வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Abimukatheesh
Last Modified: ஞாயிறு, 4 செப்டம்பர் 2016 (21:12 IST)

ஜிகா வைரஸ்: 130 கோடி இந்தியர்கள் உட்பட 200 கோடிபேர் ஆபத்தில்

உலக அளவில் ஜிகா வைரஸ் தொற்று ஏற்படக்கூடிய பிராந்தியங்களில் இருநூறு கோடிக்கும் அதிகமானவர்கள் வாழ்வதாக இது குறித்த புதிய ஆய்வின் முடிவு எச்சரிக்கிறது.


 

 
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட ஆசிய நாடுகளும் ஆப்ரிக்க நாடுகளும் அதிகபட்ச ஆபத்தை எதிர்நோக்குவதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஜிகாவின் பெருந்தொற்றை தடுப்பதும், கண்டறிவதும், எதிர்கொள்வதும் கடினமானதாக இருக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
 
ஜிகா, ஏற்கனவே உலக சுகாதார நெருக்கடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், ஒலிம்பிக் போட்டிகளையே அது நிறுத்திவிடும் அச்சுறுத்தல் நிலவியது.
 
ஆனாலும் இதனால் எத்தனை பேர் பாதிக்கப்படுவார்கள், அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை விஞ்ஞானிகளால் இன்னமும் அடையாளப்படுத்த முடியவில்லை. அதை கண்டறிந்தால் தான், அந்நோய் பரவலை எதிர்கொள்ளத் தயாராக முடியும்.
 
பல குழந்தைகள் மூளை வளர்ச்சிக்குறைபாடுடன் பிறந்ததற்கு ஜிகா தொற்றே காரணமாக காட்டப்படுகிறது. இதுவரை இதன் பிரதான தாக்கம் பிரேஸிலில் மட்டுமே இருந்தது. ஆனால் சமீபத்தில் ஐம்பதுக்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இது பரவியுள்ளது.
 
இந்த வாரம் சிங்கப்பூரில் டசன் கணக்கானவர்களுக்கு ஜிகா தொற்று ஏற்பட்டிருப்பதைத்தொடர்ந்து அதன் பரவலைத்தடுக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் மீண்டும் எழுந்துள்ளன. ஜிகா பரவல் தொடர்பான இந்த புதிய ஆய்வின் கணிப்புகள் பின்வரும் காரணிகளின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது.
 
ஜிகா பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயணித்தவர்களின் எண்ணிக்கை; ஜிகா வைரஸை பரப்பக்கூடிய கொசுக்கள் இந்த நாடுகளில் ஏற்கனவே இருப்பது; ஜிகா தொற்றை எதிர்கொள்ளத் தேவைப்படும் சுகாதார கட்டமைப்பு வசதிகள். ஜிகா வைரஸால் உருவாகக்கூடிய சுகாதார ஆபத்தின் முழு அளவு இன்னமும் வெளியாகவில்லை.
 
ஆனால் இந்த ஆய்வின் செய்தி தெளிவானது. பிரேஸிலில் நடந்ததைப்போல் ஜிகா பெருந்தொற்றாக பரவும் ஆபத்து நீடிக்கிறது என்பது மட்டும் இப்போதைக்கு மீண்டும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.