1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (10:09 IST)

நேரலை கொரோனா வைரசால் அமெரிக்காவில் 20,000 பேர் உயிரிழப்பு; ஆபத்தில் பொருளாதாரம்

கொரோனா வைரஸ் தொற்றால் உலகிலேயே இதுவரை அமெரிக்காவில்தான் அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு 20,000க்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகி இருப்பதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் கூறுகின்றன.

கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் அமெரிக்காவில்தான் அதிகம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அங்கு 20,000க்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகி இருப்பதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் கூறுகின்றன.

இரண்டு நாட்களுக்கு முன்னர்தான், எங்கும் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் அங்கு 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

எனினும், இறப்பவர்களின் எண்ணிக்கை சற்று நிலையாகி வருவதாக நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ க்யூமோ தெரிவித்தார்.

நியூயார்க்கில் கடந்த 24 மணி நேரத்தில் 783 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த சில தினங்களாக கிட்டத்தட்ட இதே எண்ணிக்கை தொடர்ந்து நீடிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் இதுவரை 5,20,000 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தொற்றின் மையமாக விளங்கும் நியூயார்க்கில் 1,80,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதும் இதில் அடங்கும்.

அமெரிக்காவில் உள்ள அனைத்து மாநிலங்களும் இத்தொற்றை பேரழிவாக அறிவித்துள்ளன.

எனினும், இத்தொற்றால் புதிதாக பாதிக்கப்படுபவர்கள் மற்றும் மரணங்கள் சற்று குறைந்து வருவதாக தெரிவித்த அமெரிக்காவின் தொற்று நோயியல் தலைவர் அந்தோனி ஃபாசி, இதனால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாது என்று தெரிவித்தார்.

ஏப்ரல் 30ஆம் தேதி வரை சமூக விலகல் மற்றும் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களில் 1.6 கோடி அமெரிக்கர்கள் வேலையிழந்துள்ளதோடு, கொரோனா வைரசால் அமெரிக்க பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.