இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்குக்கூட கொரோனா தொற்று ஏற்பட்டு, அவர்களுடன் இருப்பவர்களுக்கு பரவுவதாக பிரிட்டன் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் எப்படி கொரோனாவை பரப்புகிறார்களோ, அதே போல இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களும் பரப்புகிறார்கள். அவர்களுக்கு எந்தவித கொரோனா அறிகுறிகளும் இல்லை என்றாலும் அல்லது குறைவான கொரோனா அறிகுறிகள் இருந்தாலும், அவர்களுடன் வீட்டில் இருப்பவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களாக இருந்தால், அவர்களில் ஐந்தில் இரு பகுதியினருக்கு அல்லது 38 சதவீதத்தினருக்கு வைரஸை பரப்புகிறார்கள்.
ஒருவேளை வீட்டில் உள்ள அனைவரும் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களாக இருந்தால், இந்த எண்ணிக்கை நான்கில் ஒரு பங்காக அல்லது 25 சதவீதமாக குறைகிறது. ஏன் நிறைய மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும், பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியமென 'தி லேன்செட்' என்கிற மருத்துவ சஞ்சிகை தன் கட்டுரையில் கூறியுள்ளது.
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், தங்களைச் சுற்றியுள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்கள் என்பதாலேயே அவர்கள் தொற்றை பரப்பமாட்டார்கள் என்று நம்ப முடியாது என அந்தக் கட்டுரை எச்சரிக்கிறது. கொரோனா தடுப்பூசிகள் கொரோனா தொற்றின் தீவிரத்தன்மை மற்றும் மரணங்களைத் வெகு சிறப்பாக தவிர்த்துள்ளன. ஆனால் கொரோனா நோய் பரவலைத் தடுப்பதில், குறிப்பாக அதிகம் பரவக் கூடிய கொரோனாவின் டெல்டா திரிபுக்குப் பிறகு அத்தனை சிறப்பாக செயல்படவில்லை.
மேலும் காலப் போக்கில் கொரோனா தடுப்பூசிகளால் கிடைக்கும் பதுகாப்பும் குறைகிறது, புதிய பூஸ்டர் டோஸ்கள் தேவைப்படுகின்றன. வீட்டில் குடும்பங்கள் வழியாகத்தான் பெரும்பாலும் கொரோனா தொற்று பரவுகிறது. எனவே, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியான, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சரியாக தடுப்பூசி செலுத்திக் கொள்வது அர்த்தமுள்ளதாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
செப்டம்பர் 2020 முதல் செப்டம்பர் 2021 வரை ஆய்வு நடத்தப்பட்டது. அதில் லண்டன் மற்றும் போல்டன் பகுதியில் உள்ள 440 குடும்பங்களும் சேர்க்கப்பட்டு பி சி ஆர் கொரோனா பரிசோதனை செய்தபோது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களோடு ஒப்பிடும் போது, இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு டெல்டா திரிபு கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைவு என்றாலும், குறிப்பிடும் வகையில் உள்ளது. அது வெறுமனே ஒருதொற்று போலத்தான் தெரிகிறது.
தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், தொற்றிலிருந்து விரைவாக குணமடைகிறார்கள், ஆனால் அவர்களின் வைரல் லோட், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு இணையாகவே உள்ளது. எனவே, தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் கூட, வீட்டில் உள்ளவர்களுக்கு கொரோனாவை பரப்ப முடியும் என்பதை இது விளக்குகிறது.
"தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களால் கொரோனா பரவுவதைக் காணும் போது, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், தடுப்பூசி செலுத்திக் கொண்டு தங்களைத் தாங்களே தொற்றிலிருந்தும், நோயின் தீவிரத்தன்மையிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக குளிர் காலத்தில் பலரும் வீட்டுக்குள் நிறைய நேரத்தை நெருக்கமாக செலவழிக்க இருக்கும் போது இது அவசியமாகிறது" என ஆய்வை இணைந்து தலைமை தாங்கி நடத்திய லண்டனின் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் அஜீத் லால்வானி கூறுகிறார்.
"தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்திக் கொண்ட சில மாதங்களுக்குப் பிறகு, கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகரித்திருப்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். எனவே பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்கள் முறையாக செலுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.
இந்த ஆய்வை இணைந்து நடத்திய இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த அனிகா சிங்கநாயகம் "புதிய கொரோனா திரிபுகளை எதிர்கொண்டு வரும் இந்த நேரத்தில் எங்கள் கண்டுபிடிப்புகள் தடுப்பூசியின் தாக்கம் குறித்த முக்கிய விவரங்களை வழங்குகிறது, அதிகம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நாடுகளில்கூட, குறிப்பாக உலக அளவில் ஏன் டெல்டா திரிபால் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்கிற விவரங்களை வழங்குகிறது.
தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் கூட, கொரோனா பரவலைத் தடுக்க முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, பரிசோதனைகளை மேற்கொள்வது போன்ற பொது சுகாதார மற்றும் சமூக நடவடிக்கைகளை கடைபிடிப்பது தொடர்ந்து அவசியமாகிறது" என அவர் கூறினார்.