1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (12:40 IST)

சிரியாவில் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்ய அனுமதித்தது ரஷ்யா

கடந்த புதன்கிழமையன்று சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இடத்தை ரசாயன ஆயுத ஆய்வாளர்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என ரஷ்யா கூறியுள்ளது.
 
சர்வதேச குழு, சனிக்கிழமை முதல் சிரியாவில் இருந்தாலும், டூமா பகுதியை பார்வையிட அனுமதிக்கப்படவில்லை. அங்கு ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறி, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் சிரியா மீது கூட்டு தாக்குதல் நடத்தியது.
 
சிரியாவில் ரசாயன தாக்குதல் நடக்கவில்லை என சிரியாவும், அதன் கூட்டாளியுமான ரஷ்யாவும் கூறியுள்ளது. ரசாயன ஆயுதங்களைத் தடை செய்வதற்கான அமைப்பின் ஆய்வாளர்கள், தங்களது ஆய்வுகளை தொடங்குவதற்காக காத்திருக்கின்றனர்.
 
புதன்கிழமையன்று, தாக்குதல் நடந்த இடத்திற்கு ஆய்வாளர்கள் சென்று ரசாயன ஆயுதம் பயன்படுத்தப்பட்டதா என்பதை கண்டுபிடிக்க மண் மற்றும் பிற பொருட்களின் மாதிரிகளைச் சேகரிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில்,ஹோம்ஸ் நகரத்தில் மேற்கு பகுதியில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலுக்கு, சிரிய வான் பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்ததாக, செவ்வாய்க்கிழமையன்று சிரிய அரசு ஊடகம் கூறியுள்ளது.
 
இந்த ஏவுகணையை யார் ஏவியது என்பது தெரிவிக்கப்படவில்லை.
 
''அந்த நேரத்தில் அப்பகுதியில், எந்த ராணுவ நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை'' என அமெரிக்கா கூறியுள்ளது.