகம் அவரின் இயக்கத்திலே தெரிகிறது. மணிரத்னம் இப்படத்தைப் பார்த்து வியந்துவிட்டார்.
 
படத்தின் மிகப்பெரிய பலம் பிரித்விராஜ். அவர் இந்தளவுக்கு நடிப்பார் என நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. இந்தப் படத்துக்கு ரசிகர்கள் ஆதரவளிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
 
 
நடிகர் சூர்யாவும் ‘ஆடு ஜீவிதம்’ திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார். தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில், "பாலைவனத்தில் உயிர் பிழைக்கப் போராடும் ஒருவரின் கதையைச் சொல்ல 14 ஆண்டு கால கடும் உழைப்பு தேவைப்பட்டுள்ளது.
 
இத்தகைய கதையைப் படமாகச் சொல்வதற்கான வாய்ப்பு வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும். இயக்குநர் பிளெஸ்ஸி, பிரித்விராஜ், ஏ.ஆர். ரஹ்மான் சார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்," எனப் பதிவிட்டுள்ளார்.
 
'ஆடு ஜீவிதம்' படத்தில் சூர்யாவை நடிக்க வைக்கத் தாம் முயற்சி செய்ததாக இயக்குநர் பிளெஸ்ஸி முன்னர் ஒரு பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
ஆடு ஜீவிதம் திரைப்படம் எதிர்பார்த்த திசையில்தான் செல்கிறது எனவும், தனுஷ் நடித்த தமிழ் திரைப்படமான மரியானை சில இடங்களில் ஞாபகப்படுத்துகிறது எனவும், மெதுவாக நகரும் திரைக்கதைகளை ரசிப்பவர்களுக்கு இப்படம் பிடிக்கும் எனவும் ‘இந்தியா டுடே’ நாளிதழின் விமர்சனம் குறிப்பிடுகிறது.
 
"ஆடுஜீவிதம் படத்தின் முக்கியத் தூண்களில் பிரித்விராஜ் ஒருவர் என்றால், படத்தைத் தாங்கி நிற்கும் மற்றொரு தூண் ஏ.ஆர்.ரஹ்மான். அவரது பின்னணி இசையும் பாடல்களும் உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.
 
படத்தொகுப்புப் பணியில் ஸ்ரீகர் பிரசாத்தின் பணி தனித்துத் தெரிகிறது. கேரளா மற்றும் சௌதி அரேபியாவில் நஜீப்பின் இரண்டு வாழ்க்கையையும் அவர் இணைத்த விதம் சிறப்பாக இருந்தது," எனத் தனது விமர்சனத்தில் இந்தியா டுடே கூறியுள்ளது.
 
"உச்சகட்ட உணர்ச்சிகரமான காட்சிகளைக் கொண்டு திரைக்கதை அமைப்பதில் வல்லவர் இயக்குநர் பிளெஸ்ஸி, அதையேதான் இந்தப் படத்திலும் செய்துள்ளார்," எனத் தனது ‘ஆடு ஜீவிதம்’ திரைப்பட விமர்சனத்தில் கூறியுள்ளது தி இந்து நாளிதழ்.
 
“உண்மையில் மனதைத் தொடும் பல காட்சிகள் உள்ளன. ஆனால் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாத காட்சிகளும் அதிகம் உள்ளன. அவற்றைத் திரையில் கொண்டு வர படக்குழு அதிக முயற்சி எடுத்திருந்தாலும்கூட, அந்தக் காட்சிகளின் தாக்கம் குறைவாக உள்ளது. மீண்டும் மீண்டும் வரும் ஒரே மாதிரியான காட்சிகள் ஒருவித சலிப்பை ஏற்படுத்துகின்றன,” என அந்த விமர்சனத்தில் கூறப்பட்டுளளது.
 
“சுட்டெரிக்கும் பாலைவனம், மணல் புயல், போன்றவை அட்டகாசமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நம்ப முடியாத துன்பங்களைச் சந்தித்த ஒரு கதாபாத்திரத்தின் வலியை திரையில் கொண்டு வருவதில் நடிகர் பிரித்விராஜ் வெற்றி பெற்றுள்ளார். உடலிலும் நடிப்பிலும் மாற்றங்களைக் கொண்டு வந்து, திரையில் தனித்துத் தெரிகிறார். அவரது திரைவாழ்வின் சிறந்த நடிப்பு எனக் கூறலாம்,” நடிகர் பிரித்விராஜை பாராட்டியுள்ளது தி இந்து நாளிதழ்.
 
இந்தியா டுடே நாளிதழும் நடிகர் பிரித்விராஜின் நடிப்பைப் பாராட்டியுள்ளது, “ஆடு ஜீவிதம் படத்தின் ஆன்மாவே பிரித்விராஜின் நடிப்புதான். படத்தில் குறைவான வசனங்களே என்பதால், அவரது உடல்மொழியும் நடிப்பும் பெரும் பங்காற்றுகின்றன.
 
அவரது கண்களில் தெரியும் ஏக்கம், நம்பிக்கையின் கீற்று, இளைத்த உடல், அந்தக் கதாபாத்திரம் படும் எல்லா துன்பங்களையும் நம்மால் உணர முடிகிறது. பல வருடங்கள் கழித்து அவர் குளிக்கும் காட்சியில், அவரது நடிப்பைப் பார்த்து நாம் கண்டிப்பாக உணர்ச்சிவசப்படுவோம்,” என்று கூறியுள்ளது இந்தியா டுடே.
 
“மலையாளத் திரைப்படங்களுக்கு அரிதாகவே இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், கதைக்குத் தேவையான இசையைக் கொடுத்துள்ளார். அமலா பால், சிறிது நேரமே திரையில் வருவதால் அவரது கதாபாத்திரம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
 
கடின உழைப்பு மட்டுமே ஒரு நல்ல படத்துக்கான தகுதி என்றால், ஆடு ஜீவிதம் மிகச் சிறந்த படமாக இருக்கும். ஆனால், திரைக்கதையிலும் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்,” எனக் கூறுகிறது ‘தி இந்து’ நாளிதழின் விமர்சனம்.
 
 
“நாவலில் இருந்த வலியை திரைப்படம் முழுதாகக் கடத்தவில்லை. நாவலில் இடம்பெற்ற சில முக்கியக் காட்சிகளும் திரைப்படத்தில் இல்லை,” என தினமணி நாளிதழின் விமர்சனத்தில் கூறப்பட்டுள்ளது.
 
“திரைப்படத்தின் முக்கிய நபராகப் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளார் பிரித்விராஜ். ஒரு நாவல், ஒரு சினிமா என்பதைத் தாண்டி ஒரு நடிகனுக்குள் இருக்க வேண்டிய ‘தீ’ என்ன என்பதற்கு பிரித்விராஜின் நடிப்பு சிறந்த உதாரணம்.
 
"சினிமாவின் மீது காதல் இல்லாத எவராலும் இந்தக் கதாபாத்திரத்தின் அருகேகூட சென்றிருக்க முடியாது. தேசிய விருதுக்குத் தகுதியான நடிப்பு," என்று தினமணி நாளிதழ் அவரைப் பாராட்டியுள்ளது.
 
திரைப்படத்தை சர்வதேச தரத்திற்குக் கொண்டு செல்ல ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளர் சுனில், ரசூல் பூக்குட்டி என அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.
 
"நாம் வாழாத வாழ்க்கையெல்லாம் கற்பனைதான், ஆனால் உண்மை கற்பனைக்கும் அப்பாற்பட்டது அல்லவா, அதை இந்த ஆடு ஜீவிதம் உணர்த்துகிறது” எனத் தனது விமர்சனத்தில் தினமணி கூறியுள்ளது.
 
இன்று வெளியாகியுள்ள ‘ஆடு ஜீவிதம்’ படத்தில் நடிகர் பிரித்விராஜின் நடிப்பை பலரும் பாராட்டி வரும் நிலையில், அவரது மனைவி சுப்ரியா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
“இந்த 16 வருட பயணத்தை என்னவென்று சொல்வது? 2006 முதல் பிரித்விராஜை எனக்குத் தெரியும். 2011இல் நான் அவரை திருமணம் செய்துகொண்டேன். நான் அவரை பல படங்களில் பணியாற்றுவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால், இதுவரை இப்படிபட்ட நிலையில் பார்த்ததில்லை.
 
உடல் எடையை குறைக்க கடுமையான தொடர் விரதத்தில் நீங்கள் இருந்ததை நான் பார்த்திருக்கிறேன். அப்போது மிகவும் சோர்வாக இருப்பீர்கள். கொரோனா காலத்தில் ஒட்டுமொத்த உலகமும் சேர்ந்திருந்த போது, நாம் பிரிந்திருந்தோம்.
 
போதிய இணைய சேவை கிடைக்காமல் பாலைவன முகாமில் இருந்து நீங்கள் பேசிய அந்த சில நொடிகள் பொக்கிஷமானவை. இந்த ஒரு திரைப்படத்துக்காக பல வேற்று மொழி பட வாய்ப்புகளை நீங்கள் தவறவிட்டதை நான் அறிவேன். இவ்வளவுக்கு மத்தியிலும் கலைக்காக நீங்கள் செய்த பணி என்றும் உங்களுக்காக துணை நிற்கும்.
 
ஒரு மனிதனின் வாழ்க்கையைத் திரையில் காட்ட இயக்குநர் பிளெஸ்ஸியுடன் மொத்த படக்குழுவும் உடல், மனம் என அனைத்தையும் அர்பணித்துள்ளீர்கள். உங்களது உழைப்புக்கு பலன் கிடைக்கும். ஒன்று மட்டுமே சொல்லுவேன், உங்களுடைய அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே கிடையாது. எனக்கு நீங்கள் எப்போதும் ஒரு ‘கோட்’ (GOAT- ஆகச்சிறந்தவன்) தான்” என்று பதிவிட்டுள்ளார்.